கடவுளின் கவலை = குழந்தைகள்

இராக்கேல் ஒரு திருமணமாகாத பெண், பள்ளி ஆசிரியை.  அவருடைய அக்காள் திருமணமாகி குழந்தை குட்டிகளைக் கவனித்துவந்த இல்லத்தரசி.  ஒவ்வோர் ஆண்டும் பள்ளிக்கூடம் கோடைவிடுமுறைக்குப்பின் திறக்கும்.  இராக்கேல் வகுப்பில் அவளிடம் படித்த குழந்தைகள் தேர்ச்சி பெற்று உயர்வகுப்புக்கு மாறிவிடுவார்கள். மறுபடியும் ‘கலகலக்கும்’ குழந்தைகளின் புது முகங்கள்;  புது உறவுகள்;  மறுபடியும் கல்வி ஆண்டு முடியும்.  வேறு வகுப்புக்கு மாறிப்போய் விடுவார்கள்.  அது ஒரு தொடர்கதை நிகழ்வுதான்!

இராக்கேல் அக்காளைப் பற்றி நினைத்தாள்;  அவளுக்கெனக் குழந்தைகள்  பாசத்தைப் பரிமாறிக் கொள்ளும் பந்தங்கள்;  சொந்தங்கள் எனக்கு?  எத்தனை குழந்தைகள் இருந்தும் வகுப்பில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே தற்காலிகச் சொந்த பந்த உறவு . . .  ஆண்டு முடிவில் நீ யாரோ?  நான் வேறோ?  என்று அந்த உறவு நிச்சயமற்றுப் போகிறதே!  மனச்சோர்வு!  அக்கா வீட்டில் இருக்கும் போது உள்ளத்தைத் திறந்து கொட்டித் தீர்த்தாள்.  அக்காள் சொன்ன ஆறுதல்தான் “கடவுளின் கவலை!”  மார்கிரேட் லாரன்ஸ் ஆங்கிலப் புனை கதையாக எழுதியுள்ள ‘A jest of God’ பரமன் காரணமாகச்  சொல்லப்பட்ட  பகடிதான்!  அதன் அர்த்தங்கள் ஆழமானவை!
அதுசரி - இங்கே தொடருவது
இது கதையா?  கவிதையா? கட்டுரையா?
எல்லாம்தான்!  என் பேராசிரியர் 
அபி சொன்னபடி :
அதுஅது பூத்ததுக்குத் தக்கபடி!  புரியும்;
ஆனால் புரியாது!  என்றாலும் புரிந்துவிடும்!!
நாம் வெறும் பாதுகாவலர்கள்
நம் குழந்தைகள்
நமக்கே உரியவர்கள் அல்ல!
நாம் பெற்றோர்கள்தான்!  என்றாலும்
நாம்  பாதுகாவலர்களேதான்!!
ஒவ்வொரு குழந்தைக்கும் ஓர்
உண்மைப் பெற்றோர் உண்டு!
கடவுள்தான்!  என்ன புரியவில்லையா?
உங்கள் வேலை, பெற்றோர் என்னும்
பெயரால் குழந்தைகளைப் பேணுவதுதான்!
நன்றாகக் கவனித்துக் கொள்வதுதான்!
உங்களைப்போல - ஆனால்
உங்களையும்விடக் கடவுள்  அவர்களுடன்
எங்கும் எதிலும் எப்போதும் ...
கண்ணுள் மணியாய்!
இப்போது நன்றாகப் புரிந்திருக்குமே!
என்னவெல்லாம் செய்கிறார்!
உங்கள் குழந்தைகள் மீது அவர்
பொழிகிறார் மழைபோல் பாசத்தை!
கோட்டையாய் மாறிப்
பராமரிக்கின்றார்!
குயிலாய் மாறிக் கொஞ்சுகிறார்
கிளியாய் மாறிக் கெஞ்சுகிறார்
குறும்புகள் செய்து மிஞ்சினால் ...?
நிரம்பவும் கவலை கொள்கிறார்
குழந்தைகள் மொழியில்: பாவம் கடவுள்!
விழுமியங்களை விதைக்கிறார்
விழிப்புறச் செய்கிறார் அன்புப் பண்பை!
உங்கள் குழந்தையின் பள்ளி நண்பர்கள்
யார்? யார்? என்று கூர்ந்து கவனிக்கிறார்.
