இன்று உலகளவிலே மதங்களிடையே போட்டா போட்டி நிலவி வருகிறது. ஒவ்வொரு மதமும் ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்ற நிலையில் தங்கள் தங்கள் அஸ்த்தரங்களை ஏவி வருகின்றன. அந்தந்த மதத்து நியாயப்பிரமாணங்களுக்கு ஏற்ப வாழும் மக்கள் ஒரு புறம்; எல்லா மதங்களிலும் ‘ஏதோ ஒன்று இருக்கிறது’ என்று சமதர்ம நோக்கில் தாவும் மக்கள் மறுபுறம். மதங்களின் பாதை வெவ்வேறாக இருந்தாலும் சேரும் இடம் ஒன்றுதான் என்று சொல்லிக்கொண்டு உண்மையை அறிந்தவர்களாய் - அறியாதவர்களாய் தான், தனது என்ற அதீத போக்கில் கொள்கைப் பிடிப்போடு வாழ்வதாக பலர் இருக்கிறார்கள். இறைப்பற்று இல்லாத சிலர் ‘பகுத்தறிவால்’ ஆளப்படுகிறார்கள். யூதர்களைப் போன்றவர்கள் ‘மெசியா’ எப்போது வருவார்? என்று இன்றும் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே, சுற்றி வந்து முணு முணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்? என சிவ வாக்கியார் கூறுவது போல் இறைவனை உள் அகத்தே தேடவேண்டும். சாத்தான் கூட பேசுவான் - காட்சி தருவான் - ஆட் கொள்வான். வெளி அடையாள சடங்காசார அனுட்டானங்களைக் களைந்து போட்டி மனப்பான்மை, கட்சி மனப்பான்மை அற்று ஆண்டவரிடம் வேண்டும் ஆயக்காரனைப் போல் வாழ்ந்தால் நமக்குள்¼ள வாசம் செய்யும் ஆவியானவரை இனம் காண முடியும். ஆவியானவர் உண்மைக்குச் சாட்சியாய் நம்மை இருக்கச் செய்வார்.
‘நான் என் செயும் நமை நாடி வந்த கோள் என் செயும் கூற்றமும் என் செயும்’ எனும் திருமூலர் வாக்குப்படி சகுன சாத்திர நாள் நட்சத்திர சங்காத்தியங்களை அறவே ஒழிக்க முற்படவேண்டும். ஒரு பக்கம் கடவுள். மறுபக்கம் சாத்தான் என்றால் வேடிக்கையாகத்தான் உள்ளது. அகம் கறுத்து புறம் வெளுத்து சமத்துவம் பேசிட வந்திடுவார் என்ற வள்ளலார் கூற்றுக்கு மாறாய் மனிதநேய மண்புகள் குறுகிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். தன் இனம், தன் சாதி, தன் மதம், தன் சொந்தம், தன் நாடு என்ற உணர்வுகளைத் தாண்டி உலகளாவிய விசாலப் பார்வை வேண்டும்.
மத கோட்பாடுகளை முறையாக சரியாக நாளும் பின்பற்றி வருகிறோம். கோவில், குளம் என்று சுற்றி வருகிறோம்; எங்களைப் போன்ற பக்தர்கள் உண்டா? என்று மார்தட்டும் மாந்தர் வாழ்வதற்காக, அடுத்தவனைவிட உயர்வாய் வாழ்வதற்காகப் போடும் தகிடு தத்தங்கள் எத்தனை எத்தனை? ‘மனசாட்சி’ என்று சொல்லிக்கொண்டு மனமும் இல்லை சாட்சியும் இல்லை என்றுதானே பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? கிறிஸ்து நம்மில் உயிர்க்க, உள்ளங்களிலும் இல்லங்களிலும் வந்து தங்க ‘இறைவார்த்தைப்படி’ வாழக் கடமைப்பட்டிருக்கிறோம்.
‘பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்’என்று சொன்ன தெய்வத்திற்கு இரக்கம் சார்ந்த செயல்பாடுகளை வாழ்வாக்குவோம். ‘எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்’ என்ற வார்த்தைக்கேற்ப ‘மனசாட்சியுள்ள மகிழ்ச்சி எங்கள் மகிழ்ச்சி’ என்று சொல்ல முடியுமா? இவ்வுலகில் மனிதர் நாம் ஒருவரை ஒருவர் ஏமாற்றி ஏய்த்து மறைத்து வாழ முற்படுகிறோம். ‘உங்கள் உடலோ இங்குள்ளது. உள்ளமோ வெகு தொலைவில் உள்ளது’ என்ற நம் இறை இயேசுவின் வாக்கு இன்றளவிலும் பொய்யா? தான் வணங்கும் ‘கடவுள்’ உண்மை என்று பழக்கத்தினால் வந்து விட்ட மக்களுக்குள்ள ‘விசுவாசம்’ நம்மிடையே உள்ளதா? ‘கோயில் பூனை பூசாரிக்கு அஞ்சுவதில்லை’ என்பதைப் போல் ஆண்டவரின் தேவ நற்கருணையைப் பயம் இன்றி தக்க தகுதி இன்றி வாடிக்கையாகப் பெறுவோர் எண்ணிக்கை பெருகிவிட்டதன்றோ? திருப்பலியும் திரைப்பட விமர்சனம் போலல்லவா ஆகிவிட்டது!
ஆண்டவர் சொல்கிறார், “காலம் நெருங்கி வந்து விட்டது. இதற்கிடையில் தீங்கு புரிவோர் நன்மைக்கு மாறட்டும். இழுக்கானவற்றைச் செய்வோர் பரிசுத்தமாகட்டும்; தூயோர் தூய்மையானவற்றைச் செய்து கொண்டே இருக்கட்டும்; இதோ! நான் விரைவில் வருகிறேன்.” இறைவன் மதமாற்றத்தை அல்ல! மனமாற்றத்தையே விரும்புகிறார். மனம் மாறுவோம்! மாற்றம் காண்போம்! உயிர்த்த இயேசு நம் அனைவரிலும் நிலைத்து நின்று வழி நடத்துவாராக!
ச. செல்வராஜ், இயேசு இல்லம், விழுப்புரம்
0 comments:
Post a Comment