துவக்கக்கால திருச்சபையில் குருத்துவம்

இயேசுவின் மரணம் - உயிர்ப்பு ஏற்படுத்திய அதிசயமான ஆன்மீக அவைகளில்தான் திருச்சபைகள் உருவாகத் துவங்கின.  இயேசுவின் இறப்பு நேரத்தில் சின்னா பின்னமாகச் சிதைந்துபோன இயேசுவின் சீடர்கள் அவரது உயிர்ப்பில் ஒன்றுபட்டனர்.  இயேசு இன்னும் வாழ்கிறார் என்ற இன்ப அதிர்ச்சி அவர்களை புதிய மனிதர்களாக்கி இணைய வைத்தது.
உலகெல்லாம் சென்று இயேசுவின் செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வில் புறப்பட்டவர்கள் பல்வேறு அதிசயங்களைத் தங்கள் வாழ்வில் பார்த்தார்கள்.  நோய்களும், பேய்களும் கட்டுப்படுகின்றன என்பதைவிட புதிய வாழ்வுக்கு மக்கள் உயிர்த்தெழுகின்றனர் என்பதுதான் பெரிய அதிசயமாக இருந்தது.  புதிய உறவுகள், புதிய மகிழ்ச்சி, புதிய வாழ்வு என்று இயேசுவின் சக்தியால் உருவான புதிய இயக்கம் அவர்களுக்குப் புதிய உத்வேகத்தைத் தந்தது.
சென்ற இடங்களில் திருச்சபைகளைத் துவங்கி, புதிய பொறுப்பாளர்களை நியமித்து, புதிய வழிமுறைகளைக் காட்டி விட்டு, நற்செய்திப் பயணத்தைத் தொடரும் அற்புதமான வாழ்க்கை முறையாக அப்போஸ்தலர்களின் வாழ்வு அமைந்தது.
யூத சமய வழக்கத்திலிருந்த ‘குருக்கள்’ ‘லேவியர்’ போன்ற சொல்லாடல்களை அகற்றிவிட்டு, ‘மேற்பார்வையாளர்கள்’, ‘திருத் தொண்டர்கள்’ போன்ற சொல்லாடல்களை துவக்கத்திருச்சபையில் உருவாக்கினர்.
பல்வேறு பணிகள் திருச்சபைகளின் தேவையைப் பொறுத்து பணிகள் பல உருவாகின.  போதகர்கள், நற்பணியாளர்கள், உடன் உழைப்பாளர்கள், குணமளிப்பவர்கள் என்று பல்வேறு பணிகள் உருவான நேரத்தில், இந்தப் பணிகளையயல்லாம் ஒருங்கிணைக்கும் ஓர் ஆதாரப்பணி தேவைப்பட்டது.  ஆழமான இறையனுபவம்.  அன்பர் இயேசுவின் வார்த்தை களையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் ஆளுமை, பிளவுகளும் பிணக்குகளும் ஏற்படும் நேரத்தில் மக்களை ஒன்றுபடுத்தும் தலைமை, நற்செய்திக்காக உயிரையும் கொடுக்க முன்வரும் அர்ப்பணம் ஆகிய பண்புகளைக் கொண்ட பணியாக ‘ஆயர் பணி’ துவக்கத் திருச்சபையில் உருவானது.
திருத்தூதர்களின் மறைவுக்குப் பின் ‘ஆயர்  பணி’ குருத்துவம் என்ற முத்திரையைப் பெற்றது.  யூத சமயத்தில் குருக்கள் என்ற வார்த்தை பெற்ற அர்த்தங்களை விட்டு விட்டு, அப்போஸ்தலிக்க மரபைக் கட்டிக் காத்து, அடிப்படையான வெளிப்பாடுகளின் வழியில் மக்களை ஒருங்கிணைக்கும் புதிய அர்த்தத்தை ‘குருக்கள்’ என்ற வார்த்தை பெற்றது.  ஆயர்கள் தங்கள் பணியை இயேசுவின் உண்மையான குருத்துவத்தில் பங்குபெறும் நிலையாக உறுதிப்படுத்தினர்.  தங்களுக்கு உதவியாக ‘குருக்களை’ திருநிலைப்படுத்தி அந்தப் பணியை விரிவாக்கம் செய்தனர்.
