இறையழைத்தல் - ஒரு கண்ணோட்டம்

இந்த 21-ம் நூற்றாண்டில் 'இறையழைத்தல்' என்ற வார்த்தை பரந்துபட்ட ஒரு கண்ணோட்டத்தில், எல்லா மக்களுக்கும் கடவுளால் தரப்படுகின்ற அழைப்பு என்ற சிறப்புக்குரியது. தம் ஆவியின் வழியாகத் திருமுழுக்கில் எல்லா மக்களையும் தம் சொந்தப் பிள்ளைகளாக அழைத்தார். ஆயினும் இவ்வாழ்வு துறவற - குருத்துவ வாழ்வின் மூலமாக சிறப்புக் கொடையாகத் தரப்படுகின்றது என்பது திருச்சபை வரலாற்றில் காணப்படுகின்ற நிலை.

'தங்கள் அழைத்தலாலும் திருநிலைப்பாட்டாலும் புதிய ஏற்பாட்டின் திருப்பணியாளர்கள் கூடுமிடத்தில் கடவுளின் மக்களுக்குள்ளேயே பிரித்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த பிரிவுநிலை கடவுளின் மக்களிடமிருந்தோ வேறு எந்த மனிதர்களி;டமிருந்தோ அவர்களைப் பிரிப்பதற்காக அன்று: மாறாக, ஆண்டவர் எந்தப் பணிக்காக அவர்களை அழைத்திருக்கின்றாரோ, அதற்கு அவர்கள் முழுவதும் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே.' இப்பிண்ணணியில், இரண்டாம் வத்திக்கான் சங்கக் கூற்றின்படி,
'...மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்பட்ட திருப்பணியாளர்கள் மற்ற மனிதர்களுடன் சகோதரர்களாக வாழ்கின்றார்கள்.'
இந்தப் பணிவாழ்வு கடவுளிடமிருந்து கொடையாகத் தரப்படுகின்றது. 'இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.' (மாற்கு 3:13)இதனால் இறையழைத்தல் என்பதைக் கடவுளின் விருப்பத்திற்கும் திட்டத்திற்கும் ஒப்படைத்து 'ஆம்' எனப் பதில்கூறுவோர் இறையரசுப் பணிக்குத் தம்மை முழுமையாக ஒப்படைக்கின்றார்.

இன்று இந்த இறையழைத்தலின் நிலை என்ன?
உலகின் பல்வேறு இடங்களின் சூழ்நிலைகளை மையப்படுத்திப் பார்க்கும்போது, பொதுவாக இறையழைத்தல் குறைந்துள்ளது என்பதே கருத்து. இதே போன்று குருத்துவத்திற்கோ, துறவறத்திற்கோ இன்று தம்மையே அர்ப்பணிக்கும் இளையோர், இளம்பெண்களின் எண்ணிக்கைக் குறைவு. ஒட்டுமொத்தமாகப் மதத்தின் மேலுள்ள பற்று குறைகிறது... கடவுள் பக்தி, விசுவாசம் தளர்ச்சியுறுகிறது... பொருளாதார உலக சிந்தனைகள் மேலோங்குகிறது என்பது போன்ற பல காரணங்கள் கூறலாம். ஆயினும் கீழை நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மேலை நாடுகளைப்போன்று இறையழைத்தலுக்குக் கடினமான பாதிப்பு இல்லை எனினும், காலப்போக்கில் பெறும்பற்றாக்குறையை நாம் சந்திக்க நேரிடும். மேலோட்டமாக இந்தக் காரணங்களைச் சிந்திக்கின்ற போது இன்றைய கலாச்சாரம், பொருளாதார மோகம், விசுவாசத்தளர்ச்சி, குடும்;பங்களில் குழந்தைகளின் எண்ணிக்கைக் குறைவு

இது தவிர இன்று மக்களின் பார்வையில் இறையழைத்தல் என்பது பற்றிய மாறுபட்ட சிந்தனையே மேலோங்கியுள்ளது. குருத்துவ, துறவற வாழ்வு என்பது சுகமான வாழ்வு...பொருளாதாரப் பிரச்சனையற்ற வாழ்வு...என்ற வித்தியாசமான சிந்தனைகளுக்கு மத்தியில் இறையழைத்தல் சந்திக்கின்ற சவால்கள் என்ன?

ஒருவகையில் இறையழைத்தலுக்கு விருப்பம் தெரிவிக்கும் இளைஞர், இளம்பெண்கள் தம் மனதில் துறவற, குருத்துவ பயிற்சியின்போது சந்திக்கும் சவால்கள் பல. இதைவிடவும் இறையழைத்தலுக்கான ஆசை இருந்தும் 'சரி' எனப் பதில் கூறமுடியாமல் போகும் நிலைக்கானக் காரணங்கள், சவால்கள் என்ன?

