தூங்கு பாலா தூங்கு

தூங்கு பாலா தூங்கு - எழில்
தும்பை மலரே தூங்கு
ஏங்கி நீயழும் போது - இந்த
ஏழுல குமே கலங்குதே
ஆடு மாடு அடைக்கும் - தொழுவில்
அன்னை மரியின் மடியில்
மூடத் துணியும் இன்று - குளிரில்
வாடி வதங்கும் நிலையே
வானில் விண்மீன் ஒளிதர - தூதர்
பாவும் இசைத்தார் அர்த்தமாய்
கானில் இடையர் கேட்டு -- பாலனைக்
கண்டு வணங்கிச் சென்றாரே
கீழ்த்திசை மூன்று அரசர் - வானில்
நிகழ்ந்த ஒளியை ஆராய்ந்து
வாழ்த்தி வணங்(கி) தந்தார் - மூன்று
காணிக்கைப் பொருளைப் படைத்தார்
தூபத்தால் இறைவனைக் காட்டினர் -   மிளிரும்
பொன்னால் அரசனை விளக்கினர்
மீரையால் மனிதன் என்பதை - இதை
மேதினி அறியச் செய்தாரே
மனிதர் பாபம் தீர்க்க - இறைவன்
மானிட உருவெடுத்துப் பிறந்தார்
புனிதர் ஆக்க துன்பம் - எல்லாம்
கொண்டு பிறந்தார் கடவுள்
(கவிஞர் பெஸ்கிதாசன்)

0 comments:

Post a Comment