மேற்சொன்ன குருவானவரின் எண்ணத்தின்படி மற்ற குருக்களுக்குப் பணியில் தடையாய் இருக்கக் கூடாது என்பது பாராட்டுதற்குரியது. குருத்துவப் பணி, ஏன் துறவறப் பணியாற்றுகின்ற குருக்கள் ஒவ்வொரு வருக்கும் மேற்சொன்ன குருவானவரின் பரந்த மனநிலை தேவைப்படுகிறது. நானும் சில சமயங்களில் நான் பணியாற்றிய பங்கின் சில வீடுகளுக்குச் சென்றதுண்டு. அப்படிச் செல்லுகையில் ஒரு சில மக்கள் “ஃபாதர் அவர்கள் வீட்டிற்கு சென்றீர்களே! எங்கள் வீட்டிற்கு வாருங்களேன்! ஏழைங்க வீட்டுக்கெல்லாம் வரமாட்டீங்க! வசதி படைத்தவர் வீட்டுக்குத்தான் செல்வீர்கள்!” என்று கேட்டதும் உண்டு. மேற்சொன்ன குருவானவரின் எண்ணங்கள் என்னையும் சிந்திக்கத் தூண்டின.
இன்றைக்கு ஒரு சில குருக்கள், தான் பணியாற்றிவிட்டு வேறு பங்கிற்கு மாற்றலாகி சென்ற பின்பும் மீண்டும் பழைய பங்கிற்கு வந்து தற்போதைய பங்குத் தந்தைக்கு தெரியாமல் வீடு வீடாக உலா வந்து இறைமக்கள் மத்தியில் குறிப்பிட்ட குருவானவரின் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். தான் பணியாற்றிய பங்கிற்கு மீண்டும் ஒரு குருவானவர் செல்லக் கூடாது என்ற சட்டம் எந்தத் திருச்சபை சட்டத்திலும் இல்லை. ஆனால் அந்த பங்கில் உள்ள குருவானவரை மதிப்பின் நிமித்தமாக சந்தித்துவிட்டு மக்களைச் சந்திக்க செல்வது ஒரு குருவானவர் மற்ற குருவானவருக்கு காட்டும் அன்பையும் மதிப்பையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் புதிய பங்குத் தந்தைக்கு தர்ம சங்கடம் ஏற்படும் விதத்தில் முன்னாள் பங்குத் தந்தை செயல்படுவது அவரின் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. குருக்களே குருக்களை மதிக்கவில்லை என்றால் யார் மதிப்பார்கள்? நமது சாட்சிய வாழ்வு எதில் அடங்கியிருக்கிறது? நான் தமிழக இறையழைத்தல் பணிக்குழு செயலராக இருந்த பொழுது பல மறைமாவட்ட குருக்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டவைதான் மேற்சொன்ன அனுபவங்கள். இதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. இது குற்றச் சாட்டும் இல்லை. சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த அனுபவங்கள் நான் நல்லவன் மற்ற குருக்கள் கெட்டவர்கள் என்பதற்காக அல்ல. இதை நானும் நீங்களும் சிந்தித்துப் பார்க்கத்தான்!
0 comments:
Post a Comment