1. இளையோரின் குழு உணர்வுக் கலாச்சாரம்
இன்று வளந்து வருகிற இளையோர்கள் பல சமயங்களில் தாங்களாகவே சிந்திக்க விடாதபடிக்கு, அவர்களைச் சூழ்ந்துள்ள அல்லது அவர்கள் சார்ந்துள்ள குழுக்கள் - நண்பர்கள் காரணமாயிருக்கின்றன. அவற்றின் நடைமுறைகள், செயல்பாடுகள் பல்வேறு பாதிப்புகளை உண்டுபண்ணுகின்றன. மாறுபட்ட இத்தகைய செயல்பாடுகளைக் கொண்டவர்கள் பல சமயங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவதும் மதிக்கப்படுவதும் இல்லை. குழு உயர்வுக்கும் கலாச்சாரத்திற்கும் பயந்து தம் தனித்தன்மையைக் காட்டமுடியாதவர்கள் இன்று இளையசமூக அக்கறையைச் சவாலாகச் சந்திக்கின்றனர். இந்நிலை இறையழைத்தல் என்ற நிலைக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
துறவறம் தழுவுவது என்பது இன்று இளையோர் மத்தியில் மதிப்புமிக்கதாகப் போற்றப்படாத சூழலில் இறையழைத்தலுக்கான ஆர்வமும் ஆசையும் இல்லாத மனநிலை உருவாகிறது.

2. வளர்ந்துவரும் ஊடகத் தாக்கங்கள்
தீமைகளை நல்லவையாகச் சித்தரிப்பது – ஆசைகளைக்கூட தேவைகளாகக் காட்டுவது – வக்கிரகங்களையும் அழகு எனக் கூறுவது எல்லாமே ஊடகத்தின் இன்றைய நிலையில் ஒருபுறம். மறுபுறத்தில் நன்மைகளையும் பாராட்டுகிறோம். ஆயினும் முறையற்ற, சிந்தனையற்ற, பொழுதுபோக்கு என்ற பின்னணியில் உயிர்களை மட்டுமே முன்னிலைப்படுத்திப் பொருளற்றக் காட்சிகளைத் தருகிற ஊடகங்கள் மக்கள் மனதில் மிகுதியானப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இன்றைய இளைய சமூகம் நிழலை நிஜமாகக் கருதி பின்னற்றுகிறக் காரணத்தால் தம் வாழ்வின் பொருளை, குறிக்கோளை இழந்து நிற்கின்றது. இத்தாக்கம் இறையழைத்தலில் இன்னும் மிகுதியாகவே உள்ளது. இத்தாக்கத்தால் துறவறம் என்பது கேலிக்குரிய, உயர்வற்ற நிலையில் மட்டுமே பார்க்கப்படுகிறது. எனவே இறையழைத்தல் என்பது சவாலான சிந்தனையாகிறது.

3. உலகப் பேராசையும் போட்டிகளும்
மனித வாழ்வில் இன்று பணமும் பட்டமும் அதிகாரமும் உயர்வும் வெளிநாட்டு மோகங்களும் அதிக இடம் பிடித்துள்ளன என்பது தெளிவு. படித்தோர் மத்தியில் உள்ள போட்;டிகள் வளர்கின்றன. உலகைச் சார்ந்துள்ள இக்குறிக்கோள்களில் ஆன்மீகம் சார்ந்த வாழ்வும் அதில் உயர்வு என்பதும் இரண்டாம் தரமாகப் பார்க்கப்படுகின்றது. கடவுள் சிந்தனை, கடவுள் பக்தி, கொண்டாட்டங்கள் எல்லாமே 'தேவைப்பட்டால்,' 'நேரமிருந்தால்' செய்துகொள்ளலாம் என்ற போக்கு. இப்பின்னணியில் இறையழைத்தலுக்கான ஆர்வமும் குறைவு என்பதே தெளிவு.