குருத்துவம் பெற்ற பொலிவு
கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே குருத்துவத் திருநிலைப்பாட்டுச் சடங்குகள் திருச்சபையில் உருவாகியிருக்கின்றன.  அவற்றில் இரண்டு முக்கியமான பணிகள் குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.  ஒன்று குருக்கள் இயேசுவின் குருத்து வத்தில் பங்கு பெறுவதால் இயேசுவை அருளடையாளங்கள் மூலமாகவும், அருள்வாழ்வு மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரசன்னப்படுத்துதல்.  மற்றொன்று, ஆயர்களுக்கு உதவியாளர்களாக இருந்து திருச்சபையின் ஒற்றுமைக்கும் ஒருங் கிணைந்த செயல்பாடுகளுக்கும் உழைத்தல்.    
திருச்சபையில் பல்வேறு பணிகள் இருந்த போதிலும் குருத்துவம் ‘தனிப்பட்ட பணியாக’ வேறுபடுத்திக் காட்டப்பட்டது.  தரவரிசைப்படுத்தி குருக்கள் பணியை மற்ற பணிகளைவிடச் சிறந்தது என்று திருச்சபை முன் வைக்கவில்லை.  திருச்சபையின் எல்லாப் பணிகளும் சமமான மதிப்புக் குரியவையே!  திருச்சபையில் உள்ள அத்தனை பேரும் பணியாளர்களே!  பணியின் இயல்பைப் பொறுத்து குருத்துவம் வேறுபடுத்திக் காட்டப்பட்டது.
துறவறமும் குருத்துவமும்
துவக்கத் திருச்சபையில் உருவான துறவற வாழ்வை எண்ணிப் பார்த்தால் குருத்துவத்தின் வேறுபட்ட நிலையை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.  கி.பி. நான்கு, ஐந்து நூற்றாண்டுகளில் மடாலய வாழ்க்கை முறை திருச்சபையில் துவங்கியது.  பலர், இறையழைப்பு  காரணமாக, குடும்ப வாழ்க்கையை விட்டு விட்டு இறையமைதியில் இன்புறச் சென்றனர்.  அவர்கள் திருச்சபையின் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டனர்.  மக்கள் அவர்களைப் புனிதர்களாகக் கருதி அவர்களின் தரிசனத்திற்காகத் தவமிருந் தனர்.  அதேசமயம், குருக்கள் பணி மக்கள் மத்தியில் வாழ்ந்து, மக்களுக்கு அருளடை யாளங்களை வழங்கி மக்களை வழி நடத்தும் பணியாக இருந்தது. துறவிகள் குருக்களாக விரும்பவில்லை.  அதேசமயம் துறவிகளின் ஆன்மீகத்தை தங்கள் வாழ்வில் வெளிப்படுத்தும் குருக்களை மக்கள் அதிகமாகப் போற்றினர்.  துறவி களைப் போன்று எளிமை, பற்றில்லாத் தன்மை, மனத்துறவு ஆகியவற்றை கைக் கொள்ள குருக்கள் அறிவுறுத்தப் பட்டனர்.
குருக்கள் வாழ்வு துறவியர் வாழ்வி லிருந்து வேறுபட்டது என்ற நிலை துவக்கத் திருச்சபைகளிலேயே தெளிவாக உணரப் பட்டது.  துறவிகள் மேன்மைமிக்கவராக இருந்தபோதிலும் அருளடையாளங் களுக்கு குருக்களை நாடி வந்த சிறப்பு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.  துறவறத்தைப் போன்று பல்வேறு நிலைகளும் பணிகளும் திருச்சபையால் உருவாகின.  ஆனால் குருத்துவம் திருச்சபையின் பணிகளை ஊக்குவித்து, ஒருங்கிணைக்கும் பணியாக உருவானது என்பதுதான் வரலாற்று உண்மை.
