December 24

திருவருகைக் காலம் வந்து விட்டாலே நமது கோவில்களில் குழந்தை இயேசுவின் வரலாற்றுப் பிறப்பினைக் கொண்டாடத் தயாராகிவிடுகிறோம். கிறித்து பிறப்பு விழா என்றாலே பலருக்கும் பலவிதமான கனவுகள், தயாரிப்பு வேலைகள் என நமது மூளையில் சிந்தனைகள் சிறகடித்துவிடும். இந்த ஆண்டு கிறித்து பிறப்பு விழாவினை எப்படி கொண்டாடுவது என்றும், குடிலை எப்படி அலங்காரம் செய்வது என்றும், புத்தாடைகள் எந்தக் கடையில் எந்த விலையில் எடுப்பது என்றும், இனிப்புகள் எப்படி செய்வ தென்றும், வாழ்த்துக்களை எப்படிப் பரிமாறிக்கொள்வதென்றும் (வாழ்த்து அட்டைகள், கைபேசி குறுந்தகவல் உள்பட) சிந்தனைகள் நமது மூளைகளைத் துளைக்கத் தொடங்கிடும். இந்தச் சிந்தனை களெல்லாம் தேர்வு எழுதும் நமது சிறார்களுக்குச் சற்று தாமதமாகத்தான் தோன்றும் என்பதும் தவிர்க்க இயலாதது.
கிறித்து பிறப்பு விழா என்பது நமக் கெல்லாம் அவ்வளவுதானா? வேறு என்னவெல்லாம் இருக்க முடியும்? கிறித்து பிறப்பு விழாவை ஒட்டி புதிதாக ஒலிநாடாக் களைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றில் இருந்து புதிய புதிய பாடக்கூடிய பாடல் களைத் தெரிவு செய்து, பயிற்சி செய்து பாடுவது, பெரிய பெரிய விண்மீன்கள் தொங்கவிடுவது, தாத்தா வேடம் அணிவது, கிறித்து பிறப்பு மரம் அமைப்பது, கிறித்து பிறப்பு மலர் வளையம் (நான்கு நிற வண்ணம் கொண்ட மெழுகுதிரிகள் கொண்ட மலர் வளையம், கிறித்துமஸ் ரீத் என்ற அழைக்கப்படும்) அமைப்பது, திருப்பலியில் பங்கெடுத்து குழந்தை இயேசுவை வணங்கிவிட்டு வருவது எனக் கிறித்து பிறப்பு விழா என்பது இவைகள் மட்டும்தானா? இல்லை, இன்னும் பல உண்டா...?
நல்லதும் தீயதும்
இதில் சில நல்ல உள்ளங்கள் கிறித்து பிறப்பு விழாவினை அர்த்தம் உள்ள வகையில் கொண்டாடுகின்றனர். கிறித்து பிறப்பு விழா கொண்டாட்டத்தில் வழிபாடுகளை அர்த்தம் உள்ள வகையில் அமைக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப கண்டுணர்ந்து கிறித்து பிறப்புக் குடில்களைப் பயனுற அமைக்கிறார்கள். கிறித்து பிறப்பு நாட்களில் வீதிகளில் வாடிடும் ஏழைகளுக்கு, பெற்றோரை இழந்த சிறார்களுக்கு உணவு, உடை போன்றவைகள் கொடுத்து கிறித்து பிறப்பு விழாவினைச் சிறப்பான முறையில் கொண்டாடுகிறார்கள். இவையயல்லாம் பாராட்டக்கூடிய நல்ல செயல்கள். மனதார பாராட்டுவோம்.
ஆனால், சில கிறித்தவர்கள் வெறுமனே வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளுதல், வண்ண விளக்குகள் ஒளிர்வித்தல், விலை உயர்ந்த ஆடைகள் அணிந்து கொள்ளுதல், இயற்கை வாழ்வுக்கு எதிரான பொருள்கள் பயன்படுத்தி குடில்கள் அமைத்தல், இரவு முழுதும் கண்விழித்து கேளிக்கை நடவடிக்கை களில் ஈடுபடுதல் போன்ற அர்த்தமில்லா தவிர்க்கக்கூடிய செயல்களில் ஈடுபடு கின்றனர். இப்படிப்பட்டவர்கள் கிறித்து பிறப்பு விழாவினைக் கொண்டாடுவது பலருக்கு மன வருத்தத்தைத் தருகிறது. எனினும், இவை மட்டும்தான் கிறித்து பிறப்பு விழா கொண்டாட்டங்களா? இல்லை, வேறு ஏதாவது உண்டா? தேடலில் தெளிவு பிறக்கட்டும் எனத் தொடர்ந்து தேடுகின்றபோது இதுபோன்ற வெள்ளி முளைக்கக் கண்டேன்.
மகிழ்வும் வலியும்
காத்திருந்த கண்களுக்குத்தானே களிப்பு உண்டாகும்
எதிர்பார்த்த மனதுக்குத்தானே அகமகிழ்வு உண்டாகும்
ஏங்கித் தவித்த மனிதருக்குத்தானே நற்செய்தி புரியும்
2010 ஆண்டுகளுக்கு முன்பு மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்த வர்களுக்கு அவரின் வருகை பெரு மகிழ்வைக் கொடுத்தது. சாமானியர்கள் காத்திருந்தார்கள், கண்டுகொண்டார்கள்; பெருமகிழ்வு அடைந்தார்கள். ஆனால், மெசியாவின் வருகையைச் சற்று உற்றுக் கவனிக்கின்ற போது, அவரின் வருகை இருவிதமான அதிர்வை ஏற்படுத்தி யிருப்பதை நாம் கண்டுகொள்ள முடியும்.
1. இடையர் போன்ற சாமானியர் களுக்கு இதமான, மகிழ்ச்சியான அதிர்வைத் தந்தது.
2.ஏரோது போன்ற வலியோருக்கு எதிர்ப்பிற்கான அதிர்வைத் தந்தது.
இதோ இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும், எதிர்க்கப்படும் அடையாள மாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும்... (லூக் 2:34-35)
 இவ்வாறு சிமியோன் சொன்னதும் இந்த இரண்டு விதமான அதிர்வினைப் பற்றிக் குறிப்பதாக இருக்கிறது. இந்த இருவிதமான அதிர்வினையும் மனுஉருவாதலின் விளைவாக நான் பார்க்கிறேன்.
பிறப்பின் பயன்
கடவுள் மனிதராகப் பிறத்தல் என்பது (கடவுள் வடிவில் விளங்கிய அவர்... பிலிப்பியர் 2:6-8) பிலிப்பியருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கூறப்பட்ட தாழ்ச்சியோடு மட்டுமல்லாது, பிறப்பின் பயனையும் பற்றி நமக்கு உணர்த்தக் கூடிய ஒன்றாகும். பிறப்பு என்பது வாழ்வின் தொடக்கம். வாழும் வாழ்க்கையில்தான் அந்தப் பிறப்பின் பயன் வெளிப்படும். இயேசுவின் பிறப்பின் போது இருந்த அந்த இருவிதமான அதிர்வு அவருடைய வாழ்விலும் தொடர்ந்தது. இயேசுவினுடைய இறையாட்சிக் கனவு, அப்பா அனுபவம் இவை இரண்டுமே அவருடைய இறப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தன. இயேசுவின் பிறப்பு போலவே அவருடைய இறப்பிலும் இரண்டு விதமான அதிர்வு இருந்தது. ஆனால் அந்த அதிர்வு அவருடைய பிறப்பு போல் அல்லாமல் தலைகீழாக இருந்தது.