4. தவறான சாட்சியங்கள்
இறை-மனித மற்றும் மனிதகுல வளர்ச்சிக்கு வழிகாட்டுகிற மதங்கள், கோட்பாடுகள், செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளுக்கு உட்படுத்தப்படுகின்ற இதே அறிவியல், கணிணி உலகில், மதத்தின் பணியாளர்களும், தலைவர்களின் செயல்பாடுகளும் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. எங்கோ நடக்கிற சிலரின் தவறான செயல்பாடுகள் ஒட்டுமொத்த துறவற, குருத்துவ வாழ்வைப்பற்றிய தவறானக் கருத்துக்களை மக்கள் மத்தியில் படரவிடுகின்றன. தவறான பிரச்சனைகளும் இழிவை உண்டுபண்ணுகின்றன. இதனைக் காண்கிற, கேட்கின்ற இளம் சமூகம் நம்பிக்கை குறைந்து ஆர்வம் குன்றி இறையழைத்தல் பற்றியே சிந்திக்காமல்கூட இருந்துவிடுகிறது.
இன்றும் இதுபோன்று பல்வேறு காரணங்களைப் பட்டியலிடுகின்ற சூழலில் குடும்பங்கள,; தம் தலைமுறையினரின் நல்லவைகளைப் புரிந்து திருச்சபையின் பணிக்காக தம்மை அர்ப்பணிக்கும் இறைபணியாளர்களாக மாற்றம் பெறுகின்றனர்.
குறிப்பாகப் பெற்றோர் தம் விசுவாச வாழ்வை, இறையனுபவத்தை தம் பிள்ளைகளுக்கு பரிமாறக் கடமைப் பட்டவர்கள். எதிர்மறைக் கோட்பாடுகளையும் தவறான வழிமுறைகளையும் கொண்டு செயல்படுகின்ற சமூகத்தில் தம் பிள்ளைகள் நேர்மையானவற்றைச் சிந்தித்துப்பார்க்கவும் தவறுகளைக் களைத்து, எதிர்த்துச் செயல்;பட்டு நன்மைகளைச் செய்கின்ற மனநிலையை பிள்ளைகளுக்கு உருவாக்கவும் பெற்றோருக்குக் கடமை உண்டு.
சிறப்பாக இன்று இக்கடமையையும் கடவுள், பக்தி, இறைபணி ஆகியவற்றை மையப்படுத்தி செயல்படவேண்டும். திமொத்தேயுவுக்கு வழிவழியாகக் கொடுக்கப்பட்ட விசுவாசம் (2 திமொ 1:5) நற்செய்திப் பணியாற்றும் விசுவாசமுள்ள சீடராக திமொத்தேயுவை மாற்றியதுபோல பெற்றோர், குடும்பத்தில் பெரியோர் இவர்களின் தொடர் விசுவாசம் தலைமுறையினருக்குப் பகிரப்பட வேண்டும்.
பல்வேறு உயரிய சமூகப் பணியாளர்கள் அறிவியல் சிந்தனையாளர்கள், கணிணி பொறியாளர்கள், மருத்துவர்கள் என்ற வரிசையில் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு வித்திடும் பெற்றோர்கள,; திருச்சபையின் வளர்ச்சி, இறையரசின் பணி, இயேசுவின் இலட்சியம், நற்செய்தி அறிவிப்பு என்பன போன்ற சிலசிந்தனைகளைப் பிள்ளைகளுக்குத் தரவும், அவற்றில் ஈடுபட வழிகளையும் காட்டவேண்டும்.
'நம்பிக்கை, அன்பு, பக்தி உயர்வில் தேர்ந்துள்ள தொடக்கத் திருப்பலிநிலைப் பயிற்சிக் கூடங்களாகக் குடும்பங்களே அமைகின்றன.' – (திருப்பலிப் பயிற்சி- எண் 2)
தற்போதைய குடும்பப் பயிற்சியில் குழந்தைகளின் நம்பிக்கை குறைந்து வருகிற நிலையில், இறைபணிக்கென்று பிள்ளைகளுக்குத் தரப்பட வேண்டிய கல்வி சிறிதும் குறையாதபடி பெற்றோர் கற்பித்தல் நலம். பிள்ளைகளின் எதிர்காலம், பொருளாதார வளர்ச்சி, தமது குடும்பப் பெயரை நிலைநாட்டல் என்று பல்வேறு காரணங்களை மனதில் கொண்டு சிந்திப்பது முதலே பிள்ளைகளுக்குத் தரவேண்டிய அடிப்படைத் திருச்சபைப் பணி பற்றிய செய்திகள், சாட்சியங்கள் பகிரப்பட மறக்கக்கூடாது. சமூகச் சவால்களைச் சந்தித்து இயேசுவின் சிந்தனை மற்றும் மனநிலைகளோடு சமூக மாற்றத்திற்கு கடவுள் வார்த்தையைப் பரப்புவதற்கு ஏற்ற சூழல்களைப் பிள்ளைகளுக்குக் கற்றுத் தரவேண்டும்.

இறுதியாக...
இறையழைத்தல் என்பது பெயர், புகழ் எடுப்பதற்கான, நலமான வாழ்விற்கான வழி அல்ல. மாறாக இறையாட்சியின் விழுமியங்கள் மண்ணில் மலர உயர்விக்கும் மறைபணிக்காக வாழ அழைப்பதே இறையழைத்தல்.
 ஆழமான விசுவாச உணர்வு
 பிறரை மையப்படுத்திய பகிர்வு வாழ்வு
 சமூக மாற்றத்திற்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தல்
 திறமையான உழைப்பு
 தெளிவான சிந்தனை
இவையே இறையழைத்தலுக்குத் தேவையான பண்புகள்.

0 comments:

Post a Comment