புனித அந்தோணி மரிய கிளாரெட் (1807 - 1870)

ஸ்பெயின் நாட்டவர்.  கிளரிசியன் துறவற சபை நிறுவனர்.  க்யூபாவில் சான்றியாகோ நகரின் பேராயராகப் பணி யாற்றியவர்.  இவரது வாழ்க்கையில் மரியன்னையின் உதவி ஏராளமாக இருந்தது.  குருமாணவராகப் படிக்கும் நாட்களில் ஒரு முறை நீரில் மூழ்கியிருக்க வேண்டியவர், மரியன்னையின்
குறுக்கீட்டால் புதுமையாகக் காப்பாற்றப்பட்டார்.

தனது 28வது வயதில் குருப்பட்டம் பெற்றார்.  ஒரு குருவானவராக ஸ்பெயினில் பணியாற்றிய நாட்களில், மிகப் புகழ்வாய்ந்த திருமறைப்போதகர் என்ற பெயர் பெற்றிருந்தார்.  10 ஆண்டுகள் தனது சொந்த நாட்டில் இத்திருப்பணியாற்றிவரும்போது திவ்ய நற்கருணைப் பக்தியையும், மரியாயின் மாசற்ற இருதய பக்தியையும் பரப்புவதில் நிறைய கவனம் செலுத்தினார்.  எப்போதும் இவரது கையில் ஜெபமாலை இருப்பதைக் காண முடிந்ததாம்.

தனது 42வது வயதில் 5 இளங்குருக்களைச் சேர்த்துக் கொண்டு “கிளரிசியன் ” துறவற சபையை நிறுவினார்.  அப்போது க்யூபா நாட்டில் சாண்டியேகோ மறை மாநிலம் ஆன்மீகத்தில் ரொம்பவும் பாழடைந்த நிலையிலிருந்தது.  அடிமைச் சந்தைக்கு வரம்பில்லாமல் போனது போன்ற கொடிய தீமைகளின் மத்தியில் இவரது துணிச்சலான, கண்டிப்புடன் கூடிய மறைப்போதனைக்கு நிறைய எதிர்ப்புக் கிளம்பியது.  அதைத் துணிவுடன் சமாளித்தார்.

இறுதியில் தாயகத்திற்கு அழைக்கப் பட்டார்.  அங்கிருந்து பாரிஸ் சென்று அங்கு ஸ்பெயினிலிருந்து குடியேறியவர்களுக்குப் போதித்து வந்தார்.  இவர் சுமார் 200க்கும் மேலான நூல்கள் எழுதியுள்ளார்.  அவரது வாழ்நாளெல்லாம் கத்தோலிக்கப் பிரசுரங்களைத் தயாரித்துப் பரப்புவதில் ஏராளமான முயற்சிகள் எடுத்துக் கொண்டார்.  முதல் வத்திக்கான் சங்கத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.  அப்போது திருத்தந்தையின் தவறா வரம் பற்றித் திறமையுடன் எடுத்துரைத்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றவர்.  இறுதியில் இவர் நாடு கடத்தப்பட்டு ஸ்பெயின் நாட்டின் எல்லைக் கோடியில் 63வது வயதில் காலமானார்.

இவரது திவ்ய நற்கருணைப் பக்தி, மரியாயின் மாசற்ற இருதயத்திற்குரிய பக்தி, ஜெபமாலைப் பக்தி, கத்தோலிக்க பிரசுரங்களைப் பரப்புவதில் இவருக்கிருந்த ஆர்வத்தை நமதாக்கிக் கொள்வோம்.

எட்வர்ட்

0 comments:

Post a Comment