வருமானமேயில்லாத கிராமப்புற பங்கில் என்ன பணி செய்யமுடியும்? என்று வாளாயிருப்போரும், திருப்பலி வைப்பது போன்ற தினசரி சடங்குகளை முடிப்பதே “சாமியார்த்தனம்” என சரிந்து கிடப்போரும், அவர்களின் சம காலத்திலேயே சந்நியாச வாழ்வில் சரித்திரம் படைக்கும் சில சாதனையாளர்களைக் கண்டு தங்களைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்கிற வேட்கையே நம்மை வெவ்வேறு நபர்களை - அவர்களின் வித்தியாசமான பணிகளை வெளிப்படுத்திட தூண்டி நிற்கிறது.
அந்த வகையில்; திருச்சபையின் தலமாகிய பங்கைப் பல குழுக்களாகப் பிரித்து “திருச்சபையின் அடிவேர் அன்பியமே ” என்கிற புதிய சித்தாந்தத்தைத் தமிழகத் திருச்சபை பெற்றிட அச்சாரமாக விளங்கிய அன்புத் தந்தை எட்வின் அவர்களைச் சந்தித்து உரையாடினோம்.
கடந்த 30.12.2009 அன்று கோட்டாறு மறைமாவட்டம் குளச்சலில் “வேர்களின் வேர்” (திருச்சபையின் ஆணிவேராம் அன்பியங் களின் ஆணிவேர்) என்று போற்றத்தக்க வகையில் செயல்பட்டு வரும் தந்தை எட்வின் அவர்களிடம் அவர்தம் தேவ அழைத்தல் பற்றி விளக்கிட கேட்டோம்.
தந்தை எட்வின் : என்னுடைய மாணவர் பருவத்தில் “நல்லது செய்யனும்”-ங்கிற எண்ணம் என் மனதில் இயல்பாகவே இருந்தது. இணையன் புத்தன் துறையில் நான் படித்துக் கொண்டிருந்த அந்த நாட்களில், அங்கு வந்த “நற்கருணை வீரன்” மாணவர் இதழில் “நல்லது செய்தா மதிப்பெண் வழங்குவது” என்கிற அந்த திட்டம் எனக்கு அதிக ஆர்வத்தைக் கொடுத்தது. புத்தகங்கள் வாசிப்பதில் உள்ள என்னுடைய ஆர்வத்தை அறிந்து எனக்குப் பல பத்திரிகைகளை அன்றைய குருக்களும், துறவிகளும் வழங்கி என்னைத் தூண்டினர். அந்த வகையில் சென்னை பூந்தமல்லி செமினரியில் இருந்து வெளிவந்த “கடவுளின் பிரதிநிதி” மாத இதழ் என் தேவ அழைத்தலுக்குக் காரணமாய் அமைந்தது. அதனடிப்படையில் குருமடம் சேர்ந்தேன்.
மேற்படிப்புக்காக பூந்தமல்லி செமினரி சென்ற இடத்தில் அங்கு ஆந்திரா, அஸ்ஸாம் போன்ற இடங்களிலிருந்தெல்லாம் மறைபரப்பு குருக்களை அழைத்து வந்து அவர்தம் அனுபவங்களை எங்களுடன் பகிரச் செய்த போது எனக்குள் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்படியே நானும் பலரை இறைவன்பால் கொண்டு வரனும் என்கிற உள்ளுணர்வு எனக்குள் வந்தது. எனவே தேவ அழைத்தலில் பலரை ஊக்குவிப்பதில் அதிக ஆர்வம் காட்டினேன்.
1967ல் கோட்டாறு மறைமாவட்டத்தில் இந்திய தேவ அழைத்தல் கண்காட்சி நடத்திட ஏற்பாடுகள் செய்தேன். பல மறைமாவட்ட துறவற சபையினரை அழைத்து ஒரே இடத்தில் கண்காட்சி நடத்தி பல்வேறு சபைகளின் பணிகளையும் மக்களுக்கு விளக்கிட அது வாய்ப்பாக இருந்தது.
