ஜெபத்தில் மறையுரை


நற்செய்தியாளரான புனித யோவான் தன் வயது முதிர் காலத்திலும் எபேசு நகர் ஆயராகவே இருந்தார்.  அவரின் மறையுரைகளிலும் மக்களுடன் வாழ்ந்த புனித நாட்களிலும் அவர் அன்பை மட்டுமே வெளிப்படுத்துகிறவராய் இருந்தார்.  இரவு பாஸ்கா உணவின்போது இயேசுவின் நெஞ்சிலும் மார்பிலும் சாய்ந்து இயேசுவின் இதய உணர்வுகளையே அறிகிறவராய் இருந்தார்.  அதற்குப்பின் தன் வாழ்நாட்கள் முழுவதும் இயேசுவின் இதய வெளிப்பாடுகளை ஜெப உணர்வில் இயேசுவின் மார்பில் சாய்ந்து வெளிப்படுத்துகிறவராய் இருந்தார்.

புனித யோவானின் நற்செய்தியின் இறைஇயல் சிந்தனைகளும், அவரின் திருமுகங்கள் அனைத்தும் அன்பின் வெளிப்பாடுகள் நிறைந்தும், திருவெளிப்பாடு மனித அறிவுக்கே புலப்படாத பரம இரகசியங்களையே வெளிப்படுவதாகவும் இருக்கின்றன;  இதற்கெல்லாம் காரணம் இயேசுவின்மீது கொண்டிருந்த அளவிட முடியா அன்பே காரணம்.
தியானமும், தனிமையில் இயேசுவுடன் இருந்த ஜெபவாழ்வும், தாழ்ச்சி நிறைந்த அர்ப்பண உணர்வும், மாசற்ற தூய்மை இதயமுமே காரணம்.  இயேசுவின் பாதம் அமர்ந்த மரியாளைப் போலவே (லூக் 10:39) புனித யோவானும் பாதம் அமர்ந்து கேட்ட இறைஇயல் சிந்தனைகளையே தம் இறை வார்த்தைகளில் எழுதினார். இயேசுவின் பாதம் அமராத எந்த ஒரு இறைப்பணியாளரும் இயேசுவின் இறைவார்த்தை நற்செய்திப் பணியை வல்லமையாய்ச் செயல்படுத்த முடியாது என்பதே உண்மை.
வேதாகமத்தில் இவ்வாறு வாசிக்கிறோம் : “இதோ நல்வார்த்தைகளை உமது வாயில் ஊட்டினோம்.  அவைகளையே நீ பேசுவாய்” (எரே 1:9).  “உம் வார்த்தைகளைக் கண்டடைந்தேன்.  அவற்றை உண்டேன்;  உம் வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியாயின.  என் உள்ளத்திற்கு இன்பம் தந்தன” (எரே 15:16).  “அவர்கள் (இறைவாக்கினர்கள்) நமது ஆலோசனைக் குழுவில் இருந்திருந்தால் நம் வாக்கியங்களை நம் மக்களுக்கு அறிவித்து மெய்யாகவே அவர்களை அவர்களுடைய தீய வழிகளினின்றும், தீய எண்ணங்களினின்றும் விலக்கி இருப்பார்கள்.” (எரே 23:22) என்கிறார் ஆண்டவர்.
எனவே இறைவார்த்தைப் பணி செய்வோர் இயேசுவின் பாதம் அமர்ந்து அவரின் ஆலோசனைகளையும் அறிவையும் பெற்றும் போதிக்கவில்லை எனில் ஒரு குருவானவரின் பிரசங்கம் ஒலிக்கும் வெங்கலமும் ஓசையிடும் தாளமுமாய் மாறிவிடும் என்பதே உண்மை.
இயேசுவின் வாழ்வைக் குறித்து மிகச் சுருக்கமாக இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.  “அதிகாலையில் கருக்கலோடு எழுந்து புறப்பட்டுத் தனிமையானதோர் இடத்திற்குச் சென்றார்.  அங்கே ஜெபம் செய்து கொண்டிருந்தார்.  பின் எழுந்து புறப்பட்டுச் செல்வோம் . . .  ஏனெனில் நான் தூது அறிவிக்கவே வந்திருக்கிறேன்” என்கிறார் (மாற் 1:35-39).

சார்லஸ் பின்னி என்ற ஒரு தலை சிறந்த நற்செய்திப்பணியாளர் பற்றி நாம் அறிந்திருக்கலாம். அவரின் உடல் முழுவதும் தேவ வல்லமை நிறைந்தே இருந்தது.  ஆனால் அவருக்கு மிகப் பெரிய குறைபாடு ஒன்று இருந்தது.  அதாவது அவருக்குப் பேச வராது.  மறையுரை கொடுக்கவும் வாய்ப்பேச்சற்ற வராய் இருந்தார்.
அவர் ஒரு நாள் தொழிற்சாலை ஒன்றுக்குப் பார்வையாளராகச் சென்றார்.  பரிசுத்த ஆவியின் வல்லமை மிகுதியாகவே அவருக்குள் நிரம்பி வழிந்தது.  அவர் தொழிற்சாலையில் நுழைந்த உடனே அநேகப் பெண்களும், ஆண்களும் வேலை செய்து கொண்டிருந் தவர்கள் அவரைப் பார்த்தார்கள். சார்லஸ் பின்னியின் பார்வை இவர்களில் பட்டவுடனே அவர்கள் அனைவருக்குமே பாவ உணர்த்துதல் ஏற்பட்டது.  உள்ளம் குத்துண்டவர்களாய்க் கதறிக் கதறி அழத் தொடங்கினார்கள்.  பாவங்களை வெளிப்படுத்தி இறை மன்னிப்பிற்காய் மண்டியிட்டு ஜெபிக்க ஆரம்பித்தார்கள்.  சார்லஸ் பின்னியின் கண்களில் ஒளிர்ந்த ஒளியாலேயே  அநேகரை மனந்திருப்பினார்.
இன்று பெரிய திருத்தல இறைவழிபாட்டில்கூட மறையுரைகள் இறை வல்லமை இல்லாத சொற்பொழிவுகளாகவே இருக்கின்றன.  இறை வார்த்தைகளுக்காய் ஏங்கும் மக்கள்! ஆனால் இயேசுவின் பாதம் அமர்ந்து ஜெபிக்காத குருவானவர்களின் பிரசங்கங்கள். மக்கள் தேடி அலைவதை, இறை வார்த்தைகளுக்காய் ஏங்கும் மக்கள் பொன்னான நேரத்தை ஆலயத்தில் இறைபாதம் அமர்ந்திருக்கும் மக்களை உணராத குருவானவர் வாழ்ந்து என்ன பயன்?  ஒன்றுமில்லை.
எத்தனை ஆண்டுகள் மறை உரைகள் அளித்தாலும், அதே வேதாகம பகுதியைக்குறித்து பிரசங்கம் வைத்தாலும் ஒவ்வொரு முறையும் மணிக்கணக்காய் மண்டியிட்டு ஜெபிக்கும்பொழுது ஆண்டவர் இயேசு புதிய விளக்கத்தைக் கற்றுக்கொடுக்கிறார் என்பதே உண்மை.  குருவானவர்களே, இறைபாதம் அமர்வோம்.  ஜெபத்தில் இயேசுவின் மறை உண்மைகளை அறிவோம்.  அதையே மக்களுக்கு இறைவார்த்தைகளாக 
அறிவிப்போம். ஆமென்.
Fr.  ச. ஜெகநாதன், அய்யம்பாளையம், திண்டுக்கல்

0 comments:

Post a Comment