மனிதர்கள் பலவிதம்

நான் குருவாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.  ஆனாலும் உத்வேகத்துடன் பணியை நன்முறையில் செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் எனக்கு கால்களைச் சுற்றிக்கொள்ள பல நச்சு ஜீவன்கள் அலை பாய்ந்து கொண்டிருக்கின்றன என்பதை நானும், அழைத்தல் வாழ்வைத் தேர்ந்து கொண்டிருக்கிற உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.  எனவே, அழைத்தல் பயணத்தில் நிதானித்து பணியைச் செய்ய வேண்டும்.  நம்மால் முடியும் என்ற திடமான நம்பிக்கையோடு இருக்கும்போது உங்களைச் சுற்றியுள்ள பலரும் பல விதமாக விமர்சிக்கக் கூடும்.  அழைத்தல் வாழ்விற்கு விமர்சனம் என்பது உரம் போன்றது.   நீங்கள் தழைத் தோங்க உதவி செய்யும்.  சில நேரங்களில் உங்கள் இலட்சியப் பயிருக்கு நடுவில் களைகளும் தோன்றலாமல்லவா?  இந்த 23 ஆண்டு காலங்களில் நான் கடந்து வந்த நச்சுப் பயிர்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வஞ்சப் புகழ்ச்சியாளர்கள் :  என்னங்க ஃபாதர் நல்லா இருக்கிறீர்களா?  நான் போன இடமெல்லாம் உங்களைப் பற்றித்தான் பேசறாங்க.  நல்லா பணி செய்கிறீர்களாமே என்று புகழ்கிறவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.  இவர்களே பின்னால் வேறுவிதமாகப் பேசுவார்கள்.  “இவன் என்ன பணியா செய்யறான்?  காலை முதல மாலை வரை அறையில் உட்கார்ந்துகிட்டு நேரத்தை வீணடிக்கிறான்” என்று பேசும் பேர்வழிகளாகவும் மாறுவார்கள் இவர்கள்.  நீங்க இந்தப் பங்குக்கு “வில்லன் மாதிரி” என்று கூறி விட்டு மேலிடத்தில் உங்களைப் பற்றிய நல்லெண்ணங்களைத் தகர்த்து விடுவதில் சமத்தர்கள்.  உங்களை முன்னால் புகழ்ந்துவிட்டு பின்னால் அவர்கள் உங்களைப் பற்றிக் கிண்டலடிப்பதைக் கேட்டு மனம் உடைந்து விடாதீர்கள்.  இவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள் அதுவே போதும்.
வஞ்சனையாளர்கள் : இவர்கள் வித்தியாசமானவர்கள்.  உங்கள் முன்னாலேயே உங்களைப் பற்றி விமர்சிக்கலாம்.  குறை, நிறைகளைப் பற்றிப் பேசலாம், பேசாமலும் இருக்கலாம்.  என்னங்க ஃபாதர் நீங்க இந்தப் பங்கிற்கு ஒன்றுமே செய்யலையே.  எல்லாமே உங்களைத் தப்பாக பேசறாங்க என்று ஸ்ருதி சுத்தமாக நீங்கள் பணி செய்து கொண்டிருக்கும்போது கிண்டலாகக் கூறுவதுபோல் கூறி உங்களை உசுப்பி விடலாம், கடுப்படிக்கலாம்;  உங்கள் மேலதிகாரிகளிடம் அல்லது பங்கு மக்களிடமே உங்களைக் கிண்டல் செய்வது போல் தங்கள் மனக்கசப்பை வெளியிடலாம்.  இவர்களுக்கு ஜால்ரா தட்ட ஒரு கூட்டம் இருக்கும்.  எப்படியாவது இவன ஒழித்துக் கட்டணும் என்ற முனைப்பில் உங்களுக்கு விரோதமாக எந்த செயல்களிலும் இறங்கத் தயங்காதவர்கள்.  இவர்களிடம் நேர்வழியைக் காண்பது அரிது.  மொட்டைக் கடிதம் எழுதுவதில் வல்லவர்கள்.  நேர்மையை மனதில் வைத்து இவர்களை இவர்களது செயல்களை ஒதுக்கிவிடுங்கள்  (Ignore them).
தற்பெருமையாளர்கள் : நீங்கள் என்ன தான் இறைபணி செய்தாலும், உங்கள் பணி உபயோகமுள்ளது என்றாலும் இப்படிப்பட்டவர்களிடமிருந்து ஒரு சின்ன அங்கீகாரம் கூட நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்காது.  தன்னைத் தவிர மற்றவர்கள் முட்டாள்கள்.  தன் செயல்களைத் தவிர மற்றவர்களை அற்பமாக எண்ணுபவர்கள் இவர்கள்.  நேரடியாகவும் பாராட்டமாட்டார்கள்.  இவர்கள் மேற்கூறியவர்களுடன் கூட்டணி வைத்து உங்களை ஆக்ரோ­மாக விமர்சித்து தங்கள் காட்டத்தை தணித்துக் கொள்வார்கள்.  இதற்கும் பதறி விடாதீர்கள்.
புறங்கூறுபவர்கள் : இதனை வாசிக்கும் போதே சில முகங்கள் மனத்திரையில் நிழலாடத் துவங்கி இருக்குமே!  நான் இப்படி செய்யலாம் என்றிருக்கிறேன் என்று அளவு கடந்த உற்சாகத்தில் இவர்களுடன் நீங்கள் பகிரும்போது அமைதியாக கேட்டுக் கொண்டிருந்துவிட்டு உங்கள் முயற்சிக்கு எந்தெந்த விதத்தில் முட்டுக் கட்டை போட முடியுமோ அத்தனை வழிகளையும் கையாள்வார்கள்.  நீங்கள்  சொல்லாததையும் சேர்த்து அதைப் புனைவதில் எத்தர்கள்.