1974-ல் நடத்தப்பட்ட இரண்டாவது கண்காட்சியில் எல்லோரும் குருவாக, துறவியாக மாறாவிட்டாலும் அனைத்து கிறித்தவர்களும் ஒரு அர்ப்பண உணர்வுடன் வாழ வேண்டும் என்கிற அடிப்படை அழைத்தலுக்காக தனியே ஒரு ஸ்டால் அமைத்து, “தன்னை விட்டு வெளியே வந்து பிறர் மையமாக வாழ” அழைப்புக் கொடுத்தோம்.
அங்ஙனமே, “பிறருக்கான மனிதனாக வாழ எங்க சபைக்கு வாரீயா?”ன்னு கேட்குறதுக்குப் பதிலா “ஒவ்வொருவருக்கும் அடிப்படை அழைத்தலே அர்ப்பண வாழ்வு”னு உணர்த்திவிட்டால், அதுவே உங்கள் சபைகளுக்கும் ஆள் சேர்க்கும் என மற்ற துறவற சபைகளையும் அதே கண்ணோட்டத்தில் கண்காட்சியினை அமைக்க செய்தபொழுது நல்ல பயன் கிட்டியது.
கேள்வி : “அன்பியம்”ங்கற Concept எப்படி எப்போது உதயமானது?
தந்தை : நான் ஏற்கனவே சொன்னது போல், ஒவ்வொரு கிறித்தவனும் பிறருக்காக வாழனும்ங்கற அர்ப்பண உணர்வை பெறனும் என்கிற அழைத்தலை குழுக்கள் வழியாக செயல்படுத்தினால் நல்லது என முடிவு செய்தேன். அந்த நேரத்தில் லத்தின் அமெரிக்காவில் ஏற்பட்டிருந்த அடித்தள கிறித்தவ சமூகம் பற்றிய தகவலை நான் அறிந்த காரணத்தினால் அதனடிப்படையில் 1977-ல் நான் பணிபுரிந்த கோடிமுனைப் பங்கில் அடித்தள கிறித்தவ சமூகத்தை முதன்முதலில் உண்டாக்கினேன். ஆரம்பத்தில் பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாலும் நாளடைவில் எல்லோரும் ஏற்றுக் கொண்டனர். மறைமாவட்டமே இந்த அடித்தள கிறித்தவ சமூகத்தை ஏற்படுத்துவதை தம் கொள்கை யாக வெளியிட்டது. இன்று தமிழக திருச்சபையே இதனை அன்பியங்கள் என்கிற பெயரில் செயல்படுத்தி வருகின்றது.
கேள்வி : அக்கம் பக்க குழந்தைகள் பாராளுமன்றம் என்கிற இன்றைய செயல்பாடு எப்படி?
தந்தை : கிறித்தவம் இயேசு தொடங்கிய ஒரு போட்டி மதமல்ல. இறையாட்சியைக் கொணர்வதே அவரின் நோக்கம். உலகில் இறையாட்சியை ஒரு மதத்தால் மட்டுமே சாதிக்க முடியாது. கிறித்தவம் ஒரு புளிக் காரமா வாழ்ந்து தன் அன்புச் செயல்பாட்டால் அதைக் கொணர வேண்டும். எனவே, கிறித்துவின் சீடத்துவத்தை உருவாக்க திருச்சபை ஏற்படுத்திய பயிற்சித் தளமே அன்பியம். அதில் ஒருங்கிணைந்த கிறித்தவர்கள் பரந்த உலகத்தில் போராட வேண்டும். எனவே மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்க அரசியல் தாண்டிய ஒரு செயல்பாடாக, கிறித்தவ மக்களிடம் மட்டுமில்லாமல் எல்லா மக்களையும் உள்ளடக்கிய “அக்கம் பக்கம் பாராளுமன்றம்” அமைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
அதன் தொடக்கமாகவே அக்கம் பக்கம் குழந்தைகள் பாராளுமன்றத்தை அமைத்து வருகிறோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவில் 23 மாநிலங்களில் மட்டுமல்ல தான்சானியா போன்ற அயல் நாடுகளிலும் பரவி வருகிறது.
