கிறிஸ்து பிறப்பு விழா இறை அழைத்தலை ஊக்குவிக்கிறதா?

கிறிஸ்து பிறப்பு விழா ஆண்டு தோறும் கிறிஸ்தவர்களால் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிற மத கடவுளர்களுக்குக்கூட பிறப்பு விழா கொண்டாடப் படுகிறது. கிறிஸ்து பிறப்பு விழாவும், பிற தெய்வ-மனிதர் களின் பிறப்பு விழாவும் ஒன்றா? கிறிஸ்து பிறப்பு விழா தன்னிலே வலுவானது. வரலாற்றோடு தொடர்புடையது. தனித்தன்மை வாய்ந்தது. முன்குறித்து அறிவிக்கப்பட்டது. அனைத்துலக மாமன்னர், ஏழ்மைக்கு வடிவாய் எளிய கோலம் பூண்டு மண்ணுக்கு வந்த மகோன்னத பெருவிழா. மக்கள் மனதில் படிந்துள்ள இருளை நீக்க வல்ல ஒளி விழா.
இதோ! என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார் (மாற் 1:2-3) 
என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார் (மாற் 1:7). 
இறைவனால் அழைக்கப்பெற்ற திருமுழுக்கு யோவான் ஆண்டவரின் வழியை ஆயத்தம் செய்த இறைமுன்னோடி.
குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய் (லூக் 1:76)
வாக்கு மனிதர்ஆனார். நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14).
கடவுளோடு இருந்த ‘வாக்கை’ மனிதராக நம்மிடையே குடிகொள்ள அன்னை மரியாளை இறைவன் தேர்ந்து கொண்டார். “மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ! கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்” (லூக் 1:30-31). அன்னை மரியாள் இறை அழைத்தலின் முதல் முன்னோடி.
ஆண்டவரின் தூதர் இடையர் களுக்குத் தோன்றி,
இதோ! எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் (லூக் 2:10-11). 
இந்த நற்செய்திதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் உலகெங்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நற்செய்தியின் தூதுவர்களாய் நாமெல்லாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். துறவறம், இல்லறம் எதில் இருந்தாலும் ஒவ்வொரு மனிதரும் இறை அழைத்தல் ஊக்குநர்களே!
தேவனின் அழைத்தலைப் புரிந்து கொள்ளுகின்ற விதத்தில் கிறிஸ்து பிறப்பு விழாப் பொருள் உள்ளதாக இருக்க வேண்டும். அப்போது அருள் நம்மை வந்து சேரும். கடவுளுக்கு உரியதைத் தேடாமல், மனிதருக்குரியதைத் தேடுவது கனி இருக்கக் காய் கவர்வது போலாகும். ஒவ்வொரு பெற்றோரும் குழந்தை யிலிருந்தே தம் பிள்ளைகளுக்கு நல் ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும். பணத்தை இரண்டாம் பட்சமாக வைத்து ஒழுக்கத்தை முதலில் வைத்தால் நல்மணிகள் வீடெங்கும், நாடெங்கும் தோன்றுவர். இறையாட்சியின் மதிப்பீடுகளான அன்பு, இரக்கம், சமாதானம், சமத்துவம், நீதி போன்றவை குழந்தைப் பருவத்திலிருந்தே வாழ்வாக்கப்பட்டால், தேவஅழைத்தல் பெருகும்; வீடும் நாடும் செழிப்புறும்.
கிறிஸ்து பிறப்பு விழா மகிழ்ச்சியின் விழா. நம்மை மீட்பின் கருவிகளாக மாற்றும் விழா. இறை அழைத்தலை உணர்ந்து, புரிந்து செயல்படுத்த அழைக்கும் உன்னத விழா. எல்லா விழாக்களைப் போல் பத்தோடு ஒன்றாக கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடாமல், மீட்பின் நற்செய்திப் பெருவிழாவாகக் கொண்டாட அழைக்கப்பட்டிருக்கிறோம். இதன் மூலம் இறை அழைத்தலின் முக்கியம் உணர்ந்து எதிர்வரும் சந்ததியினரை ஆண்டவருக்குச் சித்தமாய் வளர்ப்போம்! வாழ்வோம்! வளம் பெறுவோம்!!
ச. செல்வராஜ், விழுப்புரம்

0 comments:

Post a Comment