செல்வக் குடும்பத்தில் பிறந்து உயர்ந்த மதிப்பில் வாழ்ந்த அவரின் தந்தை பிரிஜிட்டின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் பிரிஜிட் இயற்கையிலேயே அழகான முகத்தையும் கொண்டிருந்தார்கள். எனவே அநேக வாலிபர்கள் அவர்களைத் திருமணம் செய்ய விரும்பினார்கள்.
பிரிஜிட் இயேசுவிடத்தில் ஜெபித்தார்கள். இயேசுவை மட்டுமே ஒப்பற்ற செல்வமாய்க் கொள்ளவும், ஈடு இணையற்ற இறைவனாய் கொள்ளவும் விரும்பினார்கள். தன் முக அழகு பாதிக்கப்பட வேண்டுமென இறைவன் இயேசுவிடம் ஜெபித்தார்கள்.
ஒரு நாள் அவர்களின் கண்ணில் புண் ஒன்று தோன்றியது. அதன் விளைவாய் முக அழகு மறைந்தது. அவரின் தந்தையும் கன்னியர் மடம் செல்ல அனுமதித்தார்கள். கன்னியர் மடம் நுழைந்தவுடன் புண் மறைந்தது. முக அழகு திரும்பவும் வந்தது. குறிப்பாக அவர்கள் வார்த்தைபாடு கொடுத்த நாளில் தெய்வீக ஒளி அவர்களின் முகம் முழுவதும் பரவி இருந்ததை அநேகர் கண்டார்கள்.
புனித பவுல் தன் இறை அனுபவத்தை இவ்வாறு எழுதுகிறார்: “ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவை அறிதலாகிய ஒப்பற்ற செல்வத்தின் பொருட்டு உலகைச் சார்ந்த அனைத்தையும் குப்பை எனக் கருதுகிறேன்” என்கிறார் (பிலி 3:8).
லூக் 5:1-11; 27-32 வரை வாசிக்கும் பொழுது முதல் நான்கு அப்போஸ்தலர்களைப் பற்றியும், லேவி என்ற மத்தேயுவின் அழைப்பைப் பற்றியும் நாம் வாசிக்கிறோம்.
ஆண்டவர் இயேசு அதிகாலைப் பொழுதில் கெனெசரேத்து ஏரிக்கரைக்குச் சென்று நின்று கொண்டிருக்கிறார். இளம் சூரியனின் பொன் கதிர்கள் கடல் முழுவதும் பரவி இருக்கிறது. செம்படவர்களாகிய பேதுருவும் சீமோனும் இரவு முழுவதும் பாடுபட்டு மீன்கள் கிடைக்காத நிலையில் இயேசுவின் சொல்லை நம்பி மீண்டும் வலைகளைப் போடும் போது ஏராளமான மீன்களைப் பிடிக்கிறார்கள். அவர்களின் வலையை இழுக்க யோவானும் யாகப்பரும் வருகிறார்கள்.
இயேசுவின் மகிமை வாழ்வை உணருகிறார்கள். அவர்கள் நால்வரையும் இறைப்பணிக்காக அழைத்தபோது அவர்கள் “யாவற்றையும் துறந்து அவரைப் பின்தொடர்ந்தார்கள்” (லூக் 5:11) எனக் காண்கிறோம்.
லேவி என்ற சுங்கத் துறையின் அதிகாரியாய் மத்தேயு இருக்கிறார். மிகுந்த செல்வந்தர், உயர்குடிப் பிறப்பைச் சார்ந்தவர், மற்றவர்களின் மதிப்பில் உயர்ந்தவராய் இருந்தார். இயேசு அவரை இறைப் பணிக்காக அழைத்த போது அவரும் “அனைத்தையும் விட்டு விட்டு அவரைப் பின் சென்றார்” (லூக் 5:23) எனக் காண்கிறோம்.