தமிழகத்திலுள்ள குழந்தைகள் பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து தமிழக பாண்டி குழந்தைகள் பாராளுமன்றம் அமைத்துள்ளோம். உலகத்திலேயே மிகச் சிறந்த அமைப்பு என ஐ.நா. சபை அமைப்பு பாராட்டி 20 இலட்சம் மதிப்புள்ள விருதை எங்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.
குழந்தைகளுக்குப் பல பயிற்சிகள் கொடுப்பதற்குப் பதிலாக இந்த செயல்பாடு உள்ளது. இதனால் ஆளுமை வளர்ச்சி, தலைமைத்திறன், கட்டுப்பாடு குழந்தை களுக்கு ஏற்படுகிறது. இதனால் இறையாட்சி தொண்டர்கள் இம்மண்ணில் உருவா கிறார்கள். தேவ அழைத்தல் என முகாம் நடத்தி, உரை கொடுப்பதற்குப் பதிலாக இப்பாராளுமன்றத்தை உருவாக்கி வருவதால் அவர்களிடையே பல அமைச்சர்கள் உருவாகி - விவாதம் - அலசல் - அணுகுமுறைகளில் ஈடுபட்டு தெளிவு பெறுகிறார்கள். இவைகள் குழந்தைகளின் அர்ப்பண வாழ்வுக்குக் காரணமாக அமைந்து வருகின்றன.
பள்ளிக்கூடங்களில் ஒப்பனை பாராளுமன்றம் அமைக்கிறோம். அதன்பின் ஊர்ப்பகுதிகளில், அக்கம் பக்கம் பாராளு மன்றம் அமைத்து அவர்கள் கூட்டம் நடத்தவும் அதன்பின் பொறுப்புடன் செயல்படவும் ஒரு பகுதியை (Area) வகுத்து வழங்குகிறோம்.
கேள்வி : குழந்தைகளிடம் இத்தகைய பொறுப்பு - குருவித்தலையில் பனங்காய் போன்று அமையாதா? . . .இது ஒரு விதமான Child Labour ஆகாதா?
தந்தை : நிச்சயமாக இல்லை. வேலை என்பது கடினமானது. குழந்தைகளைப் பொருத்த வரை இது அவர்களுக்குப் பாரம் அல்ல . . . மாறாக அவர்களுக்கு இது ஒரு புது விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு அம்சமாகவே அமைந்து மகிழ்ச்சியாகவே உள்ளது. பொதுவாக குழந்தைகள் டீச்சர் விளையாட்டு போன்று பெரியவர்களைப் பிரதிபலிப்பதையே விளையாட்டாகக் கருதுகிறார்கள். அந்த வகையிலேயே பெரியவர்களின் அரசியல் சமூக ஈடுபாட்டையே இதில் பிரதிபலிக்கிறார்கள். அத்துடன் குழு ஆய்வு, குழு விவாதம், குழு செயல்பாடு மூலம் தன்னம்பிக்கை பெற்று சமூக பொறுப்புணர்வை அடைந்து சாதனை படைக்கின்றனர். பல்வேறு செயல்களில் ஈடுபடுவதால் ஒருவித அனுபவ பயிற்சியை அவர்கள் அடைகிறார்கள்.
கேள்வி : கிறித்தவம் தாண்டிய தங்களது மக்கள் பணியை தங்கள் மறைமாவட்டம் மற்றும் சக பணியாளர்கள் எப்படி பார்க்கிறார்கள் . . . ?
