டாக்டர் கலாம் விவசாயிகளிடம் பெற்றுக்கொண்ட உறுதிமொழிகள்

  1. குழந்தைகள் நமது விலைமதிப்பில்லா சொத்து.
  2. நாம் பெண் குழந்தைகளையும், ஆண் குழந்தைகளையும் சமமாகப் பாவித்து, அவர்களின் உரிமைக்காகவும், கல்வி வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற் காகவும் பாடுபடுவோம்.
  3. சுகாதாரம் மற்றும் வளமான நல்வாழ்வுக்காக நாம் எல்லோரும் சிறு குடும்பத் திட்டத்தை கடைபிடிப்போம்.
  4. கடின உழைப்பால் வருமானம் கிடைக்கிறது.  அதை நாம் மதுபானம் மற்றும் சூதாட்டத்தில் வீணாக்க மாட்டோம்.
  5. நம்முடைய குழந்தைகளுக்கு கல்வியறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவோம்.  ஏனெனில், கற்பதால் அறிவு வளரும்.  அறிவாற்றலால் குழந்தைகள் வாழ்வில் முன்னேற்றம் அடைவர்.
  6. நாம் எல்லோரும் மண்வளத்தையும் காடுவளத்தையும் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.
  7. நாம் எல்லோரும் குறைந்தபட்சம் ஐந்து மரக்கன்றுகளை நட்டு வளர்ப்போம்.
  8. நாம் நம்முடைய குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருப்போம்.

விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே இந்த உறுதிமொழிகள் பொருந்துமில்லையா?

கருணைக் கொலை

யோசித்து யோசித்து மண்டை குழம்பியதுதான் மிச்சம்.  அழுது அழுது கண்கள் வீங்கியதுதான் லாபம்.  மனம் முழுக்க ரணமாய் வலித்தது.  எவ்வளவோ தன்னம்பிக்கையுடன் வாழ்ந்த நாட்கள் சாதனை நாட்கள்தான்.  உடலியல் பிரச்சனைகளோடு போராடிப் படித்து பட்டம் பெற்று, பெற்ற கல்வி வீணாகாமல் சமுதாயத்திற்கு அதை சேவையில் திருப்பித் தந்து “நாடென்ன செய்தது எனக்கென்று யோசிக்காமல் நானென்ன செய்தேன் நாட்டிற்கு” என்ற கொள்கையை  உறுதியாய்க் கொண்டு தன்னால் முடிந்த சேவையை இந்தச் சமுதாயத்திற்குத் தந்தாயிற்று.  இந்த மண்ணில் பிறந்ததற்கு, இந்த தேசத்தில் பிறந்ததற்குப் பெருமைப்பட்டு, நன்றிக் கடன்பட்டு தன் தேசப் பக்தியால் என் தேசத்திற்குத் தந்தாயிற்று.
பக்தியான குடும்பம், வளர்ப்பும் “சக மனிதனை எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாது” என்கிற வளர்ப்புதான்.  இன்றுவரை எவ்வித கெட்டப் பெயரும் எடுத்துத்தராமல் பக்தியில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்தாயிற்று.  மதக் கோட்பாட்டின்படி நல்ல முன்னுதாரணமாய் இத்தனைக் காலம் வாழ்ந்தாயிற்று.  அந்த பக்தி தந்த பலம்தான் வியாதியோடும், மனப் போராட்டத்தோடும் வாழ, பிறரை சந்தோ­ப் படுத்தும் மனநிலையைத் தந்தது.
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் வாழும் உரிமையும் உண்டு.  அதே நேரம் பிறக்கும்போதே இறக்கும் நாளும் நிர்ணயிக்கப்பட்டுத்தான் இருக்கிறது.  இடைப்பட்ட காலத்தில் தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும், ஏன் ஒவ்வொரு வினாடியும்கூட இறைவனுக்கு ஏற்றதாய், மண்ணிற்கு பயனுள்ளதாய், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவியாய், உன்னதமாய் வாழ வேண்டும்.  தன்னை வாழ்வித்த பெற்றோருக்கு உறுதுணையாய் இருந்தும் உடன்பிறப்புகளுக்கும் உறவினர் களுக்கும் நட்பால் நம்மைப் பலப்படுத்திய நண்பர்களுக்குப் பயனாகவும், ஏன்? அனுதினமும் ஏற்படும் போராட்டங்களுக்கு பதில் தரும் போராளியாகவும் இப்படி வாழ்வின் பல பரிமாணங்களை எதிர் கொள்ளும் சூழல்.