இயேசுவை நாம் ஒப்பற்ற செல்வ மாகவும், மகிழ்வாகவும், வாழ்வின் அனைத்து நிறைவாகவும் கருதி நம் இதயத்தை இறைவன் இயேசுவுக்கு அர்ப்பணமாக்கும்போது இயேசுவே நமக்குப் போதுமானவராய் இருக்கிறார் என்பதை உணருவோம்.
புனித அசிசி பிரான்சிஸ் (1181-1226) வாலிப வயதில் உலக இன்பத்தில், செல்வச் செழிப்பில் மூழ்கியவராய் வாழ்ந்தவர்தான். ஆனால் குற்றமற்ற இவர் அவரது ஊரில் ஏற்பட்ட கலவரத்தால் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை அனுபவம் வாழ்வின் வெறுமையை, நிலையற்ற உலக இன்ப வாழ்வையும் உணர்த்தியது. சிறைவாழ்வை விட்டு வெளியே வந்தவர் சில மாதங்கள் நோயின் கொடுமையில் வாடினார். நோயின் அனுபவம் நிலையற்ற செல்வச் செழிப்பையும், மறையும் உடல் இன்பத்தையும் உணர்த்தியது.
அனைத்தையும் துறந்தார். வெறுமை வாழ்வை மேற்கொண்டார். தரித்திரராய் தன் 27ஆம் வயதில் வாழ்ந்தார். அவரின் தவ வாழ்வும், ஒடுக்க உபவாச ஜெபமும் இயேசுவின் அன்பால் அவரை நிறைத்தன. வெறுமையில் ஒரு மகிழ்வைக் கண்டார். வறுமை வாழ்வில் நிறைவைக் கண்டார்.
அவரின் துறவு வாழ்வால் கவரப்பட்டு பெர்னார்ட் என்ற அசிசி நகர் செல்வந்தரும் பிரான்சிஸின் தரித்திர வாழ்வைப் பின்பற்ற விரும்பினார். பிரான்சிஸ் அவரிடம் “ஆலயம் செல்வோம்; வேதாகமத்தைத் திறப்போம்; அதன்படியே வாழ்வோம்” என முடிவாகக் கூறினார்.
ஆலயம் செல்லும் வழியில் பீட்டர் கத்தானி என்பவரும் பிரான்சிஸின் வாழ்வைப் பின்பற்ற நினைத்து ஆலயத்திற்கு அவர்களுடன் சென்றார்.
ஆலயம் நுழைந்து பீடத்திலிருந்து வேதாகமத்தைத் திறந்தபோது முதலில் அவர்களுக்குத் தென்பட்ட வசனம் மத் 19:21.
“நீ நிறைவு பெற விரும்பினால், போய் உன் உடைமைகளை விற்று ஏழை களுக்குக் கொடு. வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். பின்னர் வந்து என்னைப் பின்செல்” என்பதுதான்.
இரண்டாவதாக வேதாகமத்தை மூடியபின் திறக்கும் பொழுது அவர்களுக்கு எதிர்பட்ட வசனம் இதுதான் லூக் 9:23 தான். “என்னைப் பின் செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்து கொண்டு என்னைப் பின் தொடரட்டும்” என்ற இயேசுவின் சொற்கள்தான்.
மூன்றாம் முறையாக வேதாகமத்தைத் திறந்து வாசித்தபோது அவர்களின் கண்களில் எதிர்பட்ட வசனம் லூக் 9:3. “வழிப்பயணத்திற்குக் கோலோ, வில்லோ, உணவோ, பணமோ ஒன்றும் எடுத்துச் செல்லாதீர்கள்” என்ற இயேசுவின் வசனங்கள்தான். மூவரும் அனைத்தையும் விற்றுவிட்டு ஏழை களாய் மாறினார்கள்
இவர்கள்தான்புனித பிரான்சிஸ் தொடங்கிய துறவு சபையின் முதல் அப்போஸ்தலர்களாய் மாறினார்கள். கப்புச்சின் சபையும் பிறந்தது ஆமென்.
Fr. ச. ஜெகநாதன், கொடைக்கானல்
0 comments:
Post a Comment