விடை அறியா வினாக்கள்

அந்த இளைஞனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.  சென்ற மாதம் நடந்த அந்த நிகழ்வே இன்னும் மனதைவிட்டு அகலவில்லை.  அதற்குள் அடுத்து நடந்த இந்த நிகழ்வும் அந்த கத்தோலிக்க இளைஞனை மிகவும் கவலையடையச் செய்தது.

மனம் கனத்துப் போய் இருந்ததால் கோவிலுக்குச் சென்றான்.  அங்கே பங்குத் தந்தை “தேவ அழைத்தல்” குறித்தும் அதன் சிறப்பு குறித்தும் தன் பிரசங்கத்தில் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்.  அவன் மனம் அதில் லயிக்கவில்லை. . .  அந்த நிகழ்வுகளே அவனுக்கு முன் வந்து நின்றன.

சென்ற மாதம், இவன் வீட்டருகே புதிதாக குடிவந்த ஒரு இந்து சகோதரக் குடும்பத்தில்  B.E. படித்த மாணவன் ஒருவன் விபத்துக்குள்ளாகி தலையில் பலத்த அடிபட்ட நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான்.  திடீரென ஏற்பட்ட அந்த நிகழ்ச்சியால் அவனின் குடும்பமே தடுமாறிப் போய் நின்றது.  அவனைக் காப்பாற்ற அக்குடும்பமே அல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. முப்பது கோடி தேவர்களையும் கும்பிட்டு எப்படியாவது தம் மகனைக் காப்பாற்ற கோயில் கோயிலாக வலம் வந்தும் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் அம்மருத்துவமனைக்கு வந்த ஒருவர் கவலையும் கண்ணீரும் நிறைந்த அக்குடும்பத்தின்  நிலையைக் கவனித்து விசாரித்திருக்கிறார்.  இவர்களின் துயரமான நிலையைக் கேட்டு அவர்கள் மகனுக்காக செபிக்க அவர்களிடம் உத்தரவு கேட்டார்.  தங்கள் மகன் எப்படியாவது பிழைத்தால் போதும் என்றிருந்த அந்தக் குடும்பம் அதற்கு அனுமதியும் வழங்கியிருக்கிறது.
உடனே அம்மகனின் தலைமாட்டில் முழந்தாள்படியிட்டு அவனுக்காக கண்ணீர் வடித்து உருக்கமாய் இயேசு கிறிஸ்து நாமத்தினால் ஜெபித்திருக்கிறார்.
யாரோ ஒருவர் தங்கள் மகனுக்காக முழந்தாளிட்டு கண்ணீரோடு செபிப்பதைப் பார்த்து அந்தக் குடும்பமே ஆச்சரியப்பட்டு அதேநேரத்தில் அமைதியாய் அதை ஏற்றிருக்கின்றனர்.

அந்த நிகழ்வு அவர்களுக்கு அந்த நேரத்தில் ஆறுதலையும் தேறுதலையும் தந்திருக்கிறது.  அந்த வாரத்தில் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் சிலர் அவருடன் வந்து அம்மகனுக்காக உருக்கமாய் கண்ணீரோடு கர்த்தரிடத்தில் செபித்திருக்கின்றனர்.  அக்குடும்பமும் ஆறுதல் அடைந்தே வந்திருக்கிறது.
ஆனால் நான்காம் நாளில் அம்மகன் இறந்து போய் விட்டான்.  இறந்த மகனை வீட்டிற்குக் கொண்டு வருவதற்குள் கர்த்தரின் பிள்ளைகள் என்று அந்தக் குடும்பத்தினரால் அழைக்கப்பட்ட அவர்கள் அம்மகனின் வீட்டிற்கு வந்து முழந்தாள் படியிட்டு செபித்தனர்.  அம்மகனின் இறுதி சடங்கிற்கான அத்தனை ஏற்பாடுகளையும் அவர்தம் உறவினர்கள் போல் முன்னின்று செய்து கொண்டிருந்தனர்.

தன் வீட்டருகே நடந்த இந்த துயர நிகழ்வுக்கு நம் கத்தோலிக்க இளைஞன் அங்கு சென்றபோது அவர்களின் உளமார்ந்த செயல்பாட்டைக் கவனித்து அதைக் குறித்து விசாரித்தபோதுதான் இதைத் தெரிந்து கொண்டான்.
இதற்கிடையில் அம்மகனை எரிக்க வேண்டாம், புதைக்கலாம் என அவ்வீட்டார் முடிவெடுத்து எங்கு புதைப்பது என விவாதித்துக் கொண்டிருந்தனர்.  ஊருக்குப் புதியவர்களான அந்தக் குடும்பத்திற்குத் தானும் இந்த இக்கட்டில் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த அந்த கத்தோலிக்க இளைஞன் விருட்டென கிளம்பி தன் பங்குத் தந்தையிடம் சென்று விபரம் சொன்னான்.
பாதர்! நீங்க வந்து அந்த மகனை கொஞ்சம் மந்திரியுங்கள் என மன்றாடி, அப்படியே அந்த மகனை புதைப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? என ஆலோசனையும்  கேட்டான்.