இது எல்லாருக்கும் பொதுவானது தான்.  ஆனல்  உடலில் ஊனப்பட்டவர் களுக்கு வலியும் வேதனையும் இரட்டிப்பு மடங்கு.  வெளியே சொல்ல முடியாத தவிப்பு.  பெரும்பாலான ஊனமுற்றோர் அரசாங்கத்தால் மறக்கப்பட்ட பிள்ளைகள், மறுதலிக்கப் பட்டவர்களாவார்கள்.  சட்டங்கள் தீட்டப்படல் பெரும் நன்மையை வழங்குதல் போல தோன்றினாலும் உண்மையில் பயன் பெறுவோர் உண்டோ என்பது கேள்விக் குறியே.
தேசத்தின் கல்விப் பணியில், மருத்துவப் பணியில், சமூக சேவையில், பிறர் நலனில் முன்னிற்கும் மதம் தன் சொந்தப் பிள்ளை களுக்கு ஆறுதல் கரமும், அரவணைப்பும் தராமல் பாராமுகம் காட்டுதல் வேதனையான உண்மையாகும். எங்குச் சென்றாலும் புறக்கணிப்பு, புறம்தள்ளுதல், ஏழையின் சிரிப்பில் காணப்படும் இறைவன் ஏனோ உதவி வேண்டும் ஊனமுற்றோர் வடிவில் தெரியாமல் போய்விடுகிறார்.
குடும்ப உறவுகளிலும் இதே பாராமுக நிலைதான்.  நல்லா இருப்பவர்கள் நல்லா இருப்போருடன் உறவு கொள்வார்கள்.  அவர்கள் இல்லங்களுக்கு இவர்களும், இவர்கள் இல்லங்களுக்கு அவர்களும் போய்விடுவார்கள்.  உறவு கொள்வார்கள்.  ஆனால் ஊனமுற்றோர் இருக்கும் இல்லம் ‡ அதை உறவு என்று சொல்லிக் கொள்வதில் கேவலமோ என்னவோ?  அதே பரமனால் படைக்கப்பட்டவர்கள் தானே இவர்களும்.  இவர்களால் அன்பும் அரவணைப்பும் ஆறுதலும் கிடைக்கும் என நம்பித்தானே, தீர்மானித்துதானே சாமி அந்தந்தக் குடும்பத்தில் ஊனமுற்றோரைப் பிறக்க வைத்துள்ளார்.  அப்புறம் ஏன் பாராமுகம்?
ஊனமான பிள்ளைகளைப் பெற்ற வர்களின் மனம் படும் பாடு, இளமை உள்ளவரை ஓடியாடி மருத்துவம் பார்த்து, பிள்ளைகளைக் கஷ்டப்பட்டு தோளிலும் மார்பிலும் சுமந்து சென்று படிக்க வைத்து, படித்து முடித்ததும் அவர்களுக்காக ஒரு வேலைக்காக, உதவித் தொகைக்காக போராடி, அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு, கைக்கட்டி கூனி குறுகும் காட்சி, வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை நம் உயிர் இருக்கும்வரை உழைத்துக் காப்பாற்றுவோம் என்று தீர்மானித்து, ஓய்வெடுக்க வேண்டிய வயதிலும் ஓடியாடி கஷ்டப்பட்டு, வேலை செய்யும் கொடூரம், சமைத்துப் போட்டு அந்த ஊனமான உயிரைக் காப்பாற்றும் கடமையுணர்வு.
முதுமையும், சோர்வும், இயலா மையும் அதிகரிக்கும்போது பிள்ளைகளின் எதிர்காலம் எண்ணிக் கலங்கும் பெற்ற வயிறு வலிக்க, வலிக்க வருந்தும் தாயும், பிள்ளையின் அநாதரவான நிலையை எண்ணி ரகசிய கண்ணீர் வடிக்கும் தந்தை, பிள்ளையை வாழ்விக்க முடியாமல் தவிக்கும் தவிப்பும், கொன்றுவிடலாம் என்றால் தடுக்கும் மனிதநேயம்.  வாழ்விலும் சந்தோ­ம் இல்லை கடைசியில் சாவிலும் நிம்மதியில்லை.  பெற்றோர் உடல். மன நிலையை எண்ணிக் கலங்கும் தங்கள் கையாலாகா நிலையை எண்ணி வருந்தும் ஊனமுற்றோர்க்கு என்ன வழி?
