அன்பு விதை

விந்தையான விதை ஒன்று
இம்மண்ணில் விழுந்தது - அது
மரியின் மண்ணில் தவழ்ந்தது - அன்பு
விந்தைகள் பல புரிந்தது!

எளிமையான உள்ளத்தை அது
இனாமாகக் கேட்டது - பணம்
இருக்கும் மனிதர்களின் பல்லிளிப்பைப்
பாரபட்சமின்றித் தள்ளி வைத்தது!

கொள்ளை கொள்ளும் புன்சிரிப்பால் - அன்புக்
கொள்கையை எடுத்துச் சொன்னது!
கொண்ட கொள்கைக்குத் தடையானவர்களைக்
கோபமின்றி வெளியே நிற்க வைத்தது!

பொறுமையைக் கடைப்பிடித்து
கடுமையாய் உழைத்து வாழச் சொன்னது!
தடைகள் பல வந்திட்டாலும் - அவைகளைத்
தடங்களாய் மாற்றி உயரச் சொன்னது!

தன்னம்பிக்கையைத் தரணியில் விதைக்க வந்தது
தருமத்தை வளர்த்து அதர்மத்தை அழித்து நின்றது!
ஏழைகளுக்கு மனம் இறங்கச் சொன்னது
பாவிகளை மன்னித்து பரலோகம் காட்டியது!

புரட்சிக் கருத்துக்களை இப்புவியில் தூவ வந்தது
புதுமைகள் பல செய்தே புவியை ஆள வந்தது
அரச பதவிக்கு ஆசை இல்லை எனச் சொன்னது
மனித உள்ளங்களை ஆண்டு புனிதமாய் நின்றது!

மதங்களைவிட மனிதம் மேல் ஆசை கொண்டது
மனித நேயத்தை அறுவடை செய்யவே
மரியின் மடியில் மனிதனாய் வந்துதித்தது!
பெத்தலகேமில் இயேசு என்ற பெயரோடே!

தங்க. ஆரோக்கியதாசன், ஆவடி

0 comments:

Post a Comment