வீட்டுக்கு வந்ததும் பொழுதுபோக்காய்
சின்னத்திரையில் எதைப் பார்க்கிறார்கள்?
கணினிப் பக்கம் புரட்டிப்புரட்டி
குழந்தை விளையாட்டு என்று                               
என்ன காட்சிகள்
கண்டு - “கண்டபடி” சிரிக்கிறார்கள்?
என்னென்ன பிம்பங்களுடன் என்ன
பேசி நகைக்கிறார்கள்? கண்காணித்து
எல்லாமே பார்க்கிறார்!  பார்த்துக்கொண்டே இருக்கிறார்!
உறங்குவார் - உறங்கமாட்டார்
இரவு ஒன்பது ஆனதா?
உறக்கம் கொள்ள அழைக்கிறார்!
குழந்தை உடன்படுத்துக் கொள்கிறார் - ஆனால்
உறங்கி எழும்வரை  உறங்காமல்  இருக்கிறார்
அம்மா மென்மைக் கரங்களினால்
போர்த்திப் பொத்தும் அரவணைப்பில்
அருகே இருந்து இரசிக்கிறார்!
அவரே அம்மாவாய் ... அவரே அப்பாவாய் ...
நிரப்புவார்கள் பெற்றோர்கள்
பசித்த குழந்தை வயிற்றைத்தான்!
நிரப்புவார்கள் ஆசான்கள்
வெற்றிட மூளையில் அறிவைத்தான்!
நிரப்பிவிடுவார் கடவுளும்தான்
தூய்மையைக் குழந்தை மனத்தில்தான்!
குழந்தைகள் விழிகள் மட்டும்தான்
கனவிலும் கடவுளைத் தரிசிக்கும்!!
கடவுளுக்கும் கவலை வந்தது
பெற்றோர் சொல் கேட்காமல் அடம்பிடித்தால் ...
என்ன நீங்கள் சொன்னாலும் முகம்  திருப்பினால்  . . .
அடிப்பதுபோல் கை ஓங்கிப் பாவனை செய்தால்
அடிவாங்க புறபுமுதுகைத் திருப்பிக்காட்டினால் . . .
தன்னெறியை
வாழ்ந்து காட்டியும் புறக்கணித்தால்
மனம் போன போக்கில்தான் போவேன் என்றால் ...
கடவுளும் அதிகம் கவலையில் மூழ்கிடுவார்
ஓர் நாள் . . . .
நரகவாசலின் முற்றத்தில் காத்திருந்தார்
சகித்தபடி பொறுமையுடன் பார்த்திருந்தார்
ஊதாரிப் பிள்ளையே என்றாலும்                        
ஓடித்தடுக்கி
நரகத்தில் விழாமல் தடுத்துநின்றார்
அன்பு, அக்கறை, பதற்றம், ஆறுதல் ...
பெற்றோர் பண்பில் அவர்                    
திருக்காட்சிதானோ?
எச்சரிக்கை மணிஓசை ஆலயத்தில் அல்ல!
விபத்து, தற்கொலை, தீயநட்பு, போதைப்பொருள்
உங்கள் குழந்தையைக் கொன்றுவிடத்
துடிதுடிக்கும் சாத்தான்கள்!         
அறச்சின கர்ச்சனை
அப்பாலே போ!  சாத்தானே கடவுள் முழக்கங்கள்!
அப்பாக்கள் அம்மாக்கள் கலக்கத்தில்...
நல்லாத்தானே நான் வளர்த்தேன்!
சரியாக வழிகாட்டித்தானே கிடந்தேன்!
ஏன் தோல்வி?  ஏது பிழை?  யார் தவறு?
கலங்காதே!  திகையாதே!
365 நாள்களும் எதிரொலி கேட்டது!
விடுங்கள் கவலையைக் கடவுளிடம்
உங்கள் குழந்தையைக் கணந்தோறும்
பராமரிப்பவர் அவரல்லவோ?
பாதுகாப்பவர் அவரல்லவோ?
பாசம் பொழிபவர் அவரல்லவோ?
மகிழ்ச்சியில் ஆழ்த்துவார் அவரல்லவோ?
உங்கள் கவலை -
கடவுளின் கவலை - அப்புறம்
என்ன கவலை?

0 comments:

Post a Comment