அன்னை பெற்ற தெய்வம்

விண்ணுலகு மண்ணுலகு -  பல
                விந்தையான பொருட்களையும்
எண்ணில்லா உயிர்களையும் -  நல்ல
                ஏற்றமிகு மனிதனையும்
கண்சிமிட்டு நொடியினிலே -  நன்கு
                கணக்காகப் படைத்தவர்
மண்ணில் வந்(து) பிறப்பதற்கு
                மார்க்கமும் உனக்கில்லையே?
மாடமில்லை கூடமில்லை -  இழிந்த
                மாடடையும் தொழுவத்திலே
மூடிடவும் கந்தையின்(றி) - வாட்டும்
                குளிர்தனிலே அழு தேங்கி
வாடிடும் நிலை யேனோ?  -  தேவா
                மக்களின் பாபங்கள்
தேடிவந்து அழித்திடவே -  பிறந்து
                நேசமும் காட்டினாயோ?
கன்னித்தாய் கரத்தினிலே -  தூங்கும்
                கர்த்தனே!   கண்ணுறங்கு!!
பண்பாடி இசைத்தனரே -  தூதர்
                வால்மீனும் ஒளியூட்ட
மன்னர்கள் மூன்று பேர் -  பரிசு
                வழங்கியே சிறப்பித்தாரே!
பொன்னால் மன்னவனே -  புகழ்ந்து
                தூபத்தால் இறைவனோடு
மின்னிடும் மீரையால் -  மனிதனே
                என்றுமே விளக்கினரே!!
விண்ணிலே மாட்சியும் -  இந்த
                மண்ணிலே சமாதானமும்
நன்றாகச் செழித்திடவே -  இங்கு
                நரனாகப் பிறந்தாயோ!!
என்னாளும் நினைத்திடும்-  பிறப்பு
                எங்களுக்கு நற்பாடம்!!!
கவிஞர் பெஸ்கிதாசன்

0 comments:

Post a Comment