வேண்டாம் சு(தந்திரம) ; வேண்டும் சுதந்திரம

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?          
சர்வேசா இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம் கருகத்
திருவுளமோ?
எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ணவிளக்கிஃது மடியத் திருவுளமோ?
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபின்னர்
வாராது போலவந்த மாமணியைத்
தோற்போமோ?
தர்மமே வெல்லுமெனும் சான்றோர்சொல்  
பொய்யாமோ?” 
என்று பாடினான் பாரதி. ஆம், அவ்வாறு வளர்த்த சுதந்திரப் பயிரை, கண்ணீரால், தம் இன்னுயிரால் காத்தவர்கள் பலர். அந்த நெல்மணியைக் காக்கிறேன் என்று கூறி நிலத்தையே அபகரித்து, அவைகளில் களைகள் மண்டுகின்றன என்று கூறி, நற்பயிருக்கு ஈடாக, ‘களைகளாக’ வளர்ந்து, வளர்த்து ஊழல் பண்ணும் மனிதர்கள் மத்தியில் 64-வது சுநத்திர தினமா? வேண்டாம்.

சுதந்திரம் அதிலே ‘தந்திரம்’ என்ற வார்த்தை உள்ளது. பார்த்துப் பயன் படுத்துங்கள். வார்த்தையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும்தான். ஏனென்றால், ‘வாதாம் கொட்டை’ எடுக்க வந்தவனைத் தீவிரவாதி என்று தலையில் சுடுகிறார்கள் இராணுவத்தார். நாட்டைக் காப்பவர்கள் இப்பொழுது இளம்பிஞ்சைக் கொலை செய்கிறார்கள். எப்படிப்பட்டவர்களை நாம் பாதுகாப்புக்கு வைத்துள்ளோம்? 

‘Times Now’ சேனலில் இளைஞர் ஒருவரை 4 பேர் சேர்ந்து அடித்து, நிர்வாணப்படுத்தி, தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொன்றனர். இது நடந்தது இந்த சுதந்திரத் தாய்நாட்டில்தான். ஊழல், கொலை, கொள்ளை, பலாத்காரம், அபகரிப்பு என்ற எதிர்மறை எண்ணங் களையே எதிர்காலமாகக் கொண்ட மனிதர்கள் மத்தியிலா, உண்மைச் சுதந்திரம்? வேண்டாம், வேண்டாம்.
சுதந்திரத்தைப் பொறுத்தவரை மனிதர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. இதைச் செய்தால் ‘எனக்கு என்ன கிடைக்கும்?’ என எண்ணும் மனிதர்கள்
2. இதைச் செய்தால் ‘என் சமூகத்திற்கு என்ன பலன் கிடைக்கும்?’ என எண்ணும் மனிதர்கள்.
முதல் வகை மனிதர்களைத்தான் இச்சமூகம் உருவாக்குகிறது. இவர்களால் பிறர் காயப்படுத்தப்பட்டாலும், தம் உரிமைகள் பறிபோகாமல் காத்துக்கொள்ளும் சுயநல வாதிகள். இவர்களை நாம் இன்றைய அரசியல்வாதிகளுக்கு ஒப்பிடலாம். ஏனென்றால், இவர்களால் விலைவாசியைச் சரிசெய்ய முடியும். விலை கொடுத்து வாங்க முடியும். ஆனால் ஏழைகள், நடுத்தர மக்களால் இதனைச் செய்ய முடியாது. ஆனாலும்  விழிப்புணர்வற்ற மக்கள் அவர்களைக் கொணர்ந்து நல்ல பயிருடன் இணைக்கிறார்கள். பாதிப்பு என்னவோ நமக்குத்தான்.

இரண்டாம் வகையினர் சமூகத்திற்காகப் பலன் தேடக்கூடியவர்கள். அதற்காகத் தங்கள் வாழ்வைத் துச்சமெனக் கருதி செயல்படுபவர்கள். அவர்களில் அண்ணல் தொட்டு அன்னா ஹசாரே வரை பலர் உள்ளனர். அவர்களைக் கொண்டு இந்தச் சுதந்திரப் பயிரைக் காக்க முடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. இது எப்பொழுது சாத்தியம் என்றால், நாம் நமது கரங்களை அவருடன் இணைக்கும் போதுதான். நமது ஒத்துழைப்பை இத்தகைய மனிதர்களுக்குக் கொடுக்க வேண்டும். அந்த ‘சுதந்திரம்’தான் வேண்டும். 

சரி, யார் இவர்கள்? இரயில் நிலையத்தில் இறங்கியபோது, ஆடையின்றி இருந்த பலரைக் கண்டவுடன், இனி நானும் மேலாடை அணிவதில்லை என்றார் அண்ணல் காந்தியடிகள். எனது படிப்பை விட, என் மக்களின் துன்பம் தரும் பாடம் எனக்குக் கிடைக்கும் பட்டயத்தை விடச் சிறந்தது என்று வாழ்பவர் சமூக சேவகி மேத்தா பட்கர். செல்வச் செழிப்பிலே  வாழ்ந்தேன். ஆனால் என் தாய், ‘அந்தத் தாழ்ந்த சமூகத்தினனுடன் சேராதே’ என்றார்; அவர்களுக்கே என் வாழ்வு என்ற சமூக சேவகர் பாபா ஆம்தே. ஏழாம் வகுப்பு படிக்க முடியவில்லை, எனவே இராணு வத்தில் ஓட்டுநராகச் சென்று, கற்று, இன்றும் ‘நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும்; சுதந்திரப் பயிர் நன்றாக வளர்ந்து இச்சமூகம் பலன் பெற வேண்டும்’ என ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரதம் இருப்பேன்; இந்த மண்ணுக்காக என் இன்னுயிரைக் கொடுப்பேன் என்றார் அன்னா ஹசாரே. இவர்கள்தான் வேண்டும். இவர்களில் சிலருக்குக் ‘கை’ உயர்த்தினோம். இன்று இவர்களுக்குக் ‘கை’ கொடுப்போம். அத்தகைய ஒரு சுதந்திரம்தான் வேண்டும். 

முயல்வோம். முயன்று பல சாதனைகள் புரிவோம்!

0 comments:

Post a Comment