விடுதலையின் கீதங்கள் விடியலின் முழக்கங்களே!

அடிமை விலங்குகள் உடைப்பதும், மனிதர்கள் மாண்போடு வாழ வழிவகை செய்வதும் மானிடராய்த் தம்மைக் கருதும் எல்லாரும் செய்வது அவசியம். எனவே அடிமைத்தனத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்க்கும் முயற்சியில் அவ்வப்போது மட்டுமல்ல வாய்ப்பு
கிடைக்கும் போதெல்லாம் நன்மனத்தோர் அனைவரும் ஈடுபட வேண்டும்.
 
அதைத் தான் அன்னை மரியா ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றியிருக்கிறார்.
இது முதல் எல்லாத் தலைமுறையினரும் தன்னைப் பேறுடையாள் என்றிடுமே எனப்  போற்றுகின்ற செயல்பாடுகள் நடக்கும் என இறைவாக்காக அன்னை மரியா உரைத்தது
இன்று வரை நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
மேடுகள் பள்ளங்கள் எல்லாம் நிரவப்படும், சமநிலை தோன்றும். ஏற்றத் தாழ்வுகள் இனி  எதுவும் இல்லை. இல்லை இனி இருள் எங்கும் ஒளிமயமே என்றொரு விதி செய்ய கனவு கண்ட பெண்மணி அன்னை மரியா.

அன்னையின் விண்ணேற்பு, விடியல் தேடும் அனைவருக்கும் ஒரு நம்பிக்கை விதையை நட்டு வைக்கும் அற்புதமான நிகழ்வு. எனவே விடியலுக்கான முழக்கங்களை விடுதலையின் கீதங்களாக நாமும் முழங்க வேண்டும்.
எந்நிலை வரினும் அன்புப் பணியில் அயராது உழைக்கவும் அடுத்தவர் விழிநீர் துடைக்க முயல்வதும், கண்ணோட்டம் உடையவர்களாக வாழ்வதும் அன்னை மரியாவின் அன்பு மக்களாகிய நம் அனைவரின் கடமை. இந்தக் கடமையை யாரும் தட்டிக் கழித்து விட முடியாது.
எளியவர் தோழமையில் இறைபணி செய்வதும் புதியதொரு சமூகத்தைக் கட்டி  எழுப்புவதும் வேண்டும். கெட்ட போரிடும் உலகை இடித்துத் தகர்க்கவும், அமைதிப்புறா  சிறகடிக்க ஏற்றதொரு நிலையை உருவாக்குவதும் நிச்சயமாகச் செய்ய வேண்டும்.

எனவே பாதிக்கப்பட்ட மனிதரின் குரலை ஓங்கி ஒலிக்கவும்,விடுதலையின் பாதையில்
நிழல் தரும் மரங்களை நடுவதும் வேண்டும். புதிய முயற்சிகளைப் பதியம் செய்யும்  நாற்றங்கால்களை நாமாக நமக்கு அன்னை மரியா சிறந்த மாதிரி.

பணி. ஜெமி, திண்டுக்கல்

0 comments:

Post a Comment