மேன்மை பொருந்திய


அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை உற்றுக் கவனித்துக் கொண்டி ருந்தேன்.  அந்தக் குழந்தைக்கு இரண்டு அல்லது மூன்று வயதிருக்கும்.
அது தன் கையில் ஒரு குச்சியை வைத்திருந்தது.  அந்தக் குச்சியை ஆட்டி ஆட்டி அது அங்கேயிருந்த தன் பொம்மையை நோக்கி, “சொன்ன பேச்சை கேட்கலை அடி கொடுத்திடுவேன்!  ஒழுங்கா இங்கேயே இருக்கணும்” என ஒரு பெரிய மனுசி தோரணையில் மிரட்டிக் கொண்டிருந்தது.
நான் யோசித்தேன், “மனித வாழ்க்கையில் எந்த நிலையிலும் நமக்குள் இந்த பெரியமனுசத் தோரணை வந்து ஒட்டிக் கொள்கிறதே அது ஏன்?” என எனக்குள் கேள்வி எழுந்தது.
மனிதர் ஒவ்வொருவரும் தான் இருக்கும் நிலையை முழுமையாய் புரிந்து, அதை அனுபவித்து வாழ முயற்சிக் கின்றோமோ இல்லையோ ஆனால் அதற்குள் அடுத்தக் கட்ட நிலைக்கு குறிப்பாக பெரிய மனுசத் தோரணைக்குப் போய் அதை வாழ்ந்துவிட துடிக்கின்றோம்.
நேரிடையாய் முடியாவிட்டாலும் கற்பனையிலாவது அதை எட்டிப் பிடிக்க துடிக்கின்றோம்.
குழந்தையாய்த் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும்போதே பள்ளிக்குப் போகும் பருவத்திற்காக மனம் ஏங்குகிறது.
பள்ளிக்கு போய்க் கொண்டிருக்கும் பருவத்திலேயே வேலைக்குப் போகும் அடுத்த நிலையை எட்டிப்பிடிக்க விருப்பம் கொள்கிறோம்.
வேலைக்குச் சென்ற அடுத்த மாதத் திலேயே ஒரு குடும்பத் தலைவனாக எப்படி யயல்லாம் வாழ்க்கை நடத்துவது என மனம் கற்பனையில் மிதக்கிறது.
இப்படியாக ஒவ்வொரு கட்டத் திலே¼யும் மனிதன் இருக்கும் நிலையை உணர்ந்து, புரிந்து நடந்து கொள்வதற்குப் பதிலாக அடுத்த நிலைக்காக ஏங்குவதிலும் அல்லது கற்பனையில் காலத்தைக் கழிப்பதிலும் கவனமாய் இருக்கிறான்.
மனிதனின் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் போன்ற எந்த வாழ்க்கை நிலையிலும் அவனின் மனம் இதே நிலையில்தான் ஏங்கிக் கிடக்கிறது.
இப்படி எந்த நிலையிலிருந்தாலும் அடுத்த நிலைக்காக ஏங்கும் அல்லது கற்பனை செய்திடும் இந்த மனமே ஒருவனுக்குள் உந்து சக்தியாக இருந்து அவனை இயக்குகிறது;  அவனை வாழ வைக்கிறது என்கிற உளவியலரின் கூற்றுப்படி இந்த மனநிலையை நாம் பாராட்டத்தான் வேண்டும்.
ஆனால் இருக்கும் நிலையை உணர்ந்து, புரிந்து அதை அனுபவித்து; வாழாமல் அல்லது வாழ முயற்சிக்காமல் எப்போதுமே அடுத்த நிலைக்காகவே ஏங்குவது சரியா?  முறையா? அது நன்மையைத் தருமா . . . ?  கேள்விகள் கிளர்ந்தெழுகின்றன . . .
