“மறைபரப்பு”

விவாதத்திற்கும், சர்ச்சைக்கும் உரிய வார்த்தையாகவே மாறிப்போனது. அக்டோபர் மாதத்தில் மறைபரப்பு விழா கொண்டாடப்படும் நிலையில் அது பற்றிய சிந்தனைகள் சிறப்புக்குரியவை.
சமூக கண்ணோட்டத்தோடு தம் பணிகளை ஒருமுகப்படுத்தியுள்ள திருச்சபை, குறிப்பாக வளரும் நாடுகளில், நற்செய்தி அறிவிப்பை மனிதநேய கண்ணோட்டத்தோடு இணைத்துப் பார்க்கிறது.  நற்செய்தியை நற்செயலாக்கி மதம் மாறுகின்ற நிகழ்வாக அன்றி மனித மனம் மாற்றுகிற நிகழ்வாக நிலைநிறுத்த நினைக்கிறது.  சில சமயங்களில் இச்சிந்தனை சர்ச்சைக்குரியதாகவும் மாறிப் போகிறது.  நற்செய்தி அறிவிப்பால் ‘எத்தனை பேர் மதம் மாறியுள்ளனர்?’ என்ற கேள்வி ஒருபுறம். மதம் மாற்றினால்தான் நற்செய்திப்பணியா ‘மனமாற்றம் ஏற்பட்டால் போதாதா?’ என்ற கேள்வி மறுபுறம்.  இவ்விரு கேள்விகளும் முரண்பாடுகளை, குறிப்பாக இந்திய திருச்சபையில் எழுப்புகின்றது.  இவ்வாறு நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்கிற கொள்கை வரைவு சார்ந்த கேள்விகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் மற்றோரின் தவறான கண்ணோட்டமும் நம்மைத் தாக்குகின்றது.
தொடர்வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன்.  அருகில் இருந்த நபர் தன்னை எனக்கு அறிமுகம் செய்து கொண்டே  ஆனால் நான் யார்? என்று கேட்டு தெரிந்து கொள்ளாமலே  பேசிக் கொண்டிருந்தவர் சொன்னார் .  இன்று கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் தமது கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் உள்ளவர்களை மதம் மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
“இதுபோன்று நிறைய நபர்களையோ அனுபவங்களையோ பார்த்து இருக்கின் றீர்களா?” என்றேன்.  “இல்லை ஒரு சிலரைப் பார்த்துள்ளேன்” என்று உதாரணம் காட்டினார்.  தகவலைப் பெற்று சில ஒப்புமைகளைக் கூறி அவருக்கு விளக்கம் தந்தேன்.  ஏற்றுக் கொண்டார்.
கட்டாயத்தால் அல்ல ஒரு சில இறை அனுபவங்களினால் தன் மனம் மாற்றிக் கொண்டவர்களை உதாரணமாக வைத்துக் கொண்டு கிறித்தவர்களே இப்படித்தான் என ஒரு முடிவுக்கு வந்து அம்மதத்தை அதிர்ச்சியாகவும், அபாயகரமாகவும் பார்க்கும் ‘பிறரின்’ கண்ணோட்டங்கள் இன்றைய நற்செய்தி அறிவிப்புக்கு ஒரு சவால்.
                உள்ளும் புறமும் பல்வேறு தாக்கங்களை, தர்க்கங்களைத் தாங்கியுள்ள ‘நற்செய்தி அறிவிப்புப் பணி’ பற்றிக் கூறும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இந்த ஆண்டுக்கான மறைப்பரப்புச் செய்தியில் கூறுவதை நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது.
“கடவுள் தம் அன்பு மகன் மூலம் நம்மைத் தம் மகன்களாகவும் மகள்களாகவும் அழைக்கிறார்.  அப்படியயனில் பல்வேறு நிலையில் பிரிந்து வாழும் மனித குலத்தில் வாழும் அனைத்து மக்களும் சகோதர, சகோதரியாக இருக்க வேண்டுமென்பதே அவரின் விருப்பம்”.
மனிதநேய சிந்தனைகளை தவிர்த்த, மனித மாண்புகளை கண்டு கொள்ளாத நற்செய்தி ஒன்று இருக்க முடியாது.  நற்செய்தி அறிவித்துவிட்டு பிறரைத் துன்புறுத்துகின்ற சிந்தனைகள், பிறருக்குப் பணி செய்துவிட்டு தொடர்ந்து அவர்களை இம்சையும் செய்கிற நிலைகள் எல்லாமே முழு நிறைவான இயேசு விரும்புகிற நற்செய்திப் பணி அல்ல.  ‘திருச்சபை நற்செய்தி அறிவிப்புக்காகவே இருக்கின்றது’.   (‘church exists for evangelization’) என்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலின் வார்த்தைகள் வெறும் சடங்கு, சட்டங்களைச் சார்ந்த ஒன்றாக இருக்க முடியாது.  மனித நேயத்தையும் ஒருமைப்பாட்டையும் உலக சமாதானத்தையும் விரும்பி உழைத்த அவரின் வார்த்தைகள், நற்செய்திப் பணியால் திருச்சபை தம்மை மற்ற சமூகங்களிலிருந்து துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. மாறாக இயேசுவின் நற்செய்தியில் உள்ள உண்மைகள், நெறி முறைகள் வழிகாட்டியாக இச்சமூகத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும், உலகம் உய்வதற்கான வழியாக மாற்றப்பட வேண்டும்.  இந்த உண்மையை உணர்ந்தால் அதை உரைக்க வேண்டும் என்பதே தெளிவான சிந்தனை.  இந்த அறிவிப்பு ஒரு கடமையாகவும் உள்ளது.  இந்த உண்மையை நீ உணர்ந்தால் அதை உரக்கச்சொல்  வெறும் வார்த்தையாக மட்டுமல்ல  வாழ்வாக.
சே. சகாய ஜாண்

0 comments:

Post a Comment