போராடிப் பார்த்து முடிவெடுத்தான் பிரசன்னா, செத்துவிடுவதுதான் சரி.  வி­ம் கூட கையில் தயார்.  யோசித்துப் பார்க்கையில் தன் சாவும் பிறருக்கும் உதவியாக இருக்கவேண்டும்.  வி­ம் அருந்தி மரித்துவிட்டால் அது சில நாட்கள் மட்டுமே பேசப்படும் வி­யமாக இருக்கும்.          தன் மரணம் அரசாங்கத்தால், மதத்தால், சமுதாயத்தால் பேசப்படும் மரணமாக இருக்கவேண்டும்.  தனக்குக் கிடைக்காவிட்டாலும் தன் போன்ற ஊனமுற்றோருக்கு அரசின் பாதுகாப்பு, மதத்தின் அரவணைப்பு, சமுதாயத்தின் அக்கறை இருக்க வேண்டும்.  ஊனமான பிள்ளைகளைப் பெற்றவர்களுககு இச்சமூகத்தில் ஆறுதலும் உதவிக்கரமும் வேண்டும்.
வெள்ளைத்தாளைக் கையிலெடுத்தான் பிரசன்னா.  தன் நிலையை விளக்கி “கருணைக் கொலை” வேண்டி நாட்டின் முதல் குடிமகளான ஜனாதிபதிக்கு விண்ணப்பம் எழுதினான்.  சாவிலும் எதையாவது சாதித்துக் காட்டவேண்டும் என தன் மரணத்திற்கான ஒப்புதலுக்குக் காத்திருக்க தொடங்கினான்.
சாந்தி ராபர்ட்ஸ்

குருக்களின் ஆண்டில் தவக்காலம்

குருக்கள் வாழ்வின் முன் மாதிரியாக  விளங்கிய, பிரான்ஸ் நாட்டு, லியோன் மறைமாவட்டத்தின் புனித ஜான் மேரி வியானியின் விண்ணகப் பிறப்பின் 150ஆம் ஆண்டை முன்னிட்டு. இவ்வாண்டைக் குருக்கள் ஆண்டாகப் பிரகடனப்படுத்திய திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் இவ்வாண்டிலே குருத்துவத்தின் மேன்மையை இறைமக்கள் உணர வேண்டுமென்பதோடு குருக்கள் தங்கள் வாழ்வைப் புதுப்பித்து. அர்ப்பணத்தை ஆழப்படுத்த வேண்டுமென்றும் விரும்புகிறார்.  இதனைச் செயல்படுத்தும் விதமாகவே பல நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் பல நிலைகளில் , மறைமாவட்ட, தமிழக, இந்திய மற்றும் அகில உலக அளவில், நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  இவைகள் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றாலும் குருக்களின் வாழ்வைப் புதுப்பிப்பது என்பது அவர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சியில் அமையக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
குருப்பட்டத்தின் வழியாக ஒவ்வொரு குருவும் இயேசு கிறிஸ்துவின் நித்திய குருத்துவத்தில் பங்கு பெற்றாலும் அவரது வாழ்வும் அர்ப்பணமும் அவரது பணியின் வழியாக தொடர்ந்து நிறைவுக்குக் கொண்டு வரப்படுகிறது.  “உன்மீது என்  கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள் கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன்” (1 திமொ 1:6) என்று பவலடிகளார் திமொத்தேயுவுக்கு அறிவுறுத்துவது போல , ஒவ்வொரு குருவும் குருப்பட்டத்தின் அருள்வாழ்வைத் தொடர்ந்து புதுப்பித்து வளர்த்தெடுக்கக் கடமைப் பட்டவராக இருக்கிறார்.  இந்தப் புதுப்பித்தல் என்பது ஒவ்வொருவரின் சுய பரிசோதனை யிலேயே நடைபெறுகிறது.