திருதூதர்கள் வழிவந்த மரபும் திருநிலைப்பாடும் ஆயரோடு உள்ள உறவும் இறைமக்கள் மத்தியில் உள்ள தவிர்க்க முடியாத பொறுப்புக்களும் குருத்துவ வாழ்க்கையின் தனித்தன்மையைப் பறை சாற்றும் பண்புகளாக இன்னும் மிளிர்கின்றன.  துவக்கத் திருச்சபையில் குருத்துவத்தை வாழ்க்கையின் முக்கிய வளர்ச்சி நிலையாக காண்பது இன்றைய குருத்துவ வாழ்வுக்கும் பணிக்கும் வலிமை சேர்க்கிறது.
1. குருக்களின் திருச்சபை சார்பு
குருக்களின் பணியைத் திருச்சபையின் பணிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.  குரு திருநிலைப்படுத்தப்படுவது இறைமக்களுக்காகவே ‘நான் தனியாக வாழ்கிறேன்’ என் தனித்துவத்தை நிலைநாட்டி நான் விரும்பி பணியைச் செய்கிறேன் என்று குருக்கள் சொல்ல முடியாது.  எங்கிருந்தாலும் இறைமக்கள் சமுதாயத்தோடு தொடர்பு உடையவர்கள் குருக்கள்.  இறைமக்கள் சமுதாயம் இல்லையேல் குருத்துவம் இல்லை.
2. அருளடையாள உறவு
அருளடையாளங்கள் குருக்களின் இயல்பிலிருந்து உருவாகும் செயல் பாடுகளே.  எந்தவொரு சமுதாயத்திலும் குரு கிறிஸ்துவின் அருளடையாளமாகத் திகழ்கிறார்.  அருளடையாளங்கள் வழியாக மக்களை இறைவனை நோக்கி அழைத்துச் செல்கிறார்.  அருளடையாளங்களின்மேல் நம்பிக்கையில்லை என்று ஒரு குரு சொல்ல முடியாது.  கிறிஸ்துவின் பிரசன்னத்தை வெளிப்படுத்த அவரது தளமாக அமைவது அருளடையாளங்களே.
3. ஆயரின் அதிகாரத்தில்
குருக்கள் பணி ஆயர்களுக்கு உதவி யாளர்களாக இருப்பது.  ஆயரைத் தவிர்த்து குரு தன் பணியை ஆற்ற முடியாது.  ஆயரின் தொடர்பு இன்றி தன்னிச்சையாகப் பணியாற்ற விரும்பும் நபர்கள் குருத்துவத் திலிருந்து வேறுபட்டவர்கள்.  இறையாவியின் உந்துதலால் இறை மக்களில் சிலர் ஆயரின் அதிகாரத்தின் கீழ் இல்லாமல் வேறு பணிகளுக்குச் செல்லலாம்.  குருக்கள் ஒரு மறைமாவட்ட ஆயரின் கீழ் பணிபுரிபவர்களே துறவற சபைகளைச் சார்ந்த குருக்கள் கூட.  தங்களின் குருத்துவத்தை செயல் படுத்தும் நிலையில் மறைமாவட்ட ஆயர்களின் தலைமையில் செயல் படுபவர்களே.  ஆயர்தான் அவர்களைத் திருநிலைப்படுத்துகிறார்.  அவர்கள் நிறை வேற்றும் திருப்பலிகளில் ஆயரின் பெயரைத்தான் உச்சரிக்கிறார்கள்.
இந்த மூன்று பண்புகளும் துவக்கத் திருச்சபையில் குருத்துவம் உருவான காலத்திலிருந்து நிலைத்த பண்புகள்.  இவையே குருத்துவத்தை மற்ற பணிகளி லிருந்து பிரித்துக் காட்டுகின்றன.  காலத்தால் குருத்துவப் பணியில் ஏற்பட்ட வளர்ச்சிகளை வரும் கட்டுரைகளில் காணலாம். (மலரும்)
அருள்பணி. வலன்டின்

0 comments:

Post a Comment