கூழைக்கும்பிடு போடுபவர்கள் : இந்த வார்த்தையைக் கேட்ட உடனேயே “ஜிங்குசா கோஷ்டிகள்” கண்முன் வந்து விடுவார்கள்.  தங்களுக்கென்று எந்த அபிப்பிராயமும் இல்லை என்பது போல நீங்கள் எது சொன்னாலும், எது செய் தாலும், “ஆமாம் சாமி” போடும் ஆசாமிகள் இவர்கள்.  உங்களுக்கு இவர்களால தீமை அதிகமில்லை என்றாலும், நன்மை எதுவுமே இல்லை என்பதை நன்கு உணர வேண்டும்.  எனவே இவர்களையும் இனம் கண்டு கொள்ள வேண்டும்.
நலம் விரும்பிகள் : இவர்கள் உங்கள் விளைச்சலுக்காக (நற்பணிகளுக்காக) நீர் பாய்ச்சு கிறவர்கள்.  உங்கள் பணி வளர்ச்சியில் மிகப் பெரிய பங்கு இவர் களுக்குப் போய்ச்சேர வேண்டும்.
 இத்தனை பேரையும் எனது குருத்துவப் பணியிலே கடந்து வந்திருக் கிறேன்.  இத்தனை பேரையும் நீங்களும் தெரிந்து வைத்திருப்பீர்கள்.  இவர்கள் தடைக்கற்களாக இருக்கலாம்.  துஷ்ட்டரைக் கண்டால் தூர விலகச் சொன்ன ஆன்றோர்கள் அவர்களைத் தூக்கி எறியச் சொல்லவில்லை.  எனவேஇப்படிப்பட்டவர்களைக் கண்டு விலகிக் கொள்ள வேண்டுமேயயாழிய இவர்களை விலக்குவது பண்பில்லை.
 ஒரு சிலரை எனது அனுபவத்தில் இனம் பிரித்திருக்கிறேன்.  இவர்களைத் தவிர இன்னும் எத்தனையோ வகையினர்.  இனிமேல் மற்றவர்களையும் நீங்கள் எளிதாக புரிந்து கொண்டு விடுவீர்கள்.  இப்படிப்பட்ட குள்ளநரித் தனத்தைக் கூட தங்கள் பணி வெற்றிக்குப் பாலமாக்கிவிடும் வித்தகர்கள் இருப்பார்கள்.  அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அற்புத குணநலன்கள் வாய்க்கப் பெற்றிருப்பார்கள்.  இவர்களை உதாரணமாக்கிக் (Role Models) கொள்ள வேண்டும்.

 மனிதர்கள் பல ரகமானவர்கள்.  பல குணாதிசயங்களாக உள்ளவர்கள்.  அவர்களை அவர்கள் குறை, நிறையோடு ஏற்றுக் கொள்ளும்போது மனிதம் தழைக்கிறது.  “மற்றவர்களை மாற்றுகிறேன்” என்று போர்க்களத்தில் இறங்கி காயப்படுவதை விட, அவர்களைப் புரிந்து கொண்டு அவர்களின் செயல்கள் எந்த விதத்திலும் நம்மைப் பாதிக்காமல் பாதுகாத்து, நம்மை மாற்றிக் கொண்டு, உயர, உயரப்போவது மட்டுமே இலட்சியமாக இருக்க வேண்டும்.

பணி. வின்சென்ட் பால்ராஜ்,
பங்குத்தந்தை,
புனித மரியன்னை ஆலயம், அண்ணா நகர், பவானி

0 comments:

Post a Comment