பக்தியான குடும்பம், வளர்ப்பும் “சக மனிதனை எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாது” என்கிற வளர்ப்புதான். இன்றுவரை எவ்வித கெட்டப் பெயரும் எடுத்துத்தராமல் பக்தியில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்தாயிற்று. மதக் கோட்பாட்டின்படி நல்ல முன்னுதாரணமாய் இத்தனைக் காலம் வாழ்ந்தாயிற்று. அந்த பக்தி தந்த பலம்தான் வியாதியோடும், மனப் போராட்டத்தோடும் வாழ, பிறரை சந்தோப் படுத்தும் மனநிலையைத் தந்தது.
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் வாழும் உரிமையும் உண்டு. அதே நேரம் பிறக்கும்போதே இறக்கும் நாளும் நிர்ணயிக்கப்பட்டுத்தான் இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும், ஏன் ஒவ்வொரு வினாடியும்கூட இறைவனுக்கு ஏற்றதாய், மண்ணிற்கு பயனுள்ளதாய், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவியாய், உன்னதமாய் வாழ வேண்டும். தன்னை வாழ்வித்த பெற்றோருக்கு உறுதுணையாய் இருந்தும் உடன்பிறப்புகளுக்கும் உறவினர் களுக்கும் நட்பால் நம்மைப் பலப்படுத்திய நண்பர்களுக்குப் பயனாகவும், ஏன்? அனுதினமும் ஏற்படும் போராட்டங்களுக்கு பதில் தரும் போராளியாகவும் இப்படி வாழ்வின் பல பரிமாணங்களை எதிர் கொள்ளும் சூழல்.
இது எல்லாருக்கும் பொதுவானது தான். ஆனல் உடலில் ஊனப்பட்டவர் களுக்கு வலியும் வேதனையும் இரட்டிப்பு மடங்கு. வெளியே சொல்ல முடியாத தவிப்பு. பெரும்பாலான ஊனமுற்றோர் அரசாங்கத்தால் மறக்கப்பட்ட பிள்ளைகள், மறுதலிக்கப் பட்டவர்களாவார்கள். சட்டங்கள் தீட்டப்படல் பெரும் நன்மையை வழங்குதல் போல தோன்றினாலும் உண்மையில் பயன் பெறுவோர் உண்டோ என்பது கேள்விக் குறியே.
தேசத்தின் கல்விப் பணியில், மருத்துவப் பணியில், சமூக சேவையில், பிறர் நலனில் முன்னிற்கும் மதம் தன் சொந்தப் பிள்ளை களுக்கு ஆறுதல் கரமும், அரவணைப்பும் தராமல் பாராமுகம் காட்டுதல் வேதனையான உண்மையாகும். எங்குச் சென்றாலும் புறக்கணிப்பு, புறம்தள்ளுதல், ஏழையின் சிரிப்பில் காணப்படும் இறைவன் ஏனோ உதவி வேண்டும் ஊனமுற்றோர் வடிவில் தெரியாமல் போய்விடுகிறார்.
குடும்ப உறவுகளிலும் இதே பாராமுக நிலைதான். நல்லா இருப்பவர்கள் நல்லா இருப்போருடன் உறவு கொள்வார்கள். அவர்கள் இல்லங்களுக்கு இவர்களும், இவர்கள் இல்லங்களுக்கு அவர்களும் போய்விடுவார்கள். உறவு கொள்வார்கள். ஆனால் ஊனமுற்றோர் இருக்கும் இல்லம் ‡ அதை உறவு என்று சொல்லிக் கொள்வதில் கேவலமோ என்னவோ? அதே பரமனால் படைக்கப்பட்டவர்கள் தானே இவர்களும். இவர்களால் அன்பும் அரவணைப்பும் ஆறுதலும் கிடைக்கும் என நம்பித்தானே, தீர்மானித்துதானே சாமி அந்தந்தக் குடும்பத்தில் ஊனமுற்றோரைப் பிறக்க வைத்துள்ளார். அப்புறம் ஏன் பாராமுகம்?
ஊனமான பிள்ளைகளைப் பெற்ற வர்களின் மனம் படும் பாடு, இளமை உள்ளவரை ஓடியாடி மருத்துவம் பார்த்து, பிள்ளைகளைக் கஷ்டப்பட்டு தோளிலும் மார்பிலும் சுமந்து சென்று படிக்க வைத்து, படித்து முடித்ததும் அவர்களுக்காக ஒரு வேலைக்காக, உதவித் தொகைக்காக போராடி, அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு, கைக்கட்டி கூனி குறுகும் காட்சி, வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை நம் உயிர் இருக்கும்வரை உழைத்துக் காப்பாற்றுவோம் என்று தீர்மானித்து, ஓய்வெடுக்க வேண்டிய வயதிலும் ஓடியாடி கஷ்டப்பட்டு, வேலை செய்யும் கொடூரம், சமைத்துப் போட்டு அந்த ஊனமான உயிரைக் காப்பாற்றும் கடமையுணர்வு.
முதுமையும், சோர்வும், இயலா மையும் அதிகரிக்கும்போது பிள்ளைகளின் எதிர்காலம் எண்ணிக் கலங்கும் பெற்ற வயிறு வலிக்க, வலிக்க வருந்தும் தாயும், பிள்ளையின் அநாதரவான நிலையை எண்ணி ரகசிய கண்ணீர் வடிக்கும் தந்தை, பிள்ளையை வாழ்விக்க முடியாமல் தவிக்கும் தவிப்பும், கொன்றுவிடலாம் என்றால் தடுக்கும் மனிதநேயம். வாழ்விலும் சந்தோம் இல்லை கடைசியில் சாவிலும் நிம்மதியில்லை. பெற்றோர் உடல். மன நிலையை எண்ணிக் கலங்கும் தங்கள் கையாலாகா நிலையை எண்ணி வருந்தும் ஊனமுற்றோர்க்கு என்ன வழி?
போராடிப் பார்த்து முடிவெடுத்தான் பிரசன்னா, செத்துவிடுவதுதான் சரி. விம் கூட கையில் தயார். யோசித்துப் பார்க்கையில் தன் சாவும் பிறருக்கும் உதவியாக இருக்கவேண்டும். விம் அருந்தி மரித்துவிட்டால் அது சில நாட்கள் மட்டுமே பேசப்படும் வியமாக இருக்கும். தன் மரணம் அரசாங்கத்தால், மதத்தால், சமுதாயத்தால் பேசப்படும் மரணமாக இருக்கவேண்டும். தனக்குக் கிடைக்காவிட்டாலும் தன் போன்ற ஊனமுற்றோருக்கு அரசின் பாதுகாப்பு, மதத்தின் அரவணைப்பு, சமுதாயத்தின் அக்கறை இருக்க வேண்டும். ஊனமான பிள்ளைகளைப் பெற்றவர்களுககு இச்சமூகத்தில் ஆறுதலும் உதவிக்கரமும் வேண்டும்.
வெள்ளைத்தாளைக் கையிலெடுத்தான் பிரசன்னா. தன் நிலையை விளக்கி “கருணைக் கொலை” வேண்டி நாட்டின் முதல் குடிமகளான ஜனாதிபதிக்கு விண்ணப்பம் எழுதினான். சாவிலும் எதையாவது சாதித்துக் காட்டவேண்டும் என தன் மரணத்திற்கான ஒப்புதலுக்குக் காத்திருக்க தொடங்கினான்.
சாந்தி ராபர்ட்ஸ்
0 comments:
Post a Comment