சுயபரிசோதனை செய்ய மிகவும் உகந்த காலமாக இருப்பது தவக்காலம்.  இறை அன்பை, இரக்கத்தை, மன்னிப்பை நிறைவாகப் பெற்றுக்கொடுக்கும் காலம் என்று, இத்தவக்காலத்திலே பல கொண்டாட்டங்கள், வழிபாடுகள் வழியாக இறைமக்களை இயேசுவின் பாடுகளின் பாதையிலே தங்கள் வாழ்வைச் சீர்தூக்கிப் பார்க்க வைக்கும் குருக்கள், அக்கொண் டாட்டங்களைத் தங்கள் வாழ்வையும் பற்றி சிந்தித்துப்பார்க்கப் பயன்படுத்த வேண்டும்.  இறை அருளைச் சுட்டிக் காட்டும் ஒரு கருவியாக மட்டும் நின்றுவிடாது, அந்த அருளைத் தாமும் அனுபவித்து தங்களின் அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்பவர் களாக இருக்க வேண்டும்.  நற்செய்திப் படிப்பினையில் தங்கள் வாழ்வைத் திரும்பிப் பார்க்க வைப்பதே தவக்காலச் செயல்பாடு களின் நோக்கமாக அமைகிறது.
இயேசு கிறிஸ்து தனது பொதுவாழ்வை ஆரம்பிப்பதற்கு முன் நாற்பது நாட்கள் தந்தையோடு இருக்க, பாலைநிலத்திற்குச் சென்று தவம் மேற்கொள்கிறார் (காண் மத் 4:1-11; மாற் 1:12-13; லூக் 4:1-13).  கடவுளின் மகனாக, மக்களை மீட்க வேண்டும் என்ற தெளிவான இலக்குடன் இயேசு இவ்வுல கிற்கு வருகிறார் (காண் யோவா 3:16).  கடவுள் தன்மையில் விளங்கிய அவர், மனித உரு எடுத்த நிலையில் (காண் பிலி 2:6-7), தனது இலக்கைக் கூர்மையாக்க, அதை செயல்படுத்தும் வழிமுறைகளைத் தெளிவு படுத்திக்கொள்ள, பணியின் ஆரம்பத்திலே தந்தையோடு உடன் இருக்க தவம் மேற் கொள்கிறார்.  இந்தத் தவமானது அவரது வாழ்வின் நோக்கத்தை தெளிவுபடுத்திய தோடு, அதனைச் செயலாக்க வேண்டியதற் குரிய சக்தியையும் மன உறுதியையும் கொடுக்கிறது.  தனது பணியில் தந்தையின் பிரசன்னத்தை உறுதிசெய்கிறது.  எனவே தான் பணியில் அழுத்தம், தொய்வு, சோர்வு, தனிமை, தோல்வி ஏற்படும்போதெல்லாம் தான் செல்லும் வழியை உறுதிசெய்து கொள்ள தந்தையைத் தேடிச்செல்கிறார்.  தனிமையிலே, அதிகாலையிலே அவரோடு உறவாடுகிறார் (மாற் 1:35),
குருக்கள், தங்கள் இறையழைத்தலை உணரும்போதே தங்களது அழைப்பின் பணியைப் பற்றிய ஒரு பொதுவான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.  இது, அவர்களின் உருவாக்க நிலையில் வளர்ச்சி பெற்று, கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு பெறுகிறது.  இதன் அடிப்படையில் தான் தங்களது குருப்பட்ட நாளின்போது தங்களுக்கென்று ஒரு குறிக்கோளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.  குருக்கள் எல்லோருக்குமே இயேசுவைப் பின்பற்றுவதும், இறை அரசை அறிவிப்பதுமே அடிப்படையான இலக்காக இருந்தாலும் இதை வாழ்வில் நிறைவேற்றும் விதம்  ஒவ்வொருவருக்கும், அவர்கள் மேற் கொண்டுள்ள பணிக்கேற்ப, பொறுப்பிற் கேற்ப, இடத்திற்கேற்ப, காலத்திற்கேற்ப மாறுகிறது.  இப்படிப்பட்ட மாறுபட்ட சூழ்நிலைகளிலும், எப்போதும் தங்கள் அழைத்தலின் இலக்கிற்கு உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டு மென்றால், அவர்கள் தங்களை அழைத்துள்ள இறைத்தந்தையோடு உறவு கொள்ள வேண்டும்.  இந்த இறை உறவுதான் அவர்கள் செய்யும் எப்பணிக்கும் அர்த்தம் கொடுக்கும்.
உலகிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குருக்கள் உலக மக்களேடு இச்சமூகத்தில் வாழ்வதால், இச்சமூகத்தைப் பாதிக்கின்ற எவ்வித தீமைகளிலிருந்தும் இவர்கள் தப்பு வதில்லை.  இவ்வுலகம் கொடுக்கின்ற மதிப்பீடுகள் மற்றும் உலகமயமாக்கல், நுகர்வுக் கலாச்சாரம், சமூகத்தில் ஏற்படுத்தி யிருக்கின்ற தாக்கங்கள் இவர்கள் வாழ்விலும் பிரதிபலிக்காமலில்லை.  இந்த சவால்களுக்கு மத்தியில், இறையழைத்தலின் நோக்கத்தில் உண்மையுடன் நிலைத்திருக்க வேண்டு மென்றால், குருக்கள் உண்மையிலேயே தங்கள் வாழ்வின் தேடலை முடுக்கிவிட்டு இறைத்தந்தையுடன் உறவாட வேண்டும்.  அதற்குரிய வாய்ப்பைத்தான் இத்தவக்காலம் அவர்களுக்குக் கொடுக்கிறது.      
எனவே, இத்தவக்காலத்தில் குருக்கள் சமூகத்திலும் தங்களைச் சுற்றிலும், குறிப்பாக தங்களிலும் இருக்கின்ற தீமைகளை இனம் கண்டு, அவைகளை எதிர்த்துப் போராட வேண்டும்.  தீமைகளைக் கண்டு பயந்து ஒதுங்கி விடக்கூடாது.  தீமைகளுக்கான காரணங்களை எளிதாக பிறர்மீதும், இச்சமூகத்தின்மீதும், ஏன் கடவுளின்மீதும் சுமத்திவிட்டு, தங்களின் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிடக்கூடாது.  ஏனெனில் இவ்வாண்டு தவக்காலச் செய்தியில் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்  கூறுவது போல, தீமைகளின் பிறப்பிடம் எப்போதும் வெளியிலிருந்து வருவதில்லை.  மாறாக, ஒவ்வொரு மனித இதயத்திலிருந்தே வருகின்றது.  எனவே ஒவ்வொரு குருவும் தனது பொறுப்பை உணர்ந்து தனது எண்ணத்தில், செயலில், வாழ்க்கை முறையில் இருக்கின்ற தீமைகளை, தாழ்ச்சியுடன் ஏற்று, அவைகளைக் களைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.  இது அவர்கள் வாழ்வின் சிலுவையாக அமையும்.  இந்தச் சிலுவைகள் அவர்கள் வாழ்வின் இழுக்காக, அவமானமாக அமையும் என்பதைவிட, அவர்கள் இயேசுவின் உண்மை யான சீடர்களாக தங்களது அழைத்தலில் வாழ வழிவகுக்கும்.  ஏனெனில் “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (மத் 16:24) என்று இயேசு கூறுகிறார்.
வாழ்க்கையில் ஒரு திருப்பம்
ஏற்படுகிறது - அது
வசந்தமாக உருவெடுக்கிறது.
இவ்வளவுதான் வாழ்க்கை என்று
முடித்துவிட அல்ல.
இப்படித்தான் வாழவேண்டும் என்ற உயரிய
சிந்தனையைத் தூண்டுகிறது
எப்போது?
வாழ்க்கையில் அழைப்பு
உண்மையாகும் போது
இறைச்சித்தத்தின்படி வாழும்போது!
இறைத்திட்டத்தை நிறைவேற்றும்போது!


பேரருள்திரு. முனைவர். ச. அந்தோணிசாமி
முதன்மைக் குரு. பாளை மறைமாவட்டம்

ஒரு நல்ல குருவானவர் யார்?

