தங்களுக்குள் அழுது கொண்டாலும் மகனை தன்னம்பிக்கைச் சுடராய் வளர்த்து வந்தனர் அவர்கள். எதைப் பார்த் தாலும் ராஜா கேள்வி கேட்பான். ஒரு பூவைப் பார்த்தால்கூட சாமி ஏம்மா இந்தப் பூவை இப்படி படைச்சார்? ஏம்மா இந்த நிறத்தில் படைச்சார்? ஏம்மா இந்த வடிவத்தில் படைச்சார்? இதை வேற மாதிரியா படைச்சிருந்தா எப்படி இருந்திருக்கும் இல்லம்மா? ஆச்சரியமும், அதிசயமும், அறிவுப்பூர்வமாயும் அவன் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிப்பதை ஒரு வித்தையாகச் செய்து வந்தனர் அவர்கள்.
ஒவ்வொரு படைப்பின் மகிமையையும் எடுத்துச் சொல்லி, அது மனித குலத்திற்குச் செய்யும் நன்மைகளை விளக்கி, அதன் பயன்பாடுகளை எடுத்துச் சொல்லி ஒவ்வொரு நாளும் அவர் களுக்குச் சவாலாய் கழிந்தது. மகனுக்கு தன் இயலாமையின் குறை ஒரு நாளும் தெரிந்துவிடக்கூடாது என ஜாக்கிரதையாய் பார்த்துக் கொண்டனர். ஆளும் வளர அறிவும் வளர குறை மறைந்து இயல்பான வாழ்க்கைப் பாதையில் சென்று கொண்டிருந்தது அவர்கள் பயணம். ஒரு நல்ல ஓவியனாய், கலைஞனாய், கவிஞனாய் உருவாகி வந்தான் ராஜா. எதிலும் அவனுடைய பார்வை புதிய கோணத்தில் இருக்கும். ஆச்சரியமூட்டும் வகையில் அவன் செயல்கள் இருக்கும். பெற்றோரின் திறமை இவனில் இல்லாமலா இருக்கும்! அவர்களைப் போலவே இவனும் உணர்வுகளையும், வலிகளையும், வேதனைகளையும் மறைத்து சிரித்துக் கொண்டே வாழப் பழகிக் கொண்டான். மனது அழுவதை மறைத்துக் கொண்டான்.
கண்ணுக்குள் வைத்து வளர்த்த பிள்ளையின் பார்வையில் பட்டாள் வசந்தா. மெல்ல வசந்தமாய் அவனுள் மாறிப்போனாள்ழி. அவனும் அவள்மேல் கொண்ட அன்பைத் துடுப்பாய் பற்றிக் கொண்டு வாழப் பழகினான். தன் நிலை கருதி யாரிடமும் மனதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனதிலேயே மாளிகை அமைத்து அதில் தன் இனிய சிநேகிதியின் துணையுடன் ஒரு படைப்பாளியாய், மாற்றுத்திறன் படைப்பாளியாய் உலா வந்தான். போதும் நினைவுகள் போதும். அது தரும் பலம் போதும். அன்பான மனசு இருந்தால் அதைக் கொண்டு எதையும் சாதித்து விடலாம்.
மகனின் மனதினுள் நடக்கும் வாழ்க்கைப் போராட்டங்கள் பெற்றவர் களுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் அவனுடைய ஆசையை நிறைவேற்றி வைக்கும் தைரியமும் இல்லை. வழியும் தெரியவில்லை. தான் ஊனமாய்ப் பிறந்து பெற்றோர்க்கு சுமையானது விதி. தெரிந்தே ஒரு ஊனமற்ற பெண்ணின் வாழ்வில் நுழைந்தால் அது தவறு என்றது மதி. எனவே அன்பு கொண்ட மனதை அடக்கிக் கொண்டு வாழப் பழகிக் கொண்டான் ராஜா. பார்க்க கண் இருக்கிறது, கேட்க செவி இருக்கிறது, சிந்திக்க மனம் இருக்கிறது. படைக்க கை இருக்கிறது. பாராட்ட நல்ல மனங்கள் இருக்கின்றன. உற்சாகப்படுத்த மனதில் ஒரு மூலையில் வளர்த்துக் கொண்ட ரகசிய சிநேகிதம் இருக்கிறது.
தைரியமாய்த்தான் வாழ்ந்தான் ராஜா. அம்மா, அப்பா தன்னால் பட்ட, படுகின்ற கவலை எல்லாம் போதும். தெரியாமக்கூட அவர்களைக் கஷ்டப்படுத்தி விடக்கூடாது. தீர்மானமாய் இருந்தான் ராஜா. ஆனால் வசந்தா வேறு ஒருவருக்கு மனைவியான அந்த நாளில் மட்டும் அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அழுகையை அடக்க முடியவில்லை, சிரிப்பதாய் நடிக்க முடியவில்லை. மனசு போராடிய போராட்டத்தை அடக்க முடியவில்லை. வலிக்குக்கூட வாய்விட்டு அழாதவன் அன்று தன் வசந்தாவின் பிரிவிற்காக அழுதான். ஆறுதல் படுத்த முடியவில்லை அவன் பெற்றோரால். அவன் கேட்ட கேள்விக்கெல்லாம் வினயமாய், விவரமாய், விளக்கமாய் பதில் அளிக்கும் அவர்கள் அன்று அவன் கேட்ட “ஏம்மா என்னை சாமி இப்படி படைச்சிட்டாரு?” என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அழுகிறார்கள். யார் இவர்கள்
கண்ணீரைத் துடைப்பது? ராஜாவின் கேள்விக்கு யார் விளக்கமளிப்பது?
சாந்தி ராபர்ட்ஸ்
உதகை
0 comments:
Post a Comment