உலக கல்விப் புரட்சி நாள்


“கோவில்கள் அனைத்தும் கல்விச்சாலைகள் செய்வோம்” – பாரதி

"நாட்டின் தலைவர்கள் வகுப்பறையில்தான் உருவாகிறார்கள்”                  நெப்போலியன்

ஜூலை 28-ஆம் நாள் கல்விப் புரட்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. கல்விதான் நாட்டின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படைக் காரணியாக உள்ளது. உடைமைகளில் சிறந்தத, அழியாத உடைமையாகக் கருதப்படுவது கல்வி மட்டுமே. கற்றறிந்தவருக்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்பு. ஒருவர் பெற்ற கல்வி ஏழு பிறப்பிற்கும் பயன் தரும் என்பதை மையப்படுத்தியே திருவள்ளுவர்,
 “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து” 
எனப்பரிந்துள்ளார்.கல்வி உலகளாவிய சூழலில் இன்று மிக அதிக அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், இந்தியச் சூழமைவிலும், தமிழகச் சூழமைவிலும் எந்நிலையில் நடைபயிலுகின்றது எனக் காணலாம்.

உலகில் வேறெங்கும் நடைபெறாத அளவுக்கு இந்தியாவில்தான் கல்வி பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது. குருகுலக் கல்வி, திண்ணைக் கல்வி எனத் தொடங்கி, பல்கலைக் கழகங்களாக, நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக உயர்ந்து நிற்கின்றது. ஆனால் இந்த வளர்ச்சி, இந்தியா முழுவதும் எதிரொலித்து, அனைத்து மக்களுக்கும் கல்வி கிடைத் துள்ளதா எனில் அது கேள்விக்குறியே.

113 கோடியைத் தாண்டிவிட்ட இந்திய மக்கள் தொகையில் 42 விழுக்காட்டினர் குழந்தைகள், பள்ளி செல்லும் வயதினர். இதுதான் இந்தியத் திருநாட்டின் மனித வளத்திற்கான அச்சாணி. இந்த 42 விழுக்காட்டினரும் கல்வி கிடைக்கப்பெற வில்லை என்பது வேதனையான ஒன்றாகும்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, 2009-ஆம் ஆண்டில்தான் அனைவருக்கும் கல்வி கிடைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் சட்டம் இயற்றப்பட்டது. இது எந்த அளவுக்கு நடைமுறைப் படுத்தப்படும் எனக் கல்வியாளர்கள் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

1968-ஆம் ஆண்டு நடுவண் அரசு, தனது ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கையில் கல்விக்காக ஒதுக்கிய தொகை 4 விழுக்காடு ஆகும். இன்று அது 10 விழுக்காட்டினைத் தாண்டியிருக்க வேண்டும். ஆனால் இன்றும் அதே 4 விழுக்காடுதான் ஒதுக்கப்படுகிறது. அதே நேரத்தில், பிற துறைகளுக்கான ஒதுக்கீட்டுத் தொகை ஆண்டு தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய அரசால் ‘அனைவருக்கும் கல்வி’ (சர்வ சிஷ்ய அபியான்) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட தொகை பின்வருமாறு :

2005-06ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டது 21,032.84 கோடி
2006-07ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டது 29,513.85 கோடி
செலவிடப்பட்டது 27,827.87 கோடி

குழந்தைகள் மற்றும் கல்விச் சூழமைவுகளுக்கான செலவினங்கள முந்தைய நிதிநிலை அறிக்கையைவிட வெறும் 21.65 விழுக்காடு மட்டுமே அதிகம். இது அரசின் பாராமுகத்தினைக் காட்டுகிறது.

இந்தியாவில் தமிழகம் கல்விக்கான தனிச் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. இந்திய ஆட்சிப் பணியகத் தேர்வுகளில் தமிழர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய நிகழ்வாகும். அதே நேரத்தில் இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் கல்வி வணிகமயமாகிவிட்ட சூழலும் தமிழகத்தில்தான் நடந்தேறி வருகிறது. ஒருபுறம் அரசு மற்றும் தமிழ்வழிப் பள்ளிகள் மூடுவிழா கண்டுகொண்டிருக்க, மறுபுறமோ புற்றீசல் பேபால் நாள்தோறும் பெருகிவருகின்றன தனியார் ஆங்கில வழிக்கல்வி (மெட்ரிக் பள்ளிகள்) நிறுவனங்கள்.

கடந்த ஜூன் மாதம் முழுவதும் சமச்சீர் கல்வியா? பழைய பாடத்திட்டமா? என்ற நிலை ஒட்டுமொத்த தமிழகத்தையும் திகைக்கச் செய்தது. இதற்கிடையில் தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயக் குழுக்கள் வேறு. பெரும்பாலான பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் தரம் இல்லையயனக் கூறி, தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் தரம் குறைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. 1968-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட  கோத்தாரி ஆணையம் முதல் 2007-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட எஸ். முத்துக்குமரன் குழு வரை பல்வேறு பரிந்துரைகள் அளித்துள்ளன. அவை பெரும்பாலும் அரசியலாக்கப்பட்டு வருகின்றன என்பது வேதனை தரும் நிகழ்வாகும்.

தனியார் பள்ளிக் கட்டணத்தைப் பொறுத்தவரையில், 2009-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதன்படி, கட்டணத்தினை நிர்ணயிக்க தமிழகத்தில் உள்ள 10,233 தனியார் பள்ளிகளிடம் பதில் கேட்கப்பட்டது. 701 பள்ளிகளிடமிருந்து பதில் இல்லை. 6,400 பள்ளிகள் மேல்முறையீடு செய்தன. வெறும் 4,000 பள்ளிகள் மட்டுமே இக்கருத்தினை ஏற்றுக்கொண்டன. மீண்டும் நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அது நிர்ணயித்திருக்கிற சூழலிலும் தினமும் அல்லலுறுவது தமிழக மக்கள் தான். அதே நேரத்தில் கல்வியில் கொள்ளை இலாபம் ஈட்ட பள்ளிகள் தயாராகிவிட்டன.

சமச்சீர் கல்வி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்ற பேச்சு எழுந்ததும் பல்வேறு தனியார் பள்ளிகள் தங்களது பாடத்திட்டத்தினை மாநில திட்டத்திலிருந்து, மத்திய அரசின் பாடத்திட்டங்களுக்கு மாற்றியமைத்ததினை நினைவிற்கொள்க.

தாய்மொழிக் கல்வி பெருமளவில் புறக்கணிக்கப்படுவதும், தாய்மொழியே கற்காமல், என்னவென்று தெரியாமல் ஒருவர் அரசு வேலைவாய்ப்பினைப் பெறுவதும் தமிழகத்தின் கதை.

உலக கல்விப் புரட்சி நாள் நமக்கு விடுக்கும் அறைகூவல், வெறும் மதிப்பெண்களை மட்டுமே முன்னிலைப்படுத்தாமல், மனித மாண்புகளை வளர்த்தெடுக்கும் கல்வியைப் பெறவும், தாய்மொழியையும், தாய்மண்ணையும் நேசிக்க வேண்டும் எனவும் எடுத்துரைப்ப தாகும். நன்னெறிக் கல்வியின் வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கும் தனியார் தொண்டு நிறுவனங்கள், மாணவர்களின் உரிமைக்காகப் போராடும் ஜனநாயக இளைஞர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் என இவர்களுடன் இணைந்து பணியாற்ற முன்வருவோம்; புதிய சமுதாயத்தினை உருவாக்குவோம்.

சகோ. ச. நேசம்
நல்லாயன் குருமடம், கோவை

0 comments:

Post a Comment