இப்படியாக இருக்கும் நிலையை உணர்ந்து, புரிந்து கொள்ளாத போது  பெரிய மனுசன் தோரணையையே எப்போதும் மனம் நாடும்போது அதனால் எப்பொழுதும் நமக்கும் கீழ் நாலு பேரையாவது சின்னஞ்சிறியவர்களாய் நினைத்து நடத்திடும் போக்கும் நமக்குள் வந்து விடுகிறது.
அதனால்தான் அந்த 3 வயதுக் குழந்தை தன் பொம்மையைத் தனக்கும் கீழ் உள்ள சின்னஞ்சிறுசாய் நினைத்து பெரிய மனுசித் தோரணையில் மிரட்டிக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
இந்த மனநிலை எந்த நிலையி லிருந்தாலும் எந்த வயதிலிருந்தாலும் ஒருவனுக்குள் குடியிருப்பதை நாம் பார்க்கலாம்.
நமது வாழ்க்கையிலும் நாமும் எப்பொழுதுமே நமக்கும் கீழ் எப்படி யாவது ஒரு நாலு பேரையாவது நிறுத்தி சிறியவர்களாக்கி ஆதிக்கம் செலுத்திடவே துடிக்கிறோம்.
என்னதான் நாம் நம்பும் மதங்களோ அல்லது நாம் வழிபடும் தலைவர்களோ “மனிதர்கள் அனைவரும் சமம்” என்று நமக்கு உரத்துச் சொன்னாலும் அதை நம்பி ஏற்றுக்கொள்ளும் நம் மனம் நமக்குக் கீழ் நாலுபேரைச் சின்னஞ்ளசிறியவர் களாக்கி விடவே துடிக்கிறது.
அதற்காகவே முட்டி மோதி பட்டம், பதவி, பணம் போன்றவற்றைத் தேடி, ஓடிப் பெற மனம் அலைபாய்கிறது.  எதுவுமே முடியாவிட்டால் ஜாதி, நிறம், இனம் போன்ற சொத்தைக் காரணங் களைக் காட்டி நம்மை உயர்த்திக் கொள்ளவே மனம் துடிக்கிறது.
கிறிஸ்து இயேசுவுக்குள் திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள் ...  சமமான வர்கள் என்று விசுவாசத்தோடு காலை, மாலை திருப்பலி மற்றும் செபங்கள் வழியாக எவ்வளவுதான் சொல்லி வந்தாலும் அல்லது கேட்டு நின்றாலும் அடுத்தக் கனமே நமக்கும் கீழ் நாலு பேரையாவது சின்னஞ்சிறியவர் களாக்கி ஆதிக்கம் செலுத்தும் சின்னப் புத்தியில்தான் நாம் சிக்குண்டு கிடக்கிறோம்.
ஆதிக்க மனதோடு அடுத்தவரை அடிமைப்படுத்துவதில் சுகம் கண்டு பழகிப் போய்விட்ட நம்முள் நற்செய்தியும் அது தந்த விழுமியமும்கூட தோற்றுப் போய்க் கிடக்கிறது.
அதனால்தான் மதர், மதர் ஜென்ரல், சுப்பீரியர் (அப்படின்னா மற்றவர்கள் எல்லாம் இன்பீரியர் என்று அர்த்த மாகுதே) சுப்பீரியர் ஜென்ரல், பாதர், ரெக்டர், பி­ப், ஆயர் போன்ற நாம் பயன்படுத்தும் சொல்லாடல்களைத் திருச்சபையில்  இன்றும் நம்மால் விட்டுவிட முடிய வில்லை.  இந்த நிலையில் இது போதா தென்று மூச்சுக்கு மூச்சு ரெவெரன்ட் போட்டே விளிக்க வேண்டுமென்றும் மனம் விரும்பி நிற்கிறது.
இப்படியாக எப்படியாவது பிறரை விட நம்மை மேம்படுத்திக் காட்டியோ அல்லது பிறரை நம்மைவிட கீழ்ப் படுத்தியோ சிறியவர்களாக்கிவிட துடிக்கும் இந்த மனநிலையைப் பார்த்துதான் இறைமகன் இயேசு ஒரு எச்சரிக்கை கொடுத்திருக்கின்றார்.