குருக்கள் ஆண்டை முன்னிட்டு சில “முன்மாதிரி குருக்களை” (Models) கண்டெடுத்து அவர்களை பேட்டி கண்டு அவர்தம் பணிகளைப் பதிவு செய்து வந்த நாம் இம்மாதம் முதல்,  ஒரு நல்ல குருவானவர் யார்?  அவர் எப்படி இருக்க வேண்டும்? என மக்கள் எதிர்பார்க் கிறார்கள் என்பதனைப் பதிவு செய்திட முடிவு செய்தோம்.  அதனடிப்படையில் பொறுப்புள்ள பொதுநிலையினராகச் சிறந்த கத்தோலிக்க கிறித்தவர்களாக வாழ முயற்சி செய்து கொண்டிருக்கும் சிலரைச் சந்தித்து இக்கேள்விகளை முன்வைத்தோம்.  அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டதன் அடிப்படையில் இக்கட்டுரையை வடிவ மைக்கின்றோம்.
நல்ல குருவனவர் யார்? என்று கேட்டமாத்திரத்தில் “எல்லா மக்களிடத்திலும் அன்பு செலுத்துபவரே நல்ல குருவானவர்” என்றார் ஒரு பெரியவர்.  தன் தேவைகளைக் குறைத்து ஆசைகளை மறுத்து வாழ்பவரே நல்ல குருவானவர் என்றார் மற்றொருவர்.  ஆக பாமர மக்களின் எதிர்பார்ப்புகள் என்னவென்பது நமக்குப் புரிந்தது.
ஆனால் “திருச்சபை” என்கிற அமைப்பு ஒரு குருவானவரின் பணிகளாக முன் வைப்பது, போதிக்கும் பணி, அர்ச்சிக்கும் பணி, ஆளும் பணி என்கிற முப்பெரும் பணிகளையே.
ஒரு குருவிடமிருந்து சாதாரண மக்களின் எதிர்ப்பார்ப்புக்கும், “திருச்சபை” என்கிற அமைப்பு எதிர்பார்க்கும் பணிகளுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருப்ப தாகவே நமக்குப் பட்டது.
மக்களின் எதிர்பார்ப்புகள் தவறா?  அல்லது திருச்சபையின் எதிர்பார்ப்புகள் தவறா?  எது உண்மை என அறிந்திட மனம் துடித்தது.
எல்லா மக்களிடத்திலும் அன்பு செலுத்து பவராக இருக்க வேண்டும் என்பது அந்த ஆண்டவன் இயேசு இந்த உலகத்திற்கு விதைத்துச் சென்றது.  தேவைகளைக் குறைத்து, ஆசைகளை மறுத்து என்கிற எதிர்பார்ப்பும் அதே ஆண்டவன் இயேசுவின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டது.  “தன்னை மறுத்து . . . பின்செல்லாதவன் என் சீடனாக இருக்க முடியாது” என்கிற அவரின் அறைகூவலை அச்சாரமாகக் கொண்டது.  எனவே சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகள் தவறாக இருக்க முடியாது.  தவறு என்று சொன்னால் அது அந்த இறைமகன் இயேசுவையே, அவரின் அன்புத் தத்துவத்தையே தவறு என்று சொல்வது போல் ஆகிவிடும் எனத் தோன்றியது.
அப்படியயன்றால் ஒரு குருவானவரிடம்  “திருச்சபை” என்கிற அமைப்பு எதிர்பார்க்கும் பணிகளில்தான் இன்னும் சரியான புரிதல்கள், தெளிவுகள் தேவைப் படுகின்றன என்பதாகவே எமக்குப் பட்டது.
ஒரு குருவானவரிடம் திருச்சபை அமைப்பு எதிர்பார்க்கும் முதல் பணி போதிக்கும் பணி என்கிற நற்செய்தி அறிவிப்புப் பணியே.  இந்தப் பணியில் குறைவொன்றும் இல்லை.  ஆனால் எப்படி போதிப்பது என்று வகுத்துச் சொல்லப்படாததே இதன் குறை.  மறையுரை வழியாகவோ, மல்டி மீடியாக்கள் வழியாகவோ அல்லது கல்விக் கூடங்கள் வழியாகவோ போதிக்கிற பணியாகவே திருச்சபை இப்பணியைக் கருதுவதால்தான் இத்தனை ஆண்டுக ளாகியும் இயேசுவை ஏற்றுக் கொண்டவர் களின் எண்ணிக்கை இந்தியாவில் இருந்த இடத்தைவிட்டு ஒரு இஞ்ச்கூட நகராமலேயே இருக்கிறது.  “போதிப்பவர்களோ மிகுதி.  அதன் பலனோ குறைவு” என்று சொல்லு மளவிற்கு இருக்கிறது.
