அரிய வாழ்க்கை

குருத்துவ ஆண்டு நிறைவடையும் காலக் கட்டமிது.  குருத்துவத்திற்கு எத்தகைய வரவேற்பு மக்கள் மத்தியில் இருக்கிறது என்பதை நடந்து முடிந்த கொண்டாட்டங்கள் அத்தனையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.  இறை மக்கள் சமுதாயத்தில் மட்டுமல்ல, பொதுவான மக்கள் சமுதாயத்திலும் குருக்கள் பெரிதும் மதிக்கப்படுகின்றனர்.  குருக்கள் சிலரை விமரிசிக்கின்ற மக்கள்கூட குருத்துவத்தைப் பற்றி உயர்வான எண்ணங்களைத்தான் கொண்டிருக்கின்றனர்.  இத்தகைய வாழ்க்கை முறை முழுமையாக வாழப்படவில்லையே என்ற ஆதங்கம் தான் விமரிசனமாக வெளிப்படுகிறது.


இந்த வாழ்க்கை முறையை நடை முறைப்படுத்துவதில் எழக்கூடிய சிக்கல்கள் ஏராளம்.  பணி வாழ்க்கையை மிகச் சிறப்பாகத் துவங்கிய குருக்கள் சில ஆண்டுகளில் தளர்ந்து போய் விடுவதைக் காணமுடிகிறது.  காரணங்கள் பலவகை.  முதல் காரணமாக நான் சொல்ல விழைவது ‘இறை மக்கள் சமுதாயத்தில் அவர்களுக்கு ஏற்படுகின்ற உறவுச் சிக்கல்கள்’.  மறுகிறிஸ்துவாக மதித்து ஏற்றுக்கொண்ட இறைமக்கள் கிறிஸ்துவுக்குத் தந்த அதே சிலுவைத் துன்பங்களைக் குருக்களுக்குத் தருகின்றனர்.  தாங்கள் எத்தகைய வாழ்க்கையையும் வாழலாம், ஆனால் தங்களுடைய குருக்கள் சம்மனசுக்களைப்போல் வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது;  அவர்களின் மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைச் சமுதாய வாழ்விலிருந்து ஒதுக்கிவைப்பது;  அவர்கள் புரியும் சிறு தவறுகளையும் பெரிதுபடுத்தி தங்களின் வாழ்க்கைக்கு நியாயங்கள் கற்பிப்பது போன்றவை 
இன்றைய நடைமுறை யதார்த்தங்கள்.


இரண்டாவது சிக்கலாக நான் கருதுவது ‘சாதியம்’;  குரு என்பவர் குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்தவர்தான்.  இந்திய கலாச்சாரப் பின்னணியில் பார்க்கின்ற நேரத்தில், குறிப்பிட்ட சாதியால் உருவானவர்தான்.  அவரது குருத்துவத் திருநிலைப்பாடு அவரை சாதியத்திலிருந்து பிரித்துக் காட்டுகிறது.  இறைமக்கள் அனைவருக்கும் பொதுவானவராக அவர் அபிஷேகம் செய்யப்படுகிறார்.  அதன் பின்னும் அவரைக் குறிப்பிட்ட சாதியைச் சாரந்தவராகப் பார்ப்பது மிகப் பெரிய குற்றமாகும்.  தூய ஆவிக்கு எதிராகச் சிந்திக்கின்ற நிலையாகும்.  குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவராகவே அவரைப் பார்த்து அவரின் அத்தனை அருங்கொடை களையும் முடக்கிப் போடுவது இன்று குருத்துவத்திற்கு நாம் இழைக்கும் பெரிய களங்கம்.


மூன்றாவது சிக்கலாக நான் கருதுவது ‘பொருளாதாரப் புதைமணல்’. சாதாரண வாழ்க்கையில் பொருளாதாரம் மிக அவசியமான ஒன்று.  அதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், ஈடுபடும் கடினமான உழைப்பு போன்றவை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.  ஆனால்; குருத்துவ வாழ்க்கையில் இத்தகைய பொருளாதார மேம்பாட்டு முயற்சிகள் தேவையற்றவை;  அர்த்தமற்றவை. குருக்களை இத்தகைய பொருளாதார முனைப்புகளில் சிக்கவைத்து அவர்களின் அருள்வாழ்வைப் பாழடிக்கும் முயற்சிகள் ஏராளமாக நடக்கின்றன.  பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், வெளிநாட்டு முதலீடுகள் போன்ற பல்வேறு சக்திகள் குருக்களைச் சிதறடிக்கின்றன.  இவற்றிலிருந்து அவர்களைக் காப்பாற்ற திருச்சபை முன் வருவது மிகக் குறைவாகவே உள்ளது.  குருக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து அவர்களின் அருள் வாழ்வு சிறக்க வழிவகைகள் செய்வதை விட்டுவிட்டு, பணம் கொடுக்கின்ற குருக்கள், வசதி வாய்ப்பு செய்து கொடுக்கின்ற குருக்கள், சமூக நிலையை உயர்த்தப் பயன்படுகின்ற  குருக்கள் என்று பொருளாதார நோக்கில் குருக்களை அணுகுகின்ற நிலைகள் உள்ளன.  இவை மாறுகின்ற நேரத்தில் தான் குருத்துவம் தழைக்க முடியும்.


சரித்திரம் படைக்க


இந்தச் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு இன்று எத்தனையோ குருக்கள் அரிய முயற்சிகள் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  பொது மக்களுக்குப் பணிபுரியும் பணியாளராகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களின் நன்மதிப்பு பெறுகின்ற நிலையை தியாகம்  செய்யும் குருக்கள் உண்டு.  யாரையும் சார்ந்து வாழாமல், யாருக்கும் அடிபணிந்து வாழாமல், யாருடைய பாராட்டிற்கும் பலியாகாமல் தெளிந்த நீரோடையைப் போல பணியாற்றிக் கொண்டே செல்லும் குருக்கள் பலர் உண்டு.  இவர்களின் ஆழமான பற்றுறுதி இவர்களுக்கு இந்த சக்தியைத் தருகின்றது.  சிலுவை என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை இவர்கள் தெளிவாக உணர்ந்து சிலுவை வழியாக உயிர்ப்பைத் தேடுகின்றனர்.
பாராட்டு, புகழ், சமூக மதிப்பு என்ற சிக்கல்களில் அகப்பட்டுக் கொள்ளாமல் இறைமகனின் சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடக்கும் இத்தகைய குருக்கள் பலருக்குத் தெரியாமல் போகலாம்.  பணியே வாழ்வு என்ற அவர்களின் உறுதிப்பாடு குருத்துவத்தை குன்றின் மேல் இட்ட தீபமாக உயர்த்திக் கொண்டிருக்கிறது.


சாதியம் கடக்க


சாதியச் சக்திகளை வெல்ல இவர்கள் எடுக்கும் முதல் ஆயுதம் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையால் தங்களை இணைத்துக் கொள்வதுதான். சாதிய உணர்வுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