சமச்சீர் கல்வி

இவ்வுலகைப் பொறுத்தவரை அழியாத செல்வம் கல்விச் செல்வம்.  இன்று மக்களிடையே கல்வி பற்றிய விழிப்புணர்வு கடந்த காலங்களைவிட சற்றுக் கூடுதலாகவே உள்ளது.  இருப்பினும், இந்திய மாநிலங்களில் குறைந்தபட்ச கல்வி அறிவு இன்னும்கூட எட்டாத மாநிலங்களும் உண்டு.  நம் சமூகங்களிடையே உள்ள ஏற்றதாழ்வுகள் களையப் பட்டு ‘சமத்துவம்’ ஏற்பட வேண்டு மென்று சொன்னால் ‘கல்விப் புரட்சி’ மேலோங்கி பொருளாதாரம் சீரடைய வேண்டும்.  இன்று, பாமரர்கள் கூட ‘நல்ல பள்ளி’ எது என்று கேட்டு தம் பிள்ளைகளைச் சேர்ப்பதில் அக்கறையாய் உள்ளனர்.
முட்டாள், மூடன் என்று பின்தள்ளப் பட்டவனும் ‘நீ மாடு மேய்க்கத்தான் இலாயக்கு’ என்று சொல்லப்பட்டவனும் மாறி அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று சொன்ன காலமெல்லாம் மலையேறி ஏழை எளியவர்களெல்லாம் கூட ‘படிப்பை நோக்கி’ முன் செல்கிறார்கள்.  உலகம் ‘ஒரு கிராமமாக’ கைக்குள் அடங்கி விட்ட நிலையில் படிப்பதற்கான சிலாக்கியங்கள் அதிகரித்து விட்டன.  இருப்பினும் சாதனை படைத்துவரும் மகளிர் படிப்பறிவில்லா விகிதத்தில் சற்று உயர்ந்துதான் காணப் படுகிறார்கள்.  ஒவ்வொரு மாநிலமும் தொலை நோக்குப் பார்வையில் தன்னலமற்று அனைத்து சமூகமும் மேம்பட துரிதமாக செயல்படும் என்றால் ‘நல்லரசு’ வீடெங்கும் நாடெங்கும் தோன்றும்.
இன்றைய நிலையில் பள்ளிக்கு வருகின்ற பிள்ளைகளில் சிலர் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த நிலையில் யாரோ ஒருவர் பாதுகாப்பில் இருந்து படிப்பது இடை நிற்றலை அதிகப் படுத்துகிறது.  மக்களின் பொருளாதார நிலையும் மேலும் இதற்கு வலுவூட்டுகிறது.
தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் என்று சொல்லும் நிலையில் உள்ள மாணவர்கள் பன்னெடுகாலமாய் ஒதுக்கப்பட்டு அமுக்கப் பட்ட நிலையில் பிற சமூக கலப்பு இல்லாததால் அவர்களுடைய அறிவுத் திறன் மற்றும் ஏற்புத்திறன் பிற மாணவர்களுடைய திறனைவிட மிகக் குறைவாகவே உள்ளது.  இன்று “ஒரே பாடத்திட்டம் - ஒரே கல்விக் கழகம்” என்று ‘சமச்சீர் கல்வி’ நெடுநாளைய சிந்தனையின் தாக்கமாக அமல்படுத்தப்படுகிறது.  இத்திட்டம் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.
உளவியல்  ரீதியாக இருவர் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்கின்றபோது நாமே மாணவர்கள் மத்தியில் வேற்றுமையை ஏற்படுத்துவது சமூக அநீதியாகும்.  இந்நிலையில், கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் அர்ப்பணத் தோடும் கடப்பாடோடும் எவ்வித சார்பெண்ணங் களுக்கும் இடம் தராமல் அனைவரையும் சமமாக மதித்து பாடத்தைத் தெளிந்த சிந்தனையோடு கற்றுத் தேர்ந்து போதிக்க பயிற்சி முழுமை பெற வேண்டும்.
தேர்வு முறைகளை  மாற்றிப் புரிந்து படிக்கின்ற ஆற்றலும் சுயச்சிந்தனைச் சார்பும் படிக்கும் மாணவர்கள் கொண்டு தேர்வைத் தேர்வாக எழுதுகின்ற அடிப்படைப் பயிற்சி மழலையர் பள்ளியிலிருந்து பயிற்றுவிக்கப் படவேண்டும்.  தரமான கல்வி தரமான ஆசிரியர்களால் தரணியயங்கும் வழங்கப் பட்டால் படித்த மேதைகள் கணிசமாக நூற்றுக்கு நூறு பெருகுவர் என்பது உறுதி.  அரசும் வேலை வாய்ப்பைப் பெருக்கி ஊக்குவித்தால் பல நன்மைகள் ஏற்பட்டு கல்வி, பொருளாதார, சமூக வேற்றுமைகள் களையப்படும்.  அதனால் ஒரு புதிய சமுதாயம் உருவாகும்.  மனுக்குலம் பண்பட்டதாய் மிளிரும்.  ஏழை பாழை எல்லாம் அகலும்.
S. செல்வராஜ், விழுப்புரம்

0 comments:

Post a Comment