தேவ அழைத்தல்

(27.11.2010 அன்று நடைபெற்ற மாநில தேவ அழைத்தல் பணிக்குழுவின் பொதுக்குழு கூட்டத்தில் பகிர்ந்து கொண்ட ஒரு குடும்பத்தலைவரின் கருத்து).
யாரும் எவரும், எப்போதும் எவரையும் உருவாக்க முடியாது/ கூடாது. மாறாக உருவாவதற்கான சூழலைத் தான் ஏற்படுத்த முடியும் / வேண்டும் என்பதே உண்மை. சூழல் தான் ஒருவனை உருவாக்குகிறது என்பதால் இல்லறத்தாரும் (பெற்றோரும்) துறவறத்தாரும் இணைந்து ஏற்படுத்தும் சூழலைப் பொறுத்தே ஒருவன் அல்லது ஒருத்தி இறைவனுக்குரியவனா(ளா)க வளரவும் இறை அழைத்தலைப் பெற்று வாழவும் முடியும்.
அந்த வகையில் குடும்பத் தலைவனாக உள்ள நான் எப்படிப்பட்ட குடும்ப சூழலில் எனது குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை முதலில் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
எனது குடும்பத்தில் மூன்று குழந்தைகள். முதல் பையன் பொறியியல் இரண்டாமாண்டு படிக்கிறான். இரண்டாவது குழந்தை பத்தாம் வகுப்பும், மூன்றாவது குழந்தை 5ம் வகுப்பும் படிக்கின்றனர்.
என்னுடன் பிறந்த சகோதரிகள் இருவருமே இன்று அருட்சகோதரிகள். எனது அப்பாவின் தங்கை ஒரு அருட் சகோதரி, எனது சித்தாப்பாவின் பிள்ளைகள் இருவர் அருட்தந்தையர்கள்.
இப்படியாக இறை அழைத்தலை முழுமையாக அனுபவித்த குடும்பம். நான் இதுவரை எந்தவித போதை வஸ்துக்கும் அடிமை இல்லை. “தண்ணீ” அடித்ததில்லை. என் குழந்தைக்கு ஒரு நல்ல முன்மாதிரியான தகப்பனாக இருக்க முடிந்தவரை முயற்சி செய்பவன்.
எந்த நபருக்குமோ அல்லது பணம், பதவி, பட்டம், பகட்டு போன்ற பொருட்களுக்கோ அடிமையாகி விடாது ஓரளவுக்கு ஆளுமையுடன் வாழ விரும்பு கிறவன்.
நாங்கள் அன்றாடும் ஆலயம் செல்பவர்கள் அல்ல. எனினும் ஆண்டவனை மறந்தவர்கள் அல்ல. குடும்ப செபம் சொல்லாமல் படுக்கைக்குச் செல்வதில்லை.
நல்ல படிப்பு, நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என ஒருவித செக்கு மாட்டு வாழ்க்கையை மட்டும் வாழாமல் சமூக அக்கறையுடன் சமூகத்திற்கு உதவும் வகையில் நிறைவாக வாழ முயற்சிக் கனும்ங்கற கருத்தை என் குழந்தை களுக்கு வலியுறுத்தி வருகிறேன்.
இப்படியாக ஒரு நல்ல கத்தோலிக்க கிறித்தவ குடும்பமாக தன்மானத்துடன் நாளும் பொழுதும் வளர வாழ முயற்சி எடுத்து அதற்குண்டான சூழலில் வளர எனது குழந்தைகளுக்கும் வழிகாட்டி வரும் நான் ஒரு முறை கூட எனது குழந்தைகளிடம் நீ துறவறத்திற்குப் போ என்று சொன்னதில்லை.
ஏனென்றால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு ஒரு நல்ல குடும்பத் தலைவனாக இருப்பதற்கு மட்டுமே வழிகாட்டிடும் நான், என் குழந்தைகளை மட்டும் துறவறத்திற்குப் போ என எப்படிச் சொல்வது?
இருப்பினும் அதைப்பற்றிய ஆலோசனையைக் கொடுக்க முயற்சித்த பொழுது என் குழந்தைகள் என்னை ஒரு விதமாய்ப் பார்க்கின்றனர்.
எத்தனையோ குருக்களை, துறவிகளை நாங்கள் சந்தித்திருந்தும் எங்களுக்கு அப்படியயாரு எண்ணத்தை எவருமே தூண்டலையே என்கின்றனர்.
எனவே நல்ல மனிதர்களாய் வாழ சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் என் போன்ற பல குடும்பத் தலைவர்களால் நல்ல குருவாக/துறவியாக மாறிட சூழல் ஏற்படுத்த இயலவில்லை. உங்களால் முடிந்தால் முயற்சியுங்கள் எனத் திறந்த மனதுடன் விண்ணப்பித்து பெற்றோர் களின் பணியாக நாங்கள் இன்னும் செய்ய வேண்டிய பொறுப்புகளையும் பட்டியல் இடுகிறேன்.

