என் சுவாசம் போல நெருக்கமாய் இருந்த நண்பர்கள் எல்லாம் முகர்ந்து எறிந்துவிட்டனர். நம்பிக்கையற்ற நேரங்களில் கூட அவர்கள் என் மதிப்பை தாக்கி தரக்குறைவாக எடை போட்டார்கள். தனிமை விசும்பலில் இனி அந்த துரோகிகளின் நிழல் கூட படியவிடமாட்டேன் என்று நினைத்தேன். நான் விதைத்த விதைகளை மட்டும் எந்த மண்ணும் இறுக பற்றிக் கொள்ள வில்லையே என ஏங்கினேன். கடின பாறையும், கருவேல முட்களும் என்னை சிதைக்க முகவரி அற்றுப் போனேன். ஏமாற்றமோ, வலியோ எனக்கு புதிதல்ல. வெட்ட வெளியின் இருட்டு அமைதியில் அன்புக்காக ஏங்கிய நேரங்கள் உண்டு. மனதில் ஓங்காரமிடும் நினைவலை களாகிய மிருகத்தை வேட்டையாட இயலாமல் என்னையே காவு கொடுக்க நினைத்த தருணங்களும் உண்டு. ஆழ்மன எண்ணங்கள் மிதந்து நடுமனதினில் கோரத்தாண்டவம் ஆடியது.
இருப்பினும் என் மீது ரோஜாக்களும் விழுந்தது உணடு. வாழ்விற்கு இனிமையூட்டும் அந்த இரசத்தை பருக விரும்பினேன். என்னை தேடும் இறைவனை தேடலாமா? என்ற பசுமையான கனவுகள் என்னில் மிதக்க ஆரம்பித்தன. செபத்தில் இணைந்த கரங்கள் உலகத்தை தாங்கும் கரங்கள் என்று எண்ண தொடர்ந்து செபிக்கும் அளவிற்கு எனக்குள் நம்பிக்கை காற்று வீசச் செய்தது.
இறைவன் மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார். அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நன்மைகளை செய்வார் (உரோ 10:11-12)என்ற இறைவார்த்தையை சிந்தித்தேன்.
வாழ்வில் என்ன இருக்கிறது? என்று சலித்துக் கொண்டாலும் புறங்கையால் அந்த எண்ணத்தை தள்ளிவிட்டு என் மனம் சொல்லிற்று அட வாழ்வதற்குத் தான் எவ்வளவோ இருக்கிறது. எனவே எழுந்து இறைவன் அருளோடு பறக்கும் தட்டினில் விண்வெளியில் பறந்தேன். பல நாள் பயணத்திற்குப் பின் நம்பிக்கை என்ற கோலில் காலூன்றி வாழ்க்கை என்னும் படகை செலுத்தினேன்.
Sr. Theresita FSM
0 comments:
Post a Comment