  1. இயேசுவின் இறப்பு இறையாட்சியின் சொந்தங்களுக்கு வலியைத் தந்தது.
  2. இயேசுவின் இறப்பு சீசர் போன்ற வலியோ ருக்கு இதமான மகிழ்ச்சியைத் தந்தது.

தலைகீழாக இருந்த இந்த அதிர்வு நீண்ட காலம் நீடிக்கவில்லை. இயேசுவின் உயிர்ப்பு மற்றும் தூய ஆவியின் வருகைக்குப் பிறகு கிறித்துவைப் பின்பற்றிய ஒவ்வொருவரிடமும் பரவியது. கிறித்துவைப் பின்பற்றிய யாவரும் கிறித்துவுக்குள் புதுப்பிறப்பு அடைந் தார்கள். சமுதாயத்தில் வலியோராய் இருந்தவருக் கெல்லாம் இறையாட்சியின் சொந்தங்கள் எதிர்ப்பின் அதிர்வலை களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருந்தன. அதே வேளையில் இறையாட்சியின் சொந்தங்கள் நாளுக்கு நாள் இன்ப அதிர்வால் பெருகிக் கொண்டே இருந்தன என்பது அன்றைய எதார்த்தம். கிறித்தவம் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பது வரலாறு. மனிதராகப் பிறந்த இறைமகனுடைய பிறப்பிலும் இறப்பிலும் இருந்த அதிர்வு அதன் பின் இயேசுவின் உண்மைச் சீடர்களை அது தொற்றிக்கொண்டு விரவிக் கிடக்கிறது என்பதும் சாட்சிய வாழ்வுக்கு அவர்களை இட்டுச்சென்றது என்பதும் நம்மை இன்று வலுவாகச் சிந்தனை செய்யத் தூண்டுகிறது.
நமது பிறப்பு?
இறைவனின் சாயலைத் தாங்கி இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பிலும் இப்படிப்பட்ட இரு வேறுபட்ட அதிர்வுகள் இருக்கின்றனவா? அந்த அதிர்வுகள் இன்றும் வலுவடைந்து கொண்டே இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், சாதி, மத, இன வேறுபாடுகளுக்கு என்ன பதிலிருப்பு செய்கின்றன? பிறப்பின் பயனை உணராத பிறப்பு விழாக்கள் தேவை தானா? இந்தக் கேள்விகளுக்குப் பாரதிதாசனின் வரிகள் ஒருவிதமான பதிலைத் தருகின்றன. பிறந்த நாள் ஒன்றில் நண்பன் ஒருவன் தன்னுடைய நண்பனுக்குப் பரிசாகத் தந்த கவிதை வரிகள்தான் இவை. பிறப்பின் காரணத்தைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டு கின்றன இந்த வரிகள்...
எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்
மக்கள் தனை ஈந்த தமிழ்நாட்டிற்கும்
என்னால் தினையளவு நலம் பயக்குமெனில்
செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாகும்.
இந்த வரிகள் இறைமகன் இயேசுவின் வாழ்வில் உண்மையானது. இந்த ஆண்டு கிறித்து பிறப்பு விழாவின் தயாரிப்பு நாட்களில் கடைசி நாளான டிசம்பர் 24 நமது பிறப்பின் காரணத்தை அறியும் நாளாக அமைத்துக்கொண்டு, சிந்தித்து அதிர்வுகளைத் தெளிவாய் வெளிப்படுத்த யாவரையும் வாழ்த்துகிறேன்.
பணி. தசி. லியோ ஜான்சன், பழையகோவில், திருச்சி

0 comments:

Post a Comment