ஆன்மீகம்

புனித ஜான் மரிய வியான்னி (1786- 1859) ஆர்ஸ் கிராமத்தின் பங்குத் தந்தையாக இருந்தபோது அவரிடம் பாவசங்கீர்த் தனம் செய்யவும் அவரின் மறையுரைகளில் வெளிப்படும் ஞானத்தைப் பெறவும் அநேக மக்கள் ஆர்ஸ் நகருக்குப் பெருங்கூட்டமாய் வந்தார்கள்.
சாதாரண மக்கள் மட்டுமல்ல குருவானவர்கள், ஆயர்கள், கர்தினால்கள், துறவுமடப் பெரியோர்கள் வந்து அவரிடம் மறையுரைகளில் வெளிப்பட்ட தெய்வீக ஞானத்தைக் கண்டு அதிசயமடைந்தார்கள்.  குருத்துவப் பயிற்சியின் போது ஞானம் இல்லை, அறிவு இல்லை, பேச்சுத் திறமை யில்லை, சிந்தனை ஆற்றல் இல்லை எனக் கருதி குருப்பட்டம் இவருக்குக் கொடுக்கவே தயங்கியவர்கள் இவரில் வெளிப்பட்ட ஞானத்தைக் கண்டு வியந்தார்கள்.
19ஆம் நூற்றாண்டில் மிகவும் புகழ் வாய்ந்த மறையுரையாளர், பெயர் பெற்ற ஞான வல்லுனர், குருமடப் பேராசிரியர் லக்கோர்தேர் என்பவர் புனித ஜான் மரிய வியான்னியிடம் பேசி, உரையாடி, ஆலோசனைகளைப் பெற்றபின் மிகவும் மகிழ்வுடன் திரும்பிச் சென்றார்.
அவரின் வருகையைக் குறித்து ஜான் மரிய வியான்னி குறிப்பிடும்போது “ஒரு மலை மடுவைத் தேடி வந்திருக்கிறது.  ஞானமுள்ளவர் ஞானமற்ற என்னைக் காண வந்தார்.  அறிவிற்சிறந்தவர் அறிவற்ற என்னிடம் வந்து ஆலோசனை பெற  வந்தார்” என்றார்.
ஜான் மரிய  வியான்னியிடம் அபூர்வ சிந்தனைகளும் ஞானக் கருத்துக் களும் வெளிப்பட்டன.  அவர் எந்த ஞானியிடம் போக வில்லை.  அறிவாளியை நாடவில்லை.  கருத்துக் குவியலைக் கொண்டிருக்கும் புத்தகங்களைப் படிக்கவில்லை.  அவர் ஞானத்தைத் தேடி திவ்விய நற்கருணை நாதரின் பாதத்தண்டை வந்தார்.  வேதாகமத்தை இதயத்தில் பதித்தார்.  இறைவனின் மெல்லிய ஆலோசனைகளை ஜெபத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமை யால் உய்த்து உணர்ந்தார்.  அங்கு பெற்ற ஞானத்தையே மக்களுக்குப் போதித்தார்.
வேதாகமத்தில் “உங்களில் எவருக் காவது ஞானம் குறைவாயிருந்தால் அவர் கடவுளிடம் கேட்கட்டும்.  அவருக்குக் கொடுக்கப்படும்.  முகம் கோணாமல் தாராளமாய்க் கொடுப்பவர் அவர்” என்கிறார் புனித யாக்கோபு (1:5).
பாலன் இயேசுவைத் தேடி கீழ்த்திசை ஞானிகள் ஒட்டகத்தின்மீது ஏறி பாலைவனப் பயணம் செய்து எருசலேம் நகர் வருகிறார்கள்.  அவர்கள் ஞானத்தைக் கொண்டிருப் பவரும் அதிசய ஆலோசனையின் கர்த்தராகிய தேவ பாலன் இயேசுவை ஆராதனை செய்ய அதிசய விண்மீனைப் பின்பற்றி எருசலேம் நகர் வருகிறார்கள்.
விண்மீன் மறைவினால் யூதாவின் சிற்றரசன் ஏரோதிடம் “யூதாவின் அரசர் பிறந்திருக்கிறாரே அவர் எங்கே?  அவருடைய விண்மீன் எழுதலைக் கண்டு அவரை வணங்க வந்தோம்” என்கிறார்கள்.
மூன்று ஞானிகள் கீழ்த்திசை நாடுகளில் ஒன்றான அசிரியா, பாபிலோன் அல்லது பெர்´யா நாடுகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.  மெடஸ் (னிedeவி) என்ற குருகுலத்தைச் சேர்ந்தவர்.  சொராஸ்டர் மதக் கொள்கை உடையவர்கள்.  அரசியலிலும் மக்கள் மதிப்பிலும் உயர்ந்து காணப்பட்டவர்கள்.  நாட்டின் ஆளுமையில் பங்கு பெற்ற அறிஞர்கள்.
மேலும் அவர்கள் வானசாஸ்திரி களாய் இருந்தார்கள்.  வானத்தின் நட்சத்திரங் களையும் ஆராயும் ஞானத்தைக் கொண்ட வர்களாயும் இருந்தார்கள்.  ஆராய்ச்சியின் வல்லுனர்களாய் இருந்ததால் அதிசய விண்மீனின் வெளிப்பாட்டை  அறிந்து ஞானத்தின் கர்த்தரை வணங்கக் கீழ்த்திசை நாட்டிலிருந்து பல மாதங்கள் பாலை வனத்தில் பயணம் செய்து பாலன் இயேசுவை மாட்டுக் கொட்டத்தில் கண்டு நெடுஞ்சான்கிடையாக விழுந்து ஆராதிக்கிறார்கள்.
உலக ஞானத்தில் சிறந்தவர்கள் ஞானத்தின் கர்த்தரைத் தேடி மாட்டுக் கொட்டிலில் கிடத்தப் பட்டிருக்கும் பாலன் இயேசுவை ஆராதிக்கிறார்கள்.  தெண்டனிடுகிறார்கள்.  மூன்று காணிக்கைகளை அர்ப்பணித்து இயேசுவை இரட்சகராகவும் குருவாகவும் அரசராகவும் ஏற்றுக் கொள்கிறார்கள்.  ஞானத்தில் சிறந்தவரும், மறை வல்லுனரும், நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதி இறை ஞானத்தை வெளிப்படுத்திய வருமான பேராயர் புல்டன் பீன் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“நான் எவ்விடத்தில் இருப்பினும், என் அறைக்கு அடுத்த அறை திவ்விய நற்ளகருணை ஸ்தாபகம் உள்ள சிற்றாலயமாகத்தான் இருக்கும்.  குறைந்தது ஒரு மணி நேர திவ்விய நற்கருணை சந்திப்பில் பெற்ற ஞானக் கருத்துக்கள்தான் என்னிடமிருந்து வெளிப்பட்டன” என்கிறார்.
இன்று நாம் ஞானமுள்ளவர்களாய் வாழ, நடந்து கொள்ள இயேசுவின் பாதப் படியில் மணிக்கணக்காய் அமர்வோம்.  அவரின் ஆலோசனைக்குச் செவிமடுப்போம். ஆமென்.

0 comments:

Post a Comment