வாயால் அறிக்கையிட்டு போதிப்பதைக் காட்டிலும் வாழ்க்கையால் அறிக்கையிட்டு போதிப்பதுதானே அதிக பலனைக் கொடுக்க முடியும். இதனை உணராமல் வெறுமனே வாயால் போதிப்பதால் என்ன நடக்கிறது.    எனவே வாயால் அல்ல தம் வாழ்க்கையால் நற்செய்தியைப் பறைசாற்றும் சாட்சியாளர் களைப் போதகர்களாக உருவாக்க திருச்சபை கவனம் செலுத்திட வேண்டும்.  ஏனெனில் கடவுள் அன்பானவர், அவர் தம் மகனை உலகிற்கு அனுப்பி உயிரையே கொடுக்கு மளவிற்கு நம்மை அன்பு செய்தார் எனப் போதிக்கும் அல்லது கற்பிக்கும் ஒருவர் அப்படி கற்பிக்கும் போது அதை கவனிக்காமல் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து “சொல்வதைக் கவனிக்காமல் அங்கே என்ன பேச்சு!  முட்டாள்” என கோபப் படுவாரேயானால் . . . அவர் போதித்த செய்தி எப்படி புரிந்து கொள்ளப்படுமென்றால் . . . கடவுள் அன்பானவர்.  ஆனால் அவ்வப்போது முட்டாள், முண்டம் என திட்டக்கூடிய அளவிற்கு கோபமும் படக்கூடியவர் என்றே புரிந்து கொள்ளப்படும் அன்றோ.
எனவே வாயால் அல்ல தம் செயலால், நடத்தையால், வாழ்க்கையால் போதிக்கும் பணியை ஆற்றும் அளவிற்கு பயிற்சி பெற்றவர்களையே குருக்களாக்க வேண்டும்.  மறையுரை ஆற்றுவதற்குத் தரும் பயிற்சியைவிட வாழ்க்கையால் போதிக்கும் வழிமுறைகள் பயிற்றுவிக்கப் படவேண்டும்.
குருக்களின் பாதுகாவலரான புனித மரிய வியான்னி பெரிய மறைவல்லுனரோ, போதிக்கும் திறமையுடையவரோ, அறிவாளியோ அல்ல . .  மாறாக மிக எளிமையான, பணிவு மிகுந்த ஒரு இறை விசுவாசி . . . அவ்வளவே.  ஆக போதிக்கும் பணிக்கு மிகப் பெரிய வல்லுனத்துவம்  தேவையில்லை என்பதை திருச்சபையே ஏற்றுக் கொண்டும் உள்ளது.
குருக்களிடம் திருச்சபை எதிர்பார்க்கும் அடுத்தபணி அர்ச்சிக்கும்பணி.  இதற்கு அடிப்படைத் தேவை கடவுள் நம்பிக்கையும் ஆழ்ந்த விசுவாசமுமே.  இவைகளை அதிகப்படுத்தும் அளவிலும், செப உணர்வில் அழுத்தம் பெறுமளவிலும் பயிற்சி பெற்றவர்களையே குருக்களாக்கிட வேண்டும்.  இறையியல் படிப்பு என்பதன் பெயரில் இந்த இறை நம்பிக்கை ஆழப்பட உதவ வேண்டுமேயயாழிய இருக்கிற நம்பிக்கையையும் இழக்கச் செய்யும் வகையில் விளக்கங்களும், வியாக்கி யானங்களும் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்.  அப்பொழுதுதான் கோயில் பூனை சாமிக்கு அஞ்சாது என்கிற  இன்றைய போக்கு மாறும்.  புனித மரிய வியான்னியின் ஆழ்ந்த விசுவாச வாழ்வே இப்பணிக்கும் சான்றாக நமக்கு முன் உள்ளது.