  1. இறைவனின் அன்பை எங்களது செயல்பாட்டின் மூலம் எங்களது குழந்தைகள் உணரும் வகையில் இன்னும் நல்ல முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டும்.
  2. எனது வாழ்வு, எனது குழந்தைகள், எனது குடும்பம் என்கிற அளவில் மட்டும் இந்த ‘முன்மாதிரிகள்’ முடங்கிப் போகாது, முறிந்த குடும்பங் களும் (Broken Families) பிறிந்த உறவுகளுமாய் போதை வஸ்துகளில் மூழ்கி; சினிமா, டி.வி. காட்சிகளில் அமுங்கி; பணம், பகட்டே வாழ்க்கையயன அடிமைப்பட்டுக் கிடக்கும் அடுத்தடுத்த குடும்பங்களுக்குகுள்ளும் ஊடுருவிச் சென்று குணப்படுத்திட வேண்டும். 
  3. குடும்பத்தில் தேவ அழைத்தலுக்காக அதிகமாய் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.
  4. நல்ல மனிதர்களை குறிப்பாக நல்ல குருக்களை / துறவிகளை அடையாளம் காட்டி அவர்களுடன் பழகி அனுபவம் பெற்றிட எம் குழந்தைகளுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வழிகாட்டிட வேண்டும்.
  5. நல்ல ம(பு)னிதர்களாய் வாழ்ந்து காண்பித்தவர்களின் வரலாற்று நிகழ்வுகளைச் சொல்லிக் கொடுத்தோ அல்லது வாசிக்கத் தூண்டியோ எம் குழந்தைகளைத் பக்குவப்படுத்த வேண்டும்.
  6. நம் சமூகத்தில் வாழ வழியற்ற ஏழை எளிய மக்களின் வாழ்க்கை நிலையை எம் குழந்தைகள் கிராமம் மற்றும் சேரிகளில் களப்பணி, ஆய்வு போன்றவைகள் மூலம் உணர்ந்து புரிந்திட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் உன்னால் ஆன பங்கு என்ன? என அவர்களைச் சிந்தித்துச் செயல்பட்டிடத் தூண்டிட வேண்டும். 
  7. வெறும் தேவ அழைத்தல் முகாம்கள் மட்டுமல்ல; மாறாக நல்ல மனிதனாய் நல்ல கத்தோலிக்கனாய் வாழத் தூண்டும் - வாழ்வின் நோக்கங் களைப் பெற்றிடத் தூண்டும் முகாம்களில், கருத்தரங்குகளில், நிகழ்வுகளில் ஆர்வமாய் பங்கெடுக்க குழந்தைகளுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
  8. துறவற அல்லது குருத்துவ இல்லங்களில் ஓரிரு வார அல்லது மாத கால அளவிற்கு தங்கி குழந்தைகள் அங்குள்ளவர்களின் வாழ்க்கை நிலையை உணர, அனுபவம் பெற (Exposure) வாய்ப்புகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
இப்படியாக செய்யும் பட்சத்தில் குடும்பங்களில் தேவ அழைத்தல் பெருகும். எதிர்காலத்தில் நல்ல குருக்கள், துறவிகள் மட்டுமல்ல நல்ல மனிதர்கள் உருவாகி மனிதம் தழைக்கும்.
குருக்கள் / துறவிகளின் பங்கு என்ன? (அடுத்த இதழில் தொடரும்)

எஸ். எரோணிமுஸ்,  
“ஊற்றுக்கண்” ஆசிரியர், திருச்சி 

0 comments:

Post a Comment