கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தன்னுடைய வயது எத்தனை என்றுகூட சரியாகச் சொல்லத் தெரியாத நம் தாத்தா, பாட்டி, முன்னோர்கள் வாழ்ந்து வந்த காலம் சற்றே மாறி, “என் பிள்ளை இந்த மாதத்தில்தான் பிறந்தது” என்று தமிழ் மாதத்தின் ஒரு நாளைக் குறிப்பிட்டுச் சொல்லி, அதன்பின் ஆங்கில மாதத் தேதியைக் கண்டுபிடிக்கும் நிலை வந்தது. இந்த நிலை இன்றும் பல இடங்களில் தொடர்ந்தாலும், இன்றைய கலாச்சார மாற்றத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம் வெகு சிறப்பாய், ஏன், சில ‘பெரியவர்களுக்கு’, வாரக்கணக்கில்கூட பல்வேறு நிகழ்வுகள் மூலமாய்க் கொண்டாடப்படுகிற நிகழ்வாய் மாறிப்போனது பெரும் மாற்றமே. சிறு நகர்களில்கூட பள்ளிப் பருவத்தை எட்டியுள்ள நம் பிள்ளைகள் தமது நண்பர்கள் குழாமையே ஒன்றாகத் தம் வீட்டிற்கு வரவழைத்து அல்லது இனிப்புகளையாவது தம் வகுப்புக்கு எடுத்து வந்து தோழர்களோடு பகிர்ந்துகொண்டு பிறந்த நாள் கொண்டாடும் முன்னேற்றம் காண முடிகிறது.

‘பிறப்பு’  ஒரு பெரும் கொடையே. ஓர் புதிய உயிர் தோன்றியுள்ளதால் இரு பெரும் உயிர்கள் அளவில்லா மகிழ்ச்சியில் திளைக்க, அவர்களோடு தொடர்புள்ள அனைவரும்தான் பூரித்துப்போகின்றனர். இப்பிறப்பு ஏனோதானோ என்று தற்செயலாக நடைபெறும் ஒன்று அல்ல. மாறாக, பிறந்தவர்க்கு வாழ்நாள் முழுவதும் பொருளுள்ள வாழ்வு அமைய வேண்டும் என்பதே கடவுளின் கொடையும் மனித விருப்பமும்.

பின் ஏன் இன்று பிறந்தவர்களில் சிலர் ‘ஏன்தான் பிறந்தேனோ?’ ‘ஏன் வாழனும், இவ்வுலகிலிருந்து போய்ச் சேர்ந்து விட்டால் நல்லதுதானே?’ என்று நினைக்கின்றனர்? இத்தகைய எண்ண உருவாக்கத்திற்கும், மனித மகிழ்வில்லாத சூழலுக்கும் ‘நானா’ அல்லது ‘பிறர்’ காரணமா? ‘நான்’தான் என யாரும் ஏற்றுக்கொள்வதற்கு முன்னதாக, ‘பிறர்’தான் காரணம் என்று பல்வேறு வாதங்களை முன்னெடுப்பது இயற்கை.

  • ‘என் நண்பர்கள் என்னை ஏமாற்றி னார்கள்’
  • ‘இக்கலாச்சாரத்திற்கு ஈடு கொடுத்து வாழும் அளவிற்குப் பொருளாதாரம்             என்னிடம் இல்லை’ 
  • ‘நான் இருப்பது போல பிறர் என்னை ஏற்றுக்கொள்ளாமல் என்னைத்           தண்டித்தார்கள்’ 
  • ‘என் வேலையில் / படிப்பில் தோல்வி’ 
  • ‘என் எதிர்கால வாழ்வு பற்றிய என் கனவு கருகிவிட்டது’ 
  • ‘என் குடும்ப உறவே எனக்குச் சலித்துப் போயிற்று’ 
  • ‘பல தீமைகளுக்கு என்னைப் பலர் ஈடுபடுத்தினர்’ 
இப்படி பல பல காரணங்கள்.

இயேசுவின் பிறப்பு . . .
பிறந்தது ‘மெசியா’தான் என்று பலரும் புரியாத, ஏற்க முடியாத நிலையில், மாட்டுத் தொழுவத்தில் பிறந்து, ஏழை களுக்கு மட்டுமே நற்செய்தியாக இப்பிறப்பு அறிவிக்கப் பட்டது. பிறர் ஏற்றுக் கொண்டால் தான் தன் பிறப்பிற்குப் பொருளுள்ளது என்று நினைக்காத இயேசு, ‘எதற்காக என் பிறப்பு’ என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, தன் பிறப்புக்குப் பொருள் தரும் வாழ்வையே வாழ்ந்தார். அவருடைய சமூகம் அவரை ஏற்கவில்லைதான்... பைத்தியக்காரன், பேய் பிடித்தவன் என்று தன் சொந்தத்தாலேயே பெயரிடப்பட்டவர் தான்... சட்டத்தைப் புறக்கணித்தவன் என்று சொந்த மதத்தால் தீர்ப்பிடப்பட்டவர்தான். ‘சமூகத்தால்’ ‘பிறரால்’  ஏற்கப்படாத நான் வாழ்ந்து என்ன பயன்? யாருக்காக வந்தேனோ அவர்களே எதிராகிப் போயினர். நான் ஏன் பிறந்தேன்? என்றவர் அல்லர் இவர். தம் பிறப்புக்குப் பொருள் தந்தார். இளம் வயதிலேயே பொருள் கொண்டவர். 33 ஆண்டுகளிலேயே பிறப்புக்கு முழுமை தந்தவர் - அதனால் தான் அவரின் பிறப்பு விழாவை 2010லும் உலகம் நினைத்துக் கொண்டாடுகிறது.

‘உன் பிறப்பு கடவுளின் கொடை’ என்றால் பிறப்புக்கு ஒரு பொருள் உண்டு தானே! போராடி உன் பிறப்புக்குப் பொருள் தர மறுத்து பிறரால்தான் என் பிறப்பு பொருளில்லாமல் போனது என நினைப்பவர்கள் இக்கிறிஸ்து பிறப்பு விழாவின் செய்தி ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பிறப்புக்குப் பொருள் தரும்படி வாழ்வை உன் கையில் எடு. சமூகம் தரும் சவாலைச் சந்தித்து பிறருக்கான பொருளுள்ள வாழ்வை முன்னிலைப்படுத்து. ஒருவேளை, உன் வாழ்வில் நல்லது செய்து, அதனால் துன்பம் சந்தித்தால் உன் பிறப்பு முழுமை பெறுகிறது என்பதே நிறைவான பிறப்பு விழா. 
“பிறப்பு தரித்திரமானாலும்
  இறப்பு சரித்திரமாகட்டும்” 
பிறப்பு விழா சிறக்கட்டும்!


சே. சகாய ஜாண்

0 comments:

Post a Comment