புகழ்ச்சிப் பலி

எனது பிறந்த ஊரில் அருமையான பங்குத்தந்தை ஒருவர் இருந்தார்.  முதிர் வயது.  மிகுந்த இறைபக்தியும், மக்கள் மீது நேசமும், குருத்துவப் பணியில் நேர்மையும் கொண்டவர்.  மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம், இவைகளில் ஆர்வம் கொண்டு முதிர் வயதிலும் தளரா உழைப்பில் சிறந்து வாழ்ந்தார்.

அவரின் குருத்துவ வாழ்வில் பொன்விழா வந்தது.  ஐம்பது ஆண்டுகள் நிறைவு.  மக்கள் அவர்மீது கொண்டிருந்த பாசத்தினால் பொன்விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென விரும்பினார்கள்.  அதற்காக முனைப்புடனும் செயல்பட ஆரம்பித்தார்கள்.

இதைக் கேள்விப்பட்ட பங்குத் தந்தை அவர்களைக் கூப்பிட்டு இவ்வாறு கூறினார் “இறைவனுக்குப் பணி செய்ய என்னைத் தேர்ந்து கொண்டவர் இறைவன்.  என் இறைப்பணியின் நாட்களில் எனக்கு உறுதுணையையும் இறைவல்லமையையும் தந்து வழிநடத்தியவர் ஆண்டவர் இயேசு.  இம்முதிர் வயதிலும் எனக்குப் பெலன் தந்து காத்துக் கொண்டவரும் இறைவனே.  அப்படி இருக்க நான் பெருமைப்பட்டுக் கொள்வது நீதியான செயல் அல்ல. எனவே எவ்வித ஆடம்பர நிகழ்ச்சியும் எனக்கு விருப்பமில்லை” எனத் தெளிவாகக் கூறினார்.

பொன்விழா ஆண்டின் நினைவாக ஒரு துறவகம் சென்றார்.  மூன்று நாட்கள் மெளனத்திலும், ஆலயத்தில் திவ்ய நற்கருணை முன் நன்றி செலுத்துவதிலும் கழித்தார்.  தியானம் செய்து விட்டு பங்கிற்கு வந்து “என் பொன் விழா நிறைவு பெற்று விட்டது” எனக் கூறினார்.  பின் தன் செலவில் ஏழைகளுக்கும், சிறுவர் சிறுமியருக்கும், இல்லாதவர்களுக்கும் நல்ல விருந்து வைத்து புது துணிமணிகள் வாங்கி அவர்களுக்குக் கொடுத்து மகிழ்வுடன் அனுப்பி வைத்தார்.  நல்ல திருப்பலி செய்து மக்கள் அனைவரோடும் சேர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்தி பொன்விழாவை நிறைவு செய்தார்.

ஆண்டவர் இயேசு இவ்வாறு குறிப்பிடுகிறார், “நீங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் செய்த பின் “நாங்கள் பயனற்ற ஊழியர்கள் செய்ய வேண்டியதைத்தான் செய்தோம்” எனச் சொல்லுங்கள்” என்கிறார் (லூக் 1;1)ல்.

யோவான் (6:1-14) வரை நாம் வாசிக்கும் பொழுது ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் மட்டும் இயேசுவினிடத்தில் அப்போஸ்தலர் பெலவேந்திரர் கொண்டு வருகிறார்.  மக்கள் பெருங்கூட்டமாய் இருக்கிறார்கள்.  இருநூறு வெள்ளிக்காசுக்கு அப்பம் வாங்கினாலும் ஒரு சிறு துண்டு கூட ஒவ்வொருவருக்கும் கிடைக்காதே” என்கிறார் அப்போஸ்தலர் பிலிப்பு.

ஆனால் இயேசுவின் உள்ளம் முழுவதும் மக்கள் மீது கொண்ட பரிவிரக்கத்தினாலும், பரம தந்தையின் மீது கொண்ட நேசத்தினாலும் நிரம்பி வழிகிறது.

இயேசுவின் இதயம் இறைப்புகழ் பாடுகிறது.  இயேசுவின் உதடுகள் நன்றிப் பண் இசைக்க, உள்ளம் இறைவனை நோக்கி எழ ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் பரம தந்தையின் பாதம் சமர்ப்பிக்க அப்பமும் மீனும் பலுக ஆரம்பிக்கின்றன.  அனைவரும் வயிறார உண்கிறார்கள்;  மீதமாயுள்ள உணவு பன்னிரெண்டு கூடைகள் நிறைய இருக்கிறது.

இயேசுவின் உள்ளமும், இதயமும் இரவு முழுவதும் ஜெபத்தினால் நன்றி உணர்வினால் பொங்கி வழிகிறது.  இந்த இதய நன்றியே அற்புதங் களையும் ஆச்சரிய செயல்களுக்கும் அடித்தளமாய் இருக்கிறது.

புனித பவுல் தெசலோனியர்களுக்கு இவ்வாறு எழுதுகிறார்: “எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்.  இடைவிடாது ஜெபியுங்கள்.  என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்” என்கிறார் (1 தெச 5:16, 17).

நம் இதயம் எப்பொழுதும் நன்றி செலுத்தும் உள்ளத்தைக் கொண்டிருக் கட்டும்.  நன்றி உணர்வே நாம் இறைவனுக்குச் செலுத்தும் புகழ்ச்சிப் பலியாகும்.

புனித குழந்தை தெரசாள் தன் துறவு வாழ்வின் கடைசி நாட்களில் “லிசி”யின் கார்மேல் மடத்தில் உள்மடத் துறவிகளாய் இருந்தார்கள்.

இயேசுவின் கரங்களில் இருக்கும் ஒரு சிறு குழந்தைக்கு ஒப்புமையாய் நம்பிக்கையுடன் வாழ்ந்தார்கள்.  இயேசுவின் மீது கொண்டிருந்த அளவு கடந்த அன்பும், ஆன்மீக தாகமும் தம்மையே எவ்வித சிலுவைத் துன்பத்திற்கும் உட்படுத்தும் தியாகமும் அவர்களுக்கு இரத்த அழுத்த நோயினால் துன்பப்பட வைத்தது.

ஒரு நாள் மருத்துவர் அவரைப் பரிசோதிக்க வந்தார்.  அவரிடம் மருத்துவப் பணி செய்தபின் தலைமைச் சகோதரியிடம் “இந்த சிறு வயது துறவி இவ்வளவு கொடுமையான நோயின் வேதனையை எப்படி மிகப் புன்முறுவலோடு தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை” எனக் கூறினார்.

அப்பொழுது ஒரு அருட்சகோதரி படுக்கையில் வேதனையுடன் இருந்த குழந்தை தெரசாளிடம் நீங்கள் இப்பொழுது என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்டதற்குப் புனித குழந்தை தெரசாள் இவ்வாறு கூறினார்கள், “நான் இயேசுவின் பிரசன்னத்தில் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.  என் இதயம் அவருக்கு நன்றிப் பண் பாடிக் கொண்டிருக்கிறது” என்கிறார்கள்.

நாம் இறைப்பிரசன்னத்தில் மகிழ்பவர்களாகவும், இதய உணர்வில் நன்றிப் பண் பாடுபவர்களாகவும் இருப்போம் ஆமென்.

0 comments:

Post a Comment