தந்தை : ஆரம்பத்தில் சரியான புரிதல் இல்லாத காரணத்தால் சக பணியாளர்களிடம் எதிர்ப்பு இருந்தது. மக்களின் ஆதரவால் நாளடைவில் பணியாளர்களும் இதனைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். அங்ஙனமே மறை மாவட்டமும் இதனை ஏற்றுக் கொண்டு அன்பியங்களின் கூட்டமைப்பே பங்கு (Parish is the Federation of Anbiams) எனப் பிரகடணப்படுத்தியுள்ளது. என் வேகத்திற்கு மறைமாவட்டம் இல்லையென்றாலும் எனக்குத் தடையாக அமையவில்லை என்பதே எனக்கு நிறைவைத் தருகிறது. அன்பியங்கள் அமைப்பதைக் கொள்கையாக அறிவித்துள்ள எங்கள் மறைமாவட்டம் தற்போது அக்கம் பக்கம் பாராளுமன்றம் அமைப்பதையும் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளது. திருச்சபையின் வரலாற்றில் ஏற்பட்ட கிறிஸ்டோபர் இயக்கம், பாய்ஸ் டவுன் இயக்கம், இளம் கிறித்தவ தொழிலாளர் இயக்கம் போன்ற இயக்க செயல்பாடுகளும் ஐக்கப்; வழியாக நான் பெற்ற மார்க்ஸிய தத்துவமும், காந்தியின் சிந்தனையும் ஒன்று சேர்ந்து என்னை இயக்கமாக செயல்படவே தூண்டி வருகின்றன. அக்கம் பக்கம் பாராளுமன்றம் வழியாக எனது பணி வாழ்வு நிரம்பியிருக்கிறது. பல தனிப்பட்ட தலைமைகளை உருவாக்கிய நிறைவும் எனக்குள் இருக்கிறது.
கேள்வி : இவ்வளவுக்கும் மத்தியில் தங்களிடம் காணப்படும் எளிமை குறித்து . . .
தந்தை : எனது தொடர் வாசிப்பின் தாக்கம் அது. பல சமூக சீர்த்திருத்தவாதிகளின் வாழ்க்கை என்னை வாழச் செய்கிறது. பைபிளை பிரசங்கிப்பதைவிட அதை நான் அடிப்படையில் நம்புகிறேன் அதனால் அதை எனது வாழ்வாக்க முயல்கிறேன்.
கேள்வி : இன்றைய குருக்களின் மேம்பாட்டிற்கு தாங்கள் கூறும் ஆலோசனை . . . ?
தந்தை : செமினரி வாழ்வுக்குப் பின்னும் குருக்களுக்குத் தொடர் உருவாக்கப் பயிற்சிகள் கொடுக்கப்படவேண்டும். அதில் இறையாட்சியின் உண்மைத் தன்மை புரியவைக்கப்பட வேண்டும். நமது திருத்தந்தையர்கள் வரையும் மடல்களை ஒழுங்காக வாசித்து அதை விவாதித்து செயல்படுத்தினாலே போதும். ‘பொதுநிலையினருக்கு பயிற்சி கொடுங்கள் பங்குத் தந்தையர்கள் சரியாவார்கள்’ என்று மறைந்த தந்தை அமலோர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடு வார்கள். அதேபோல் உலகத்தில் ஊடுருவி நாம் செயல்பட்டால் உலகம் திருச்சபையைத் திருத்தும் என நான் நம்புகிறேன்.
பணி இலக்குகளை நிர்ணயித்து அதை அடையும் கனவுகளை வளர்த்துக் கொள்ள இன்றைய குருக்கள் கோட்டை விடுவதாலேயே தடம் மாறிப் போய் விடுகிறார்கள் என்றும் வருத்தப்பட வேண்டியுள்ளது.
திருச்சபையைத் தாண்டியும் பணி செய்யும்போது அதனால் திருச்சபையும் மேன்மையுறும் என நம்பி தம்மை முழுமையாய் மக்கள் பணியில் ஈடுபடுத்தி தமிழக திருச்சபைக்கே தன்னிகரற்ற முன்மாதிரி வடிவம் கொடுத்து செயல்படும் தந்தை எட்வின் அவர்களை வாழ்த்தி வணங்கி விடைபெற்றாலும் அவருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு செயலாற்ற உள்மனம் கெஞ்சிக் கேட்டது. சரி என்று அதற்கும் உத்திரவாதமளித்து ஊருக்குப் பயணமானேன். தொடரும் எங்கள் பயணம்.
எஸ். எரோணிமுஸ், “ஊற்றுக்கண்” ஆசிரியர், திருச்சி
0 comments:
Post a Comment