“தம்பி! இன்னும் அவுங்க முறைப்படி ஞானஸ்நானம் பெறல;  அவங்களை வந்து நான் மந்திரிக்கிறது சரியா இருக்காது;  அதே மாதிரி, கத்தோலிக்கர்களுக்கான நம்ம கல்லறையில் ஞானஸ்நானம் பெறாத ஒருவரைப் புதைக்கவும் வாய்ப்பில்லை” என எடுத்துச் சொல்லி அவனைத் திருப்பி அனுப்பி விட்டார்.

மீண்டும் அந்த துக்க வீட்டிற்கு வந்த பொழுது அம்மகனை அருகிலுள்ள ஒரு CSI திருச்சபைக்குச் சொந்தமான கல்லறையில் புதைக்க அந்த கிறித்தவர்கள் அனுமதி பெற்று ஏற்பாடு செய்திருப்பதாக அறிந்தான்.  இறுதிச் சடங்கு இனிதே முடிந்தது.  அதன் பின்பு நடந்த 16ம் நாளின் போது அந்தக் கிறித்தவர்கள் மீண்டும் அந்த வீட்டாருடன் இணைந்து இறைவனைப் பாடி துதித்தனர்... இன்று வாரந்தோறும் அவர்கள் வீட்டில் செபக் கீதங்கள் இசைக்கப்படுகின்றன.
அதைக் கேட்கும்பொழுதெல்லாம் நம் கத்தோலிக்க இளைஞனுக்கு ஒருவித “சுறுக்” இருக்கவே செய்தது... இந்த நிகழ்வே இன்னும் மனதை விட்டு அகலவில்லை.  அதற்குள் இன்னொரு நிகழ்வு.  இதைக் கேட்டவுடன் அவன் ஆடிப் போய்விட்டான்.

தன் நண்பன் கிறிஸ்டோபரிடமிருந்து வந்திருந்த அந்தப் பார்சலைப் பிரித்தான் அவன்.  உள்ளே இரண்டொரு சி.டி.களும் சில புத்தகங்களும் இருந்தன.  கூடவே ஒரு கடிதமும் எழுதப்பட்டிருந்தது.  அதை வாசிக்க எடுத்தபொழுதே கிறிஸ்டோபர் குடும்பம் குறித்து அவனுக்கு நினைவு வந்தது.
கிறிஸ்டோபர் மிக உன்னதமான ஒரு கத்தோலிக்க குடும்பத்தினன்.  தானும் அவனும் ஆரம்பப் பள்ளியிலிருந்தே ஒன்றாகப் படித்ததினால் கிறிஸ்டோபர் குடும்பத்தை நன்றாக இவனுக்குத் தெரியும்.  கிறிஸ்டோபரின் பெரியப்பா  ஒரு கத்தோலிக்க குருவானவர்.  திருச்சபையில் நிறைய உயர் பதவிகளையயல்லாம் வகித்த மிகச் சிறந்தவர்.  அவனின் சித்தி ஒரு துறவற சபையின் மாநிலத் தலைவி.  இப்படியாக பாதர், சிஸ்டர் நிறைந்த குடும்பம் அவனது குடும்பம்.  ஞாயிறு திருப்பலி காண்பது போன்ற கத்தோலிக்க விசுவாசத்தை அப்படியே கடைப்பிடிக்கும் சிறந்த குடும்பம்.  சென்ற வருடம் அவனது படிப்பின் காரணமாக அவனது குடும்பமே சென்னைக்குச் சென்று குடியேறியது.

சென்னைக்குச் சென்ற பிறகு அவனது அம்மாவிற்கு உடலில் ஒரு பக்கம் செயல் இழந்துபோய் விட்டதாகவும், எத்தனையோ மருத்துவ சிகிச்சை செய்தும் சரிப்படுத்த முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டதாகவும், இறுதியில் கடவுளே கதி என குடும்பமே கலங்கி நின்றிருந்த வேளையில், அருகாமையில் வசித்த ஒரு குடும்பமும் அவர்களுடன் சிலரும் அடிக்கடி அவன் வீடு வந்து அவன் அம்மாவுக்காகத் தொடர்ந்து செபிக்கத் தூண்டி... உருக்கத்துடன் மன்றாடியதால் அவன் அம்மா தற்போது பிழைத்திருப்பதாகவும் எழுதியிருந்தான்.

