இயேசுவில் இணைந்த ஒரு வாழ்வாக

புனித அருளானந்தர் சிறுவயதில் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டார். இறைபக்தியும் இறையருளும் நிறைந்த புனித அருளானந்தரின் (1647 - 1693) தாயார், அவர் சுகமாக வேண்டுமெனப் புனித சவேரியாரிடம் (1506 - 1552) வேண்டுதல் செய்துகொண்டார்கள்.
தவ வாழ்வின் அடையாளமாக புனித அருளானந்தர் அவரின் அரண்மனையிலேயே குருவின் வெண் அங்கியைத் தரித்து வலம் வந்தார். சில மாதங்களிலேயே அவர் முற்றிலும் குணமடைந்தார். ஆனால் புனித சவேரியாரின் வேண்டுதலால் கிடைக்கப்பெற்ற உடல்சுகம் அப்புனிதரின் மீது பற்றும் நேசமும் கொள்ள வைத்தது. புனித சவேரியாருக்கு இருந்த ஆன்ம தாகமும் இவரது உள்ளத்தையும் ஆட்கொண்டது. குருவின் உடையைத் தவத்தின் அடையாளமாக உடுத்தியதால், புனித அருளானந்தருக்கும் இறையழைத்தல் மீது நாட்டம் வர ஆரம்பித்தது.
‘இறைவனின் அதிமிக மகிமைக் காகவே’ என்ற விருதுவாக்கை ஏந்திய சேசு சபையில் தன் 15-ஆம் வயதிலேயே சேர்ந்தார். குருப்பட்டம் பெற்று 1673-இல் இந்தியாவின் தென்பகுதியான மரவ மண்ணில் வேத போதகப் பணி செய்ய விருப்பமுடன் வந்தார். கொடுமையாய் நடத்தப் பட்டபோதும், மிகத் தாழ்மையாய் இறை ஊழியம் செய்தார். 1693-இல் ஓரியூர் மண்ணில் வேதசாட்சியாய் மரித்தார். உலகியல் இன்பம் நிறைந்த அரண்மனை வாழ்வைத் துறந்தார். இயேசுவைப் பின்தொடர சகல வற்றையும் இழந்து இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினார்.
வேதாகமத்தில் புனித யாகப்பர் இவ்வாறு எழுதுகிறார் : “உலகத்தோடு நட்பு கொள்வது கடவுளைப் பகைப்பது என அறியீர்களோ? உலகுக்கு நண்பனாக விரும்பும் எவனும் கடவுளுக்குப் பகைவனாகிறான்” (யாக 4:4).
மத்தேயு 9:9-13 என்னும் பகுதியில் நற்செய்தியாளரான புனித மத்தேயு இறை அழைப்பைக் குறித்து மிக அழகாக எழுதுகிறார்.
மத்தேயு சுங்கத் துறையில் ஒரு பெரிய அதிகாரி. சமுதாயத்தின் உயர்ந்த பதவியிலும் இருந்தார். மற்றவர்களால் மிகவும் மதிக்கப்படும் நிலையிலும் இருந்தார். பெரிய பணக்காரராகவும் இருந்தார். ஆண்டவர் இயேசு அவர் சுங்கத்துறையில் அமர்ந்திருந்தபோது அவரை நோக்கி, “என்னைப் பின்செல்” என்கிறார். மத்தேயு உடனே எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார்.
இயேசு அழைப்பின் மகிமையை உணர்ந்த அவர் பெருமகிழ்வு கொண்டு தன் வீட்டில் ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்கிறார். அந்த விருந்திற்குத் தனக்குக் கீழ் பணிசெய்யும் கடைநிலை ஊழியர்களையும்கூட அழைத்து சாப்பிடும்படிச் செய்கிறார். ஆயக்காரர், பாவிகள் பரிசேயர்களோடும் இயேசு உணவருந்துகிறார். உன்னத காட்சி அவருடைய வீட்டில் இடம் பெறுகிறது.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை முற்றிலுமாய்ப் பின்பற்றிய மத்தேயு ஒரு பெரிய அப்போஸ்தலர் மட்டுமல்ல, மாறாக, நம் கைகளில் தவழும் நற்செய்தி நூலையும் நமக்காக எழுதியிருக்கிறார்.
இயேசு கிறிஸ்துவை மெசியாவாக ஏற்றுக்கொண்ட இவர், தன் இனமாகிய யூத மக்களும் இயேசுவை மீட்பராக ஏற்று விசுவசிக்க வேண்டும் என்பதற்காக உண்மை அப்போஸ்தலராக உழைத்தார். கடைசியில் கல்லால் எறியப்பட்டு வேதசாட்சியாக மரித்தார்.
இயேசுவில் அன்புக்குரியவர்களே, புனித பவுல் குறிப்பிடுவது போல், 
நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்தவர்களாயின் மேலுலகில் உள்ளவற்றையே நாடுங்கள். அங்கேதான் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கம் இருக்கிறார். இவ்வுலகில் உள்ள வற்றின் மீது மனதைச் செலுத்தாதீர்கள் (கொலோ 3:1-2).
சீட்டா (Zita) என்ற புனிதை திருச்சபைச் சரித்திரத்தில் உண்டு. அவரின் தாயார் அவர் சிறு குழந்தையாய் இருக்கும் போதே ஒவ்வொரு செயலையும் சுத்த கருத்தோடு செய்ய வேண்டுமெனக் கூறி அறிவுறுத்தி வந்தார்கள்.
ஒவ்வொரு செயலும் இறைவனுக்குப் பிரியமான செயலாக இருக்கும் அல்லது இறைவனுக்கு மனம் வருத்தப்படுகிற செயலாக இருக்கும். நீயோ இறைவனுக்கு ஏற்புடையதை மட்டுமே செய் எனக் கூறினார். அவரும் வாழ்ந்து காட்டினார். சீத்தா (Zita)வும் அப்படியே வாழ்ந்து பெரிய புனிதையாக மாறினார்கள்.
நம் வாழ்வும் இறை இயேசுவில் இணைந்த ஒரு வாழ்வாக இருக்கட்டும். ஆமென். 
Fr. ச. ஜெகநாதன், கொடைக்கானல்

0 comments:

Post a Comment