தவக்காலம்

கிறிஸ்துவத்தில் மிக முக்கிய மான காலமாக பழக்கத்தில் கருதப்படுவது தவக்காலம்.  இதில் இடம் பெறும் ஜெபம், தவம், பிறருக்குக் கொடுத்தல் ஆகிய செயல்கள் மூலமாக, “பாவம் கழுவும்மனநிலையோடு இணைந்துவிட்ட மதிப்பீடு (Value) புனிதம் (Virtue) என்பதில் மட்டுமே நிறைவு காணும் காலமாகவும் மாறிப்போகிறது.  பாவச் சூழல் மரத்துப்போகும் காலக்கட்டத்தில் இன்றும்கூட ஏதோ ஒரு மூலையில் மனித மனச்சாட்சியின் உறுத்தல் இருக்கத் தான் செய்கிறது.  அத்தகைய உறுத்தல் எல்லா நாட்களிலும்  நான் பாவிஎன்று எண்ண விடாமல் அதற்கென்று குறிக்கப் பட்ட காலத்தில், சில நாட்களில் மட்டும் தோன்றி தவக்காலம்” “மாலை போடும் நாட்கள்” “ரம்ஜான்என்று மத ரீதியான சடங்கு நாட்கள் மற்றும் வழிபாடுகள் இவற்றோடு கலந்து விடுகிறது.
கிறிஸ்துவத்தில் சாம்பல் புதனோடு தொடங்கும் இத்தவக் காலம் தனி வழிபாட்டுச் சிறப்பு மிக்கதாய் மாறிப் போனது.  இன்றைய வழிபாட்டின் மூலம் தம்மைக் கிறிஸ்துவர்கள் என்று இனம் காட்டிக் கொள்ளும் மனிதர்கள் உண்டு.  அன்று ஆலயங்களில் மோதிவரும் கூட்டமே தனிதான். 
அந்தச் சிறப்பு வழிபாட்டில் சொல்லப்படுகின்ற வார்த்தைகள் சிந்தனைக்குரியவை.  சில ஆண்டு களுக்கு முன் தவறாமல் சொல்லப் பட்ட வார்த்தைகள்: மனிதனே நீ மண்ணாயிருக்கிறாய்மண்ணுக்குத் திரும்புவாய்”. இன்று இவ்வார்த்தைகளுக்கான மாற்றுப் பாடமாய் மனந்திரும்பி நற்செய்தியை நம்புஎன்ற வார்த்தைகள் கூறப்பட்டாலும் இன்னும் பழைய வார்த்தைகளில் முழுமை கண்டு, அவ்வார்த்தை களையே பயன்படுத்துவோரும், அதையே கேட்க விரும்புவோரும் உண்டு.
மண்ணாயிருக்கிறாய் - மண்ணுக்கே திரும்புவாய்என்ற வார்த்தைகள் விவிலியப் பின்னணி கொண்டதுதான்.  களிமண்ணி லிருந்துதான் கடவுள் மனித உடலை உருவாக்கினார் (தொ நூ 2:7).  அவ்வுடல் உயிர் பிரிந்த பின் மீண்டும் மண்ணுக்குள்ளே செல்கிறது.  எனவே நீ ஏன் அழிந்து போகும் காரியங்களைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறாய்? என்று உணர்த்தும் வார்த்தைகள்.  ஆனாலும் அவை மனித வாழ்க்கையை வெறுமை யாக்குகிற வார்த்தைகளாகத் தோன்றுகின்றன.  மண்ணுக்குத் திரும்பும் உடலும் கடவுளின் கொடை என்றும் தூய ஆவியின் ஆலயம் (1 கொரி 6:19) என்றும் அதைத் தூயதாய்ப் பராமரிக்கும் கடமை (1 கொரி 3:17) நமக்கு உண்டு என்றும் இத்தவக் காலத்தில் உணர்த்த நமக்குக் கடமை உண்டு.  எனவேதான் திருச்சபை இத்தவக்காலத்தை வெறுமையின் (Pessimistic) நாட்களாய் நினைக்காமல் புதிய வாழ்வு பெறும் நாட்களாய் நினைக்க மனந்திரும்பு - நற்செய்தியை நம்புஎன்று வழிகாட்டும் (Optimistic) நாட்களாய்த் தருகிறது.
இன்று பிறரை வாழத் தூண்டும் பணிக்கு ஆட்கள் தேவை.  பிறர் வாழஎன்ற மனநிலையும் சமூகத்தில் குறைந்து வருகிறது.  திருச்சபை தன் வழிபாட்டு வார்த்தைகளை மாற்றி விட்டாலும் நீ மண்ணாய்ப் போ” “நாசமாகப் போஎன்று சொல்லி மண்ணைத் தூக்கி வீசும் பழக்கம் நம் சமூகத்தில் உண்டு.  பிறரைச் சபிக்கும் மனப்போக்கு பாவம் என்று நினைக்கத் தவறுபவர்கள் உண்டு.  இது கடவுளின் மனநிலை அல்ல.  பிறர் மனந்திரும்ப நல்வழி காட்டினால் நமக்குமேல் உயர்ந்து விடுவாரோ என்று எண்ணி பயப்படுவோர் உண்டு.  எப்படியாவது ஒன்றுமில்லாமல் போகட்டும்என்று நினைத்து நல் வழிகாட்டாமலேயே சென்று விடுவோரும் உண்டு. 
கடவுளின் திட்டம் என்பது மறுவாழ்வுதருவதே (யோனா 3:10).  அதை விரும்பாத மனிதர்கள் தன் நலத்தை, தன் உயர்வை மட்டுமே மையப்படுத்தி (யோனா 4:1-3)  பிறர் வாழ்வதை - உயர்வதை - நல்வழி காண்பதைப் பொறாமையோடு பார்ப்பவர்கள் நம் மத்தியில் உண்டு.
தவக்காலத்தில் என் பாவங் களுக்காக வருந்தி மனம் மாறி விட்டேன் என்பது நமக்கு மன திருப்தி தரலாம்.  ஆனாலும் வழி தவறியோர் மீண்டும் வாழட்டும் என்றும், எனக்குப் பகையாயிருப் போரும் மறுவாழ்வு பெறட்டும் என்றும் எண்ணி நல்லவற்றில் பிறரை உற்சாகப்படுத்தும் பணியாளர்கள் தேவை.  தாம் செய்வது தவறு என்றும் அழிந்து கொண்டு இருக்கிறோம் என்றும் தெரியாமலேயே வாழ்கிறவர்கள் (யோனா 4:11) நல் வாழ்வு பெற உதவுவதே இத்தவக்காலத்தின் பிறர் நலப் பணியாகட்டும்.  இச்சமூகம் சிறப்புறும்.  இது வெறும் சமயம் சார்ந்த செயல்பாடு மட்டுமல்ல.  சமூகம் சார்ந்த உடனடித் தேவை என உணர்வோம்.

0 comments:

Post a Comment