அடுத்தது ஆளும் பணி என்றொரு பணியைக் குருக்களிடம் திருச்சபை எதிர்பார்க்கிறது.  “ஆளுதல்” அல்லது ஆட்சி செய்தல் என்பது அரசர்களுக்குரியது.  மன்னர் காலத்துக்குரியது.  இன்றைய ஜனநாயகத்திற்கு எதிரானது.  உலக வரலாற்றிலேயே மன்னர், ஆட்சி என்பதெல்லாம் மறைந்து மக்கிப் போய் ஜனநாயகத் தன்மை ஏற்பட்டு தலைவன், வழிகாட்டுதல் என்கிற வார்த்தைகள் வழக்கமாக்கப்பட்டு வாழ்க்கையாக்கப் பட்டுக் கொண்டிருக்க . . . திருச்சபையில் இன்றும் ஆளும்பணி, திரு ஆட்சியாளர்கள் போன்ற கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப் படுவது ஆச்சரியத்தையே அளிக்கிறது.  அந்த மோசமான தன்மையை மறைப்ப தற்காக ஆளும் பணி என்றும், திருஆட்சி யாளர்கள் என்றும் சில அடை மொழிகளைச் சேர்த்துக் கொண்டுள்ளது.  ஆளுதல் அல்லது ஆட்சி செய்தல் என்பது பணியாக இருக்கவே முடியாது.
அங்ஙனமே ஆட்சியாளர்கள் முன்பு திரு என்கிற வார்த்தையைச் சேர்த்து விட்டால் அதற்கு தனி மதிப்போ, புனிதமோ வந்துவிடாது.  ஏனெனில் ஆட்சி செய்தல் என்கிற பொருள்படும் ஆளுதல் என்பதும், பணி செய்தல் என்பதும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமானது.
ஆட்சி என்றால் அங்கே அதிகாரம் இருக்கும்.  அதிகாரம் இருந்தால் அங்கே ஆணவம் இருக்கும்.  அதிகாரம், ஆணவம் இருக்குமிடத்தில் அன்பு இருக்காது. அன்பு இல்லையயனில் அங்கே ஆண்டவன் இல்லை . . .  இதை உணர்ந்துதான் இறைமகன் இயேசு இறையாட்சி என்கிற வார்த்தையைக்கூட கையாளாது “நிறை வாழ்வு” என்கிற அற்புதமான சொல்லாடலைப் பயன்படுத்துகிறார்.
ஆட்சி, ஆளுதல் போன்ற சொல்லா டல்களே அன்புக்கு எதிரானது.  இறை அன்பர்களுக்கு எதிரானது.  மனதில் மப்பையும் மமதையையும் ஏற்படுத்தக் கூடியது.
எனவே ஆளும் பணியைத் திருச்சபை குருக்களிடம் எதிர்பார்க்க முடியாது ‡ கூடாது.
மாறாக வழிநடத்தும் பணியை அல்லது வழிகாட்டும் பணியையே எதிர்பார்க்க முடியும்.  அந்த வழிநடத்தலும் வழிகாட்டலும் தன்னிச்சையாக அல்ல மாறாக தான் சார்ந்திருக்கும் பங்கு சமூகத்தின் ஆலோசனையோடு, உடன் செயல்பாட்டோடு தம் ஆலோசனையையும் செயலையும் இணைத்து ஜனநாயக தன்மையோடு வழிகாட்டிட வேண்டு மென்றே சாதாரண பாமர மக்கள் எதிர்பார்க்கிறார்கள் . . .  அதனையே அவர்கள் மிகச் சாதாரணமாய், “எல்லா மக்களிடத்திலும் அன்பு செலுத்துபவரே நல்ல குருவானவர்” என்கிற அளவில் தம் எதிர்பார்ப்பாக வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த சாதாரண மக்களின் மனநிலையை புரிந்து நடக்கும் குருக்கள் பெருகிட இந்த குருக்கள் ஆண்டு துணை செய்தால் அதுவே குருக்களின் பாதுகாவலரான புனித மரிய வியான்னியின் ஜுபிலி கொண்டாட்டத்தில் அவருக்கும் செலுத்தும் மரியாதை . . .  மற்றவையயல்லாம் வழக்கமான வாடிக்கையான வேடிக்கை செயல்களே.
ஏனெனில்
பாரஞ் சுமக்கும் பாமரர் மத்தியிலே
பரமன் வாழ்கிறார் . . .
பரமன் வாழும் பரிசுத்த இடத்திலே
புனித வியான்னியும் இருக்கின்றார் . . .
எளிமை, விசுவாசம், அன்பு வழியில்
வலிமை பெற்று வியான்னியின் வழித்தோன்றலாகிட முடியும்.
எஸ். எரோணிமுஸ், “ஊற்றுக்கண்” ஆசிரியர், திருச்சி