ஆலயம் செல்வோம் புனிதமடைவோம்

ஒரு முறை புத்தகம் ஒன்றில் கீழ்க்கண்ட நிகழ்ச்சியை வாசித்து வியப்படைந்தேன்.  அப்புத்தக ஆசிரியர் இவ்வாறு எழுதுகிறார் “நான் பிறப்பில் ஒரு கிறிஸ்துவன் அல்ல.  ஆனால் நான் பல வருடங்களாய் தொடர்ந்து இயேசு பிறப்பின் நாளில் நள்ளிரவு திருப்பலியில் பங்கு பெறும் பழக்கத்தைக் கடைபிடித்து வருகிறேன்”
“குறிப்பாக மிகப் பழமையான ஆலயத்தில் நடக்கும் திருப்பலியில் கலந்து கொள்ளவே நான் விரும்புவேன்.  நான் ஆலயம் செல்வதற்கு ஒரு காரணம் உண்டு.  மிகப் பழமையான ஆலயத்தில் அநேக ஆண்டுகளாய் மக்கள் மண்டியிட்டு பல மணி நேரங்கள் ஜெபித்திருப்பார்கள்.  ஒவ்வொரு நாளும் ஒரு குரு அங்கு திருப்பலி நிறைவேற்றி யிருப்பார்;  பல மணி நேரங்கள் இறைவனைத் தியானித்து இருப்பார்கள்.  பக்திப் பாடல்கள் ஆலய வழிபாட்டு நேரத்தில் பாடப்பட்டிருக்கும்;  இப்பக்தி நிகழ்வுகள் அந்த ஆலயத்தையும் அதன் சுவர்களையும் புனிதப்படுத்தி இருக்கும் என்பது ஒரு உண்மையான கருத்து”.
“அந்த ஆலயத்தில் பக்தியோடு ஜெபித்த பக்தர்களின் புனித எண்ண அலைகள் அந்த ஆலயத்தைப் புனிதப் படுத்தியிருக்கும்.  ஒரு ஆலயம் மேலும் மேலும் புனிதமாக்கப்படுவது அங்கு ஜெபிக்கும் பக்தர்களின் எண்ணங்களால் தான்.  எனவே இயேசு பிறந்த நாளில் நான் ஆலய வழிபாட்டில் கலந்து கொள்வதால் பக்தர்களின் எண்ண அலைகளாலும் ஆலயத்தின் புனிதத் தன்மையான நான் புனிதமடைந்து திரும்புகிறேன் என்பது என் நெடுநாளைய அனுபவம்” என்கிறார்.
திருப்பாடலில் இவ்வாறு வாசிக்கிறோம்.  “உமது ஆலய முற்றங்களில் ஒரு நாள் இருப்பது வேறு இடத்தில் ஆயிரம் நாட்கள் வாழ்வதைவிட உண்மையிலேயே மேலானது.  பாவிகளின் கூடாரங்களில் தங்குவதைவிட என் இறைவனது இல்லத்தின் வாயிலில் நிற்பதே மேலானது” (திபா 83:10-11;  சங் 83:10-11) எனக் காண்கிறோம்.
ஒவ்வொரு யூதரும் ஆண்டவரின் திருவுளப்படியே ஒவ்வொரு ஆண்டும் பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாட ஜெருசலேம் ஆலயம் செல்ல வேண்டும் என்பது நித்தியக் கடமையாய் இருந்தது.
அவ்வண்ணமே இயேசுவின் பெற்றோர் 12 வயது நிரம்பிய இயேசுவை அழைத்துக் கொண்டு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து எருசலேம் நகர் செல்கிறார்கள்.
பாஸ்காத் திருவிழா முடிந்து திரும்பி வரும்பொழுதுதான் இயேசுவின் பெற்றோருக்குச் சிறுவன் இயேசுவைக் காணவில்லை என்பது தெரிந்தது.  மூன்று நாட்களுக்குப்பின் இயேசுவைத் திரும்ப வந்து தேடிய பெற்றோருக்கு அவர் கோவிலில் போதகர்கள் நடுவில் அவர்களை வினவுவதும் கேட்பதுமாய் இருப்பது தெரிந்தது.
உன் தந்தையும் நானும் உம்மை மூன்று நாட்கள் தேடி அலைந்தோமே எனக் கேட்டதற்கு இயேசு இவ்வாறு கூறுகிறார், “ஏன் என்னைத் தேடினீர்கள்.  என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்கிறார் (திபா 42:4)  சங் 41:4ல் தாவீது அரசர் அவ்வாறு பாடுகிறார்.
“மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து அவர்களை அழைத்துக் கொண்டு இறைவனின் இல்லத்திற்குச் சென்றேனே! அக்களிப்பும் புகழ் இசையும் முழங்க விழாக் கூட்டத்தில் நடந்தேனே!  இவற்றை யயல்லாம் நான் நினைக்கும்போது என் உள்ளம் உருகுகிறது” என்கிறார்.
இறைவன் நமக்குத் தந்திருப்பவை களில் பத்தில் ஒரு பகுதியை நாம் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும் என்பது இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளை (மலாக் 3:10).
எனவே நமக்கு இறைவன் தரும் ஒவ்வொரு நாள் 24 மணி நேரத்திலும் 10 ஒரு பகுதியான 2.40 மணித் துளிகளை இறைப்பாதத்தில் அமர்ந்து ஜெபிக்க வேண்டும் என்பது கட்டாயம். நாம் அழுக்கடைந்த நிலையிலோ அல்லது தூய்மையற்ற நிலையிலோ இருக்கும் பொழுது நாம் தண்ணீரில் மூழ்கி எழும் பொழுது புத்துணர்வும், புத்தெழுச்சியும் நம் சரீரத்தில் பரவிவிடுகிறது.  அதுபோலவே நாம் உள்ளன்புடன் ஆலயத்தில் இறைப் பிரசன்னத்தில் மூழ்கும்பொழுது நாம் பரிசுத்த மாக்கப்படுகிறோம் என்பதே உண்மை.
குருக்கள் ஆண்டாகிய இன்றைய நாட்களில் குருவானவர்கள் அனைவரும் புனித ஜான் மரிய வியான்னியின் இறை வாழ்வை நாம் பின்பற்றவேண்டும் என்று பரிசுத்த தந்தை 16ஆம் ஆசீர்வாதப்பர் குறிப்பிடுகிறார்.
இப்புனித ஜான் மரிய வியான்னியும் வியந்த ஒரு புனித மனிதர் உண்டு.  அவர் அவருடைய பங்கு ஆர்ஸ் கிராமத்தின் விவசாயி.  அவர் செய்த நற்காரியம் என்ன?
அந்த விவசாயி ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்து குளித்து முடித்தபின் ஆலயம் வந்துவிடுவார்.  எந்த ஜெப புத்தகமும் இல்லாதவாறு திவ்விய நற்கருணையைப் பார்த்துக் கொண்டே மண்டியிட்டிருப்பார்.  வியப்படைந்த புனிதர் அவரிடம் வந்து “என்ன ஜெபிக்கிறீர்கள்?” எனக் கேட்டதற்கு அவர் சொன்னார் “சுவாமி இயேசு என்னைப் பார்க்கிறார்.  நான் அவரைப் பார்க்கிறேன்” என்றார்.  இவரின் பதில் புனிதரையும் ஆச்சரியப்பட வைத்தது.
நாமும் ஆலயம் செல்வோம் புனித மடைவோம்!  ஆமென்.
Fr. ச. ஜெகநாதன், அருப்புக்கோட்டை

0 comments:

Post a Comment