நலம் பெற விரும்புகிறீரா?


சுருக்கு எழுத்துகளுக்கு ஈடாக வார்த்தைகளின் எழுத்துக்களைச் சுருக்கி வேக வேகமாக அனுப்பப்படுகின்ற இ.மெயில், S.M.S. போன்றவற்றில் பரிமாறப்படுகின்ற இன்றைய செய்திகளில் இக்கட்டுரைத் தலைப்பின் வார்த்தைகள் அதிகமாக காணப்படுவதில்லை. ஆனால் இக்கலாச்சாரத்திற்கு முன் நிலைத்து நின்ற கடிதம் எழுதும் காலத்தில் முதல் வரியிலேயே மறக்காமல் கூறப்பட்ட வார்த்தை ‘நான் நலம். நீ நலமா?’ என்பதுதான்.

பிப்ரவரி மாதத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் பாரம்பரியத்தில் வரும் லூர்து அன்னையின் திருவிழா என்பது நோய் நீக்கும் இறையருளைத் தேடி, நோயாளிகளுக்காய் ஜெபிக்கும் பண்பு கொண்ட நிலையை நினைவு படுத்தும். பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் நோயாளிகள் நலம் பெற்றுச் செல்லும் அதிசயங்கள் நடைபெறு கின்றன. எனவேதான் உலக நோயாளிகள் தினத்தன்று எண்ணற்ற நோயாளிகள் ஒன்று கொணரப்பட்டு நலம் பெற நடைபெறும் பிரார்த்தனைகள் சிறப்பான இடம் பெற்றுள்ளன.

“நலம் பெற விரும்புகிறீரா?” (யோவா 5:6) எனக் கேட்டு, “நீ நோய் நீங்கி நலமாயிரு” (மாற் 5:34) என்று குணம் தந்த இயேசுவின் செயல்கள் பல. தான் செய்த இந்த மகத்துவமான செயல்கள் மூலம், தமது திறமைகளை, உயர் சக்தியை வெளிப்படுத்தி, தம்மைப் பிரபலமாக்கிக் கொள்ள அல்ல, மாறாக மக்களை முன்னிலைப் படுத்தி, அவர்களின் துன்பத்தை, உடல் வேதனையை, உள்ளத்தின் சோர்வைப் போக்குவதற்காக நோக்கம் கொண்ட வையே. இம்மாபெரும் பணி தம்மோடு நிறைவடையக் கூடியதாக இல்லாமல், தனது பெயரினால் தம் சீடர்களும் குணமாக்கும் பணியைத் தொடரும் வல்லமை தந்தார் (மாற் 16:17-18). நோயின் கொடுமை இருக்கிறவரை குணமாக்கும் வல்லமையும் செயல்பட வேண்டும்.

அப்படியயன்றால் இன்றும் பல்வேறு இறைப்பணிகளோடு குணமாக்கும் பணியும் இணைந்தே செல்ல வேண்டும். மருத்துவத்தோடு இறை நம்பிக்கை இணையும் குண மாக்கலில் குருத்துவ துறவற அழைப்பின் மேன்மை வெளிப்பட வேண்டும். இப்பணி இறை வல்லமையில் வெளிப்படுவதால், இறைப் பண்புகளைக் கொண்டுள்ள மனநிலையில் மட்டுமே குண மாக்கலும் நடைபெறும்.

  • மக்களை மையப்படுத்தும் மன  நிலை...
  • அவர்களின் துன்பத்தில் பங்கேற்கும் மனநிலை...
  • கள்ளங்கபடற்ற உறவு நிலை
  • நோயாளிகளைச் சந்திப்பதால் உண்டாக்கும் மகிழ்ச்சி
  • புண்பட்டுப் போன மனதைக் குணமாக்கும் உற்சாக வார்த்தைகள்
  • இறைநம்பிக்கையை உண்டாக்கும் ஜெபங்கள்
  • எதிர்கால நலம் பற்றிய அனுபவப் பகிர்வுகள்

இவை இறை பண்புகளின் சில வெளிப்பாடுகள்.
‘நோய்கள் குணமாக்குதல்’ இறை பணியோடு சேர்ந்தது என்றால், உடல் நோய்களை உருவாக்கும் சமூக நோய்கள் களையப்படுதல்  உயர் பணிகளோடு இணைந்துள்ளதே. நோயாளிகளைக் குணமாக்குகிற இயேசு அவைகள உண்டாக்கக் காரணமான சமய, சமூகத் தீமைகளை இனம் கண்டு போராடி மக்களை விடுவித்தார். ‘வருமுன் காப்போம்’ என்று கூறும் சமூகத்தில், நோய் உண்டாக்கும் காரணிகளைத் தடுக்கும் செயல்பாடும் இறை பணியோடு இணைந்ததே. உடல் நோய்களை உண்டாக்கும் மாசுகள், சுகாதாரமின்மை, உறவுகளை தடுத்து மனநோய்கள் உண்டாக்கும் தன்னலம், பகைமை, பழி யுணர்வுகள், குடும்ப உறவுப் பிரச்சனைகள், மன அழுத்தம் இவற்றை அறிந்து குணமாக்கலும் இறை பணியே. இத்தீமைகளுக்குள் சிக்கிக் கொண்டு தொடர் நோயாளி களாகவே மாறிப்போன மனிதர்கள் மீட்புப் பெறுவது யாரால்? எப்போது?

குணமாக்கல் உடலில் மட்டுமல்ல, மனத்திலும், சமூகத்திலும் தொடர்ந்து நடைபெற வேண்டிய நிகழ்வே. இறையழைப்பு இக்குணமாக்கலில் பொருள் பெறட்டும்.

‘நான் நலம்’ ‘நீயும் நலம் பெறு!’

சே. சகாய ஜாண்

0 comments:

Post a Comment