பீடச்சிறுவர்களாகிய பீடப்பூக்களுக்கு பாதுகாவலர் புனித பெர்க்மான்ஸ் அருளப்பர். இவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த டிபெஸ்ட் என்னும் சிற்றூரில் கி.பி. 1599- ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தந்தை தனது மனைவியின் மறைவுக்குப் பின் குருவானார். பெர்க்மான்ஸ் இளம் வயதிலேயே இறைவனுக்குத் தொண்டாற்ற ஆர்வம் கொண்டிருந்தார். இவர் அடிக்கடி “இந்த வயதில் நான் புனிதராகா விட்டால், எப்பொழுதும் புனிதனாக முடியாது” என்று சொல்லுவார். குருமடத்தில் சேர இவரது வீட்டில் பெற்றோரும் உற்றாரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதே சமயம் இறைவன் அவரின் மனக்கதவைத் தட்டி அழைப்பதையும் உணர்ந்தார். இந்த நிலையில் புனிதர் பேசிய வார்த்தைகள் இதுதான், “இங்கே என் பெற்றோரும் உற்றார் உறவினரும் ஒரு பக்கம். மற்றொரு பக்கம் இறைவனும், ஆண்டவரின் அன்னையும் வீற்றிருக்கின்றனர். என் பெற்றோர்கள் என்னிடம் “நாங்கள் உனக்காக உன் இளமை முதல் எடுத்துக் கொண்ட அயராத உழைப்பு, முயற்சிகளை முன்னிட்டு எங்களைவிட்டு பிரியாதே!” என்கிறார்கள். அதே நேரம் இயேசுவோ, என்னைப் பின் செல். உனக்காக பிறந்தேன் சிலுவையைச் சுமந்தேன். அடித்து நொறுக்கப்பட்டேன். இதோ எனது ஐந்து காயங்களைப் பார். உனது ஆன்மா உயிர் பெறவும், ஊட்டம் பெறவும், எனது தசையையும் இரத்தத் தையும் தந்தேனே? உனது நன்றிகெட்டத் தனம் உன்னை நாணத்துக்குள்ளாக்காதா?” என்கிறார்.
பிறகு புனிதர் தன் பெற்றோரிடம் “என் அன்புப் பெற்றோரே! நான் இறையன்பை நினைக்கும்பொழுது என் உள்ளம் பற்றி எரிகிறது. சில நேரங்களில் இந்த நொடியே துறவறத்தில் சேர்ந்து விடலாமா? என்ற விருப்பம் வருகிறது. நான் அன்பு செய்யும் இயேசுவை அடையும் வரை அமைதி இழந்தவனாய் இருக்கின்றேன்” என்றாராம். இறுதியில் இறைவனுக்கே நான் சொந்தம் என்று கூறி தமது 17வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். மேற்படிப்புக்காக உரோமை அனுப்பப்பட்ட போது அங்கு பிளேக் நோயினால் அவதியுற்று கி.பி. 1621-ஆம் ஆண்டு குருமாணவராக இருந்தபோதே இறைவனடி சேர்ந்தார்.
சில இடங்களில் நம் பங்குகளில் சிறுவர்கள் ஆர்வமுடனும், மகிழ்வுடனும் திருப்பலியில் குருக்களுக்கு உதவ முன் வருகிறார்கள். அவர்களைப் பாராட்டுவோம். அவர்களது முயற்சியை இறைவன் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
“இறைப்பணி கடவுளின் வழியில் செய்யப் படும்போது அதை யாரும் தடுக்க முடியாது” - ஹட்சன்
Sr. Theresita FSM
0 comments:
Post a Comment