என் இறைப்பணியின் தொடக்க நாட்களில் கொக்கூரணிப் பங்கில் பணியாற்ற என்னை அனுப்பினார்கள். அதுதான் பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்ற முதல் பங்கு. மிகவும் பின்தங்கிய மக்கள் வாழும் பகுதி அது. சிறிய எண்ணிக்கையுடைய குடியிருப்புகளே அங்கு காணப்பட்டன. போக்குவரத்திற்கு நல்ல சாலை வசதியும் இல்லை. கிராமப்புற எளிய வாழ்வு.
ஆனால் அங்கிருந்த ஆலயம் 300 ஆண்டு பழமையான புனித செபஸ்தியார் ஆலயம். மக்கள் அந்த ஆலயத்தையும், புனித செபஸ்தியாரையும் மிகப் புனிதமாய் நினைத்து பெருந்திரளாய் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஜெபிக்க அங்கு வருவார்கள்.
மக்களின் ஏக்கத்தையும், அவர்களின் விசுவாசத்தையும் பார்த்து வியாதிப்பட்டவர்கள் சுகமடைய இறைவனின் வல்லமைக்காய் என்னையே ஒடுக்க ஆரம்பித்தேன். ஜெபித்தேன். வல்லமை முகாமில் பங்கு பெற்று பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றேன். இறைவல்லமை என்னில் செயல்பட ஆரம்பித்தது.
ஒரு செவ்வாய்க்கிழமை அன்று சுமார் ஐந்து வருடங்களாய்ப் பேச முடியாத ஒரு சிறுமியை என்னிடம் கொண்டு வந்திருந்தார்கள். பேயின் பிடியில் சிக்கி அவள் பேச முடியாதவளாய் இருந்தாள். அன்று இரவு திருத்தலத்திலேயே தங்கி இருக்கச் சொன்னேன். ஏனெனில் அடுத்த நாள் புதன்கிழமை காலை ஐந்து மணித் திருப்பலியில் அப்பெண்ணுக்காக ஜெபிப்பதாய்க் கூறி இருந்தேன். நானோ அன்று இரவு அச்சிறுமிக்காகவும், என்னில் இறைவல்லமை நிரப்பப்படவும் வெகுநேரம் ஜெபம் பண்ணிவிட்டு உறங்கப் போனேன்.
காலைத் திருப்பலி நேரத்தில் அச்சிறுமியைப் பீடத்தின் அருகில் வைத்து ஜெபித்தேன். என் கரங்கள் அவள் தலையில்பட்டவுடன் பிசாசு கத்திக் கொண்டு வெளியேறியது. அவளும் அடுத்த நொடியிலே “இயேசுவே உமக்குப் புகழ்” எனச் சத்தமாய்க் கூறி பேச ஆரம்பித்தாள். அவளின் பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்.
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்து விண்ணகம் செல்லும் முன் தம் சீடர்களுக்கும் அப்போஸ்தலர்களுக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமையைப் பொழிந்து, “வியாதிப்பட்டவர்களைச் சுகமாக்குங்கள், இறந்தவர் களையும் எழுப்புங்கள்...” என்கிறார் (மாற் 16:17).
இறைப்பணிக்குத் தேர்ந்து கொள்ளப்பட்டு அபிஷேகம் பெறும் ஒவ்வொருவருக்குமே அபிஷேகத்தினால் வல்லமை அளிக்கப்படுகிறது. புனித பவுல் திமொத்தேயுவுக்கு இவ்வாறு எழுதுகிறார் : “உம்மீது என் கைகளை விரித்ததால் கடவுளின் வரம் உமக்குள் வந்துள்ளது” (2 திமொ 1:6).
எசாயா எழுதிய இறைவாக்கு தன்னுள் நிறைவேற்றப்பட்டதாக இயேசு இவ்வாறு கூறுகிறார் : “ஆண்டவருடைய ஆவி என் மேலே. ஏனெனில் என்னை அபிஷேகம் செய்துள்ளார்... குருடர் பார்வை பெறவுமே....” (லூக் 4:18; எசா 61:1).ஒவ்வொரு குருவும் அபிஷேகம் பெறும்போது இறைவல்லமையும் இறைஅறிவும் ஊற்றப்படுகின்றன (1 யோவா 2:20). இறைப்பணியாளர்களின் முக்கிய வல்லமையாக புதுமை செய்யும் ஆற்றல் விளங்குகிறது.
புனித திருமுழுக்கு யோவான் தன் சீடர்களை இயேசுவிடம் அனுப்பி, வரவிருக்கும் மீட்பர் இவர்தானா என இயேசுவிடமே கேட்டு வாருங்கள் எனக் கூறி அனுப்புகிறார். அதற்குப் பதிலாக இயேசு, “நீங்கள் என்னிடம் கண்ட அற்புத செயல்களையும் புதுமைகளையும் அவரிடம் கூறுங்கள்” என்கிறார். ஏனெனில் அதுவே ஒரு இறைவாக்கினர் என்பதற்கு அடையாளம் என இயேசு குறிப்பிடுகிறார்.
புனித பவுல் தான் ஓர் இறைவாக்கின் அப்போஸ்தலர் என்பதற்கு அடையாளமாக “நான் கொண்டிருந்த தளராமன உறுதி, செய்த அருங்குறிகள், அற்புதங்கள், புதுமைகள் இவையே அப்போஸ்தலருக் குரிய அறிகுறிகள்” (2 கொரி 12:12) என்கிறார்.
நான்கு நற்செய்திகளில் இயேசு செய்த புதுமைகளையும், அற்புத நிகழ்வையும் நீக்கிவிட்டால் வேறு அதிகமாக ஒன்றுமே இருக்காது. ஒவ்வொரு குருவும் ஒரு மறுகிறிஸ்துவே. எனவே நம்மில் கட்டாயம் புதுமை செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும். அதுவே மக்களை மனம் திருப்பி இறைவனிடம் கொண்டுவரும் அருள் சாதனமாக விளங்குகிறது (மத் 11:21, 23).
இறைவல்லமைக்காய் ஜெபிப்போம்; அர்த்தமுள்ள பணியாளர் குருக்களாய் வாழ்வோம். ஆமென்.
0 comments:
Post a Comment