அது வெறும் எச்சரிக்கை ஒலி அல்ல ...  குரல் அல்ல ...மாறாக இந்த மன நிலையில் மாட்டித் தவிக்கும் நமக்கு அவர் கொடுக்கும் ஒரு பொறுப்பு, கடமை அது.
எப்படியாவது எவரையாவது ஆதிக்கம் செய்ய  பெரிய மனுசன் தோரணை காட்டிட ஆளாய் பறக்கும் மனிதனே  மனசே ...
நீ அப்படி ஆக விரும்பும் போதெல்லாம் இந்தப் பொறுப்பையும் கடமையையும் நீ உன் கூடவே ஏற்றுக் கொள்!  என்று நமக்குப் புதிய கட்டளை கொடுக்கின்றார்.
“இச்சின்னஞ்சிறியவர்களுக்கு இடறலாய் இருப்பவன் கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி . . .” என்கிற இறைமகன் இயேசுவின் இந்தக் கூற்றில் அந்தப் பொறுப்பு, கடமை நமக்கு உணர்த்தப் படுகிறது.
ஓ மனிதனே!  மனசே!  நீ யாரை வேண்டுமானாலும் உன்னைவிட சின்னஞ்சிறியவனாய் ஆக்கிக் கொள் ... அவர்களைவிட பெரியவனாய் உன்னைக் கருதிக் கொள்.
ஆனால் அப்படி செய்கிற நீ உன்னால் ஆக்கப்பட்ட அந்தச் சின்னஞ் சிறியவர்களுக்கு இடறலாய் இல்லாமல் நல்ல முன்மாதிரியாய் இருக்கவும் உறுதி கொள் என புதிய பொறுப்பைக் கொடுக்கிறார்.
அப்படி இல்லாதபொழுது “உன் கழுத்தில் எந்திரக் கல்லை கட்டி ஆழ் கடலில் உன்னைத் தள்ள நேரிடும்” என மிக அதிகப்பட்சமான தண்டனையை அறிவிக்கிறார்.
மன்னிக்கும் தேவன், மனிதனுக்கு மன்னிக்கச் சொல்லித் தந்த அந்த இறை மகன் வாயிலிருந்து வந்த மிக மிக அதிகப்பட்ச தண்டனையைக் கவனித்தால் அவர் நமக்கு வழங்கும் அந்தப் பொறுப்பின் மகிமை புரியும்.
எனவே எப்பொழுதெல்லாம் நாம் பிறரைச் சின்னஞ்சிறியவராக்கி மேலான வர்களாய் நம்மை ஆக்கிக் கொள்ள விரும்புகிறோமோ அப்பொழுதெல்லாம் நாம் அந்த சின்னஞ்சிறியவர்களுக்கு இடறலாய் இல்லாமல் “சரியான முன்மாதிரியாய்” இருக்கும் மிகப்பெரிய பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? என சிந்திப்போம்.  அந்த பொறுப்பு உணர்வு தரும் செயல்பாடுதான் உண்மையான மேன்மையை நமக்குத் தரும்.  
அப்படி பொறுப்பாக நடந்து கொள்ள நம்மால் முடியாது, நமக்கு கஷ்டம் என உணர்ந்தால் நாம் மேலானவர்களாக  மேன்மை பொருந்திவர்களாக ஆக ஆசைப்படுவதை நிறுத்துவோம்.  ஏனெனில் கழுத்தில் பாறாங்கல்லுடன் ஆழ்கடலில் தள்ளப்படுவதைவிட இருக்கும் இடத்தை உணர்ந்து புரிந்து நடந்து கொள்வதே நலம்!


எஸ். எரோணிமுஸ்

0 comments:

Post a Comment