குணம்பெறவும் குணப்படுத்தவும்


அருள்சகோதரிகளுக்காக நடத்திக் கொண்டிருந்த அந்த கருத்தமர்வில் “A World without”  என்கிற தலைப்பில் ஆளுக்கொரு கருத்து சொல்லும்படி கேட்டேன்.
போர், பகைமை, பாகுபாடு, தீவிர வாதம், வன்முறை, வறுமை,  லஞ்சம்,  ஜாதியம், மத துவேசம், பெண்ணடிமைத் தனம், குழந்தைத் தொழில், சுரண்டல், வேலையின்மை, நோய்கள், போதைப் பொருட்கள், அணு ஆயுதங்கள், உழைப்புச் சுரண்டல், மாசு போன்ற இவைகள் இல்லாத உலகம் வேண்டும் என அவர்கள் ஆசையோடு கருத்து தெரிவித்தனர்.

பின்பு “A World with”என தலைப்பை மாற்றிக் கொடுத்து ஆளுக்கொரு கருத்து சொல்லத் தூண்டினேன்.  அமைதி, சமத்துவம், வேலை வாய்ப்புகள், எல்லோருக்கும் அடிப்படை வசதிகள், நல்ல உறவுகள், சகோதரத் துவம், சமத்துவம், ஒற்றுமை, மனித நேயம், பொருளாதார முன்னேற்றம், மனித உரிமைகள் என அவர்களின்பட்டியல் தொடர்ந்தது. இப்படிப்பட்ட உலகம் உங்களுக்கு வேணுமா? என்றேன்.  எங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்குப் பின்வருபவர்களுக்கும் இதுதான் வேண்டும் என்றனர்.  நீங்கள் எல்லோரும் தேவ அழைப்பு பெற்ற அருள்சகோதரிகள் என்பதால் இப்படி ஆசைப்படுகிறீர்களோ? என்றேன்.  இல்லையில்லை.  மனிதனாகப் பிறந்த எவனுமே இதுதான் வேணும் என்பான்.  இதில் என்ன தேவ அழைப்பு சிறப்பிருக்க முடியும்? என்றனர்.  நல்லது.  மனித குலமே பெற விரும்பும் இத்தகைய உலகம் எப்படி இருக்கும்? என்றேன்.  அதுதான் சொர்க்கம், மோட்சம், இறையரசு எனக் குதூகலமாய்க் கத்தினர்.

ஆம்!  மோட்சம், சொர்க்கம் இறையரசு என நாம் ஆளுக்கொரு விதமாய்ச் சொல்லும் தலமாக இந்த உலகம் உருவாகிவிட வேண்டுமென்று தான் ஒவ்வொரு மனிதனும் விரும்புகிறான்.  அவன் படித்தவன் - படிக்காதவன், பாமரன் - பணக்காரன் என எவனாக இருந்தாலும், எந்நிலையில் இருப்பினும் அவனின் உள்மனம் இதனையே விரும்புகிறது.  அதனையே தேவனின் அழைப்பு என்றும் சொல்லலாம்.  இந்த அழைப்பு தேவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக் குள்ளும் தாராளமாகவே இருக்கிறது.  அதிலும் நாலு பேர் குழுமியிருக்கிற இடத்தில் இந்த ஆவல் இன்னும் அதிகமாகவே வெளிப்படுகிறது.  ஆனால், தனியே சென்றவுடன் இந்த ஆவல் சிறிது சுருங்கி எனக்கும் என்னைச் சார்ந்தவருக்கும் மட்டும் கிடைக்க வேண்டுமென ஆளாய்ப் பறக்கிறது.  அந்தத்  தனிப்பட்ட ஆசையே பேராசை யாகி சுயநலமாய்ச் சூழ்ந்து இந்த உலகம் மோட்சமாய், இறையரசாய் மாறாமல் தடுத்து தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

இறையரசாய் இவ்வுலகம் மாறிட வேண்டும் என ஆசிக்கும் மனிதனே அவனின் “சுய நலத்தால்” அதனைத் தடுத்து விடுகிறான்.  மனிதனைப் பிடித்துள்ள “சுய நலம்” என்கிற நோயிலிருந்து அவனைக் குணப்படுத்தி விட்டால் இந்த உலகமே சொர்க்கமாய் மாறும்.  சுயநல நோயிலிருந்து அவனை எப்படிக் குணப்படுத்துவது?  இது மனநிலை சம்மந்தப்பட்ட விசயம்.  எனவே அவனின் மன மாற்றத்திற்கு உதவிட வேண்டும்.

மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதையே கல்வியாக ஆக்கி அவனுக்கு வழங்கிட வேண்டும்.  இத்தகைய மனநிலை மாற்றத் திற்கான கல்வியைச் சொல்லித் தருவதாலோ, உபதேசிப்பதாலோ, சட்டங்களாலோ விளைவிக்க முடியாது.  மாறாக இது அனுபவக் கல்வியாகிட வேண்டும்.

அதாவது சுயநலம் பாவம், பேராசை பெருநஷ்டம் என உபதேசம் செய்யும் ஆசிரியர்களைக் காட்டிலும் சுயநல மில்லாமல் வாழ்ந்து காண்பிக்கும் ஆசான்களாலும், ஆசையைத் துறந்து வாழும் துறவிகளாலும் மாத்திரமே மகத்தான மாற்றத்தை ஏற்படுத்திட முடியும்.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை அறுத்த துறவிகள் சுயநலமில்லாமல் வாழ்ந்து காண்பிப்பதைக் கண்டு அந்த அனுபவத்தைச் சுவைக்கும் எந்தவொரு மானிடனும் மனநிலை மாற்றம் பெற்று சுயநலம் அறுப்பான். எனவே மனிதனின் சுயநலம் என்ற நோய் ஒழிய வேண்டுமாயின் அவர்களுக்கு முன்பாக சுயநலம் அறுத்த, ஆசைகள் துறந்த ஆசான்களும் துறவிகளும் தங்களது முன்மாதிரியான வாழ்க்கையை மக்கள் கண்டுணரச்  செய்ய  வேண்டும்.  அதுவே இந்நோய்க்கான அரு மருந்தாய் மக்களுக்கு உதவி மாற்றத்தை விதைக்கும்.  இத்தகைய குணப்படுத்தும் ஆற்றலுக்கான அழைத்தலே தேவ அழைப்பு, தெய்வீக அழைப்பு.  அறிவியல் தொழில் நுட்பத்தில், பொருட்களின் நுகர்வு வெறியில், பகட்டில், படோடோபத்தில் மாட்டிக் கொண்ட மதங் களோ, மதத் தலைவர்களோ, போலிச் சாமியார்களோ, போலித் துறவிகளோ இக்குணப்படுத்தலில் ஈடுபட முடியாது.  ஏனெனில் நோயாளியால் இன்னொரு நோயாளியைக் குணப்படுத்திட முடியாது.  மாறாக நோயைப் பரப்பிடத்தான் முடியும்.

சுயநலம் மறுத்த துறவிகளும் குருக்களும் பிறர்நலப் பணியில் தம்மை முழுவதுமாய் ஈடுபடுத்தி சுயநலத்திற்கான மாற்றை விதைக்கும்போது விண்ணரசு முளைக்கும்.  ஆம்  உலகின் சுயநல நோய் போக்கிடும் அருமருந்துகளான  சுயநலம் (அ)மறுத்தல், பிறர் நலம் வளர்த்தல் என்கிற இருபெரும் வழிகளைக் கையாண்டு நோயைக் குணப்படுத்தலாம்.  இதுவே இன்றைய தேவ அழைத்தலின் குணப்படுத்தும் பணி.  அதிலும் குறிப்பாக சுயநல உலகின் ஓட்டத்தில் ஆடி, பாடி, ஓய்ந்து, நோய் நொடி வந்து மருத்துவமனையில் வீழ்ந்து கிடப்போரைச் சென்று சந்தித்து அவர்களிடம் ஒருவர் பிறநலப் பணிகளைச் செய்து காட்டுவாரேயானால் அது அவர்களை உலுக்கிப்போடும்.  துன்ப வேளையில் ஆறுதல், ஆபத்தில்/அழிவில் உதவுதல் ஒருவனின் வாழ்வை உரசிப் பார்க்க வைக்கிறது.  எனவே தேவ அழைத்தலின் குணப் படுத்தும் பணி அங்கிருந்தே ஆரம்பிக்கப்பட்டால் அதன் பலன் விண்ணைத் தாண்டுமளவிற்கு விரிந்து கிடக்கும்.  மார்க்கம் இருக்கிறது.  மனம்தான் வேண்டும். குணம்பெறவும் குணப்படுத்தவும் முயன்று பார்ப்போம்!

எஸ். எரோணிமுஸ்,  
“ஊற்றுக்கண்” ஆசிரியர், திருச்சி

0 comments:

Post a Comment