அப்படி வந்து செபித்த ஒருவரின் சாட்சியமே இந்த சி.டி.  அவரின் வாழ்வே அந்தப் புத்தகம்.  இதனை வாசித்து, சி.டி.ஐ கேட்டுப் பார் என்றும் அந்த கத்தோலிக்க இளைஞனுக்கு எழுதியிருந்தான்.
இதுதான் ஆரம்பம்.  இன்னும் ஓரிரு மாதங்களில் நம் கிறிஸ்டோபர் குடும்பமும் என்னவாகப் போகிறது என்று நம் கத். இளைஞனுக்குப் புரிந்தது.
“தேவை அழைத்தலைப் பற்றி நறுக்குனு நாலு வார்த்தையைச் சொல்லி முடிக்கிறதை விட்டுட்டு வழ வழன்னு போட்டுச் சாகடிக்கிறாரே” கோவிலில் தன் அருகே இருந்தவர் எழுப்பிய சத்தம் கேட்டு நம் கத். இளைஞன் சுய நினைவுக்கு வந்தான்.

ஓ இன்னும் பிரசங்கம் முடியலையா!  தேவ அழைத்தல்தான் ஓடிக்கிட்டு இருக்கா!  மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
திருப்பலி முடிந்ததும் பங்குத் தந்தையை சந்தித்து தன் மனதில் உள்ள ஆதங்கத்தைக் கொட்டி நாம் ஏதாவது செய்யனும் என முடிவு செய்தான்.
இங்கே பாருங்க தம்பி! இதுக்கு நாம என்ன செய்ய முடியும்?  யார் எங்க போனால் என்ன!  இதனால ஒன்றும் நம்ம கத். திருச்சபை அழிஞ்சிடாது.  ஏன்னா, அது இரண்டாயிரம் வரு­மா இதுமாதிரியான சோதனைகளை யயல்லாம் தாண்டித் தான் வந்திருக்கு!  இதுக்கு ஏன் இவ்வளவு ஃபீல் பண்றீங்க...

இன்னொரு விசயம்!  அவுங்க அங்கேயும் போய் ஆண்டவர் இயேசுவைத்தான் கும்புடுறாங்க... கவலையை விடுங்க... யார் எங்க போனாலும் தாய் திருச்சபை நாமதான்.  அதை யாரும் மறுக்க முடியாது...  அதெல்லாம் குட்டித் திருச்சபைகள்...

அதில்ல பாதர்!  தேவ அழைத்தல் பெற்ற இவ்வளவு பேர் முழு நேரமா நம் திருச்சபைக்காகவே பணியாற்றிக்கிட்டு இருக்கிறப்ப இப்படி ஒவ்வொருத்தரா போயிட நாம் விடக் கூடாதுன்னுதான்!

அதுக்கு என்னப்பச் செய்ய முடியும்?  ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேலை.  நம்மகிட்ட இருக்கிற ஸ்கூல், காலேஜ் போன்ற நிறுவனங்களைப் பராமரிக்கவே நமக்கு ஆட்கள் பத்தல.... இப்ப என்னைய எடுத்துக்க.  நான் இங்க பங்குத் தந்தை மட்டு மல்ல, மறைமாவட்டத்துல வட்டார அதிபர்.
மறைமாவட்டத்துல உள்ள நிர்வாகப் பணியைக் கவனிக்கவே எனக்கு நேரம் இல்லை.  இதுல பங்குல யார் எங்க போறாங்க, என்ன பிரச்சனையில் இருக்கிறாங்கன்னு கவனிக்க எங்க நேரமிருக்கு?...  அதனாலதான் தேவ அழைத்தல் பெறுகணும்னு வேண்டிக்க சொல்லி இன்றைய திருப்பலியில் வலியுறுத்தினேன்.  போ! போயி நீயும் நல்லா வேண்டிக்க ... என்று பங்குத் தந்தை விளக்கமளித்தார்.

ஆயிரமாயிரம் கேள்விகள் அடுத்தடுத்து அந்த இளைஞனுக்குள் எழும்பின.  இருப்பினும் அதற்கு மேல் அவற்றை விவாதிக்க அவன் விரும்ப வில்லை.  அவன் மனம் மட்டும் இன்னும் கனமாகவே இருந்தது.


எஸ். எரோணிமுஸ், 
“ஊற்றுக்கண்” ஆசிரியர், திருச்சி 

0 comments:

Post a Comment