விண்ணகத்தின் ஏணி


ஒரு சமயத்தில் மிசனரி குருவானவர் ஒருவர், குறிப்பிட்ட கிராம மக்களுக்குத் திருப்பலி செய்வதற்காக பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு நிறுத்தத்தில் பஸ் நின்றது. குருவானவரும் இறங்கினார். ஆனால் அவர் அப்பகுதிக்குப் புதிதாய் இருந்ததால் சரியான நிறுத்தத்தில் இறங்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டார்.

இருப்பினும் அங்கிருந்த குக்கிராமத்தின் வீடுகளை ஏறிட்டுப் பார்த்தார். அவருக்கு எதிர்ப்பட்டவரிடம் தான் தவறாக இறக்கிவிடப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு அவரிடம், “இங்கு ஏதாவது மாதா கோவில் இருக்கிறதா? கிறிஸ்தவர்கள் யாராவது இருக்கிறார்களா?” எனக் கேட்டார்.அதற்கு அவர், “இங்கு ஒரு சிறிய ஆலயம் இருக்கிறது. எப்பொழுதாவது திறப்பார்கள். ஆனால் இங்கு இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒருவர் முதிர்வயதில் இருக்கிறார். அவர் கிறிஸ்தவரா என்பது தெரியாது. ஆனால் அவர் ஆலயத்தைக் கடந்து போகும்போதெல்லாம் தன் தலைத் தொப்பியை எடுத்துவிட்டு தலைதாழ்த்தி வணங்கிவிட்டு அந்த ஆலயத்தைக் கடந்து போவார். அவரது வீடு ஊருக்குள் குறிப்பிட்ட தெருவில் இருக்கிறது” என்றார்.
குருவானவரும் அங்குச் சென்றார். குறிப்பிட்ட இராணுவ வீரரைப் பற்றிக் கேட்டார். அந்த வீட்டிலிருந்தவர்கள் ஆச்சரியமடைந்து, குருவானவரை வரவேற்று மாடியில் வியாதிப் படுக்கை யிலிருந்த அவரிடம் அழைத்துச் சென்றார்கள். முதியவரும் ஆச்சரியத்தில் மகிழ்ந்து வரவேற்றார் தன் மெல்லிய குரலால் அவர் குருவானவரிடம், “ஃபாதர், நான் ஒரு கிறிஸ்தவன்தான். இராணுவம் சென்ற பிறகு ஆலயம் செல்வதையே நிறுத்திவிட்டேன். திருப்பலிக்குச் சென்றது இல்லை. பாவசங்கீர்த் தனமோ நற்கருணையோ நான் பெற்று 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் நான் புதுநன்மை பெறும்பொழுது எங்களைப் பயிற்றுவித்த  குருவானவர், ஆலயத்தைக் கடந்து போகும்போதெல்லாம் ஆலயத்தில் உள்ள ஆண்டவர் இயேசுவுக்கு வணக்கம் செலுத்த தலை தொப்பியை எடுத்து விட்டு, தலைகுனிந்த பின் செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் மரண நேரத்தில் அன்னை கன்னி மரியாள் உங்களை மோட்சம் சேரச் செய்வார்கள் என்றார். நானும் இந்நாள்வரை செய்து வந்திருக்கிறேன். ஆச்சரியம், என் மரணப் படுக்கையில் மாதா உங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள்” என்றார் ஆனந்த கண்ணீர் வடித்த நிலையில்.மரணப் படுக்கையில் இருந்தவரும் திருவருட்சாதனங்களைப் பெற்று சில மணி நேரத்தில் புனிதமாய் மரித்தார்.
குருவானவர் அபிஷேகத்தில் பெற்ற ஆசீர்வாதமான பரிசுத்த ஆவியைக் குறித்து இவ்வாறு வாசிக்கிறோம் : “ஆண்டவரின் ஆவி என்மேலே. ஏனெனில் ஆண்டவர் என்னை அபிஷேகம் செய்துள்ளார். உள்ளம் நொந்தவர்களைக் குணப்படுத்தவும், எளியோர்க்கு நற்செய்தியை அறிவித்து, உள்ளம் நொந்தவர்களைக் குணப் படுத்தவும் ஆண்டவர் என்னை அபிஷேகம் செய்துள்ளார்” (எசா 61:1) எனக் காண்கிறோம்.

லூக் 10:29-37 வரை வாசிக்கும் பொழுது, நல்ல சமாரியருடைய உவமையைக் காண்கிறோம். அடிபட்டுக் கிடக்கும் யூதனுக்குப் பணிவிடை செய்யும் நல்ல சமாரியர்தான் ஒவ்வொரு குருவானவரும். மக்களுக்குச் செய்யும் இறைப்பணியும் அன்புப் பணியும் நல்ல சமாரியனுடைய செயல்களைத்தான் பிரதிபலிக்கின்றன. குறிப்பாக, 33-34 வசனங்கள் குருவானவரின் இறைப் பணியைக் குறிக்கின்றன.

ஆண்டவர் இயேசுவை விட்டுப் பாவத்தினால் பிரிந்து சென்று நித்திய வாழ்வை இழந்தவர்களைத்தான் அடிபட்டுக் கிடக்கும் யூதனின் நிலை குறிக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்காய் ஜெபித்து இறை ஆசீர் பெற இறைமக்களை அணுகிச் செல்பவர்தான் ஒரு குருவானவர். எல்லா மக்களையும் அணுகி அன்பு செய்பவரும் அவரே.

மனந்திரும்பிய அவர்களுக்கு ஞானஸ்நானத்தின் மூலம் புதிய பிறப்பையும், அபிஷேக எண்ணெய் பூசி பரிசுத்த ஆவியின் வல்லமைப் பொழிவில் அவர்களை இயேசுவில் வாழச் செய்பவர்தான் குருவானவர்.

திருப்பலியில் கல்வாரிப் பலன்களைப் பெற்றுத் தந்து இயேசுவின் திருவுடல் திருஇரத்தத்தையும் ஆன்மீக உணவாகவும் பானமாகவும் கொடுப்பவர்தான் இந்த அருட்பணியாளர். ஆன்மீக உணவாய் இயேசுவையே தருகிறார்.
பாவத்திற்காய்க் கண்ணீர் வடித்து பாவசங்கீர்த்தனம் செய்யும் ஒவ்வொரு வரின் உடைந்த உள்ளத்தை நல்ல சமாரியன் போல் கட்டு போடுபவரும் இந்தக் குருவானவரே.

கடைசியில் நோயில்பூசுதல் திருவருட்சாதனம் மூலம் மோட்ச வாழ்வுக்கு இட்டுச் செல்பவரும் இந்தக் குருவானவரே. எனவே, ஒவ்வொரு இறைப்பணி யாளரான குருவானவரும் நல்ல சமாரியனே.

மரணப் படுக்கையில் இருப்பவர்களின் மனநிலை பற்றி உளவியல் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் :
மரிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு நம் சரீரம் செயல்பாடுகள் அற்று உணர்விழந்து விடுகிறது. ஆனால் சிந்தனையாற்றல் மட்டும் செயல்படுகிறது. நமது மூளையின் செயலால் பிறப்பிலிருந்து இந்நாள் வரை நடந்துள்ள முக்கிய காட்சிகளெல்லாம் சில நிமிட திரைப்படம் போல் வெளிப் படுகின்றன. வாழ்வின் தவறுகளும் நிழற்படமாய் நிறுத்தப்படுகின்றன.
.இவ்வாறு பிரான்சிஸ் பியோபோர்ட் (Francis Beaufort) என்பவர் கூறுகிறார். 

மலையேற்றம் செய்யும் S.W. கோசென்ஸ்(Cozzens) என்பவர் மலையேறும்போது தவறி விழுந்தார். சுயநினைவை இழந்து மரணத்தின் பிடியில் இருந்து மீண்டும் சுயநினைவு பெற்று இவ்வாறு கூறியிருக்கிறார் : “நான் இறைவனோடு வாழும் வாழ்வைக் கொண்டிருந்ததால் மரண நினைவு என்னைப் பயமுறுத்தவில்லை. அதிசய விண்ணக காட்சிகளைக் கண்டேன். சில நொடிப் பொழுதிலேயே என் வாழ்வின் அனைத்து நினைவுகளும் வெளிப்பட்டு காட்சியாய்த் தென்பட்டன. இறை மகிமையில் வீற்றிருக்கும் மகிழ்வு என்னை ஆட்கொண்டதை அனுபவித்தேன்.” 

1935-ல் வெளிவந்த “Month” என்ற பத்திரிக்கையில் அருட்தந்தை தாஸ்டன் (Thurston) S.J. என்ற இயேசு சபைக் குருவானவர் இவ்வாறு எழுதுகிறார் : “மனிதனின் கடைசி நிமிடத்திலும் இறைவனின் இரக்கம் வெளிப்படுகிறது. தவறுகளும், பாவச் செயல்களும், செய்த குற்றங் குறைகளும் வெளிப்படுகின்றன. ஆத்துமாவில் இறையருளை இயேசு ஊற்றுகிறார். நல்ல கள்ளனைப் போல் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கும் ஆன்மாவுக்குள் விண்ணக மகிழ்வு நிரம்புகிறது.” 

குருவானவர் அளிக்கும் நோயில்பூசுதல் திருவருட்சாதனம் இத்தகைய உளநிலையில் கடந்து செல்பவர்களையும் விண்ணகம் சேர்க்கும் பெருங்கடல் படகாக இருக்கிறது. குருவானவர் இறைப் பணியின் மேன்மைக்காக ஜெபிப்போம். ஆமென்.

Fr.  ச. ஜெகநாதன்,
அய்யம்பாளையம், திண்டுக்கல்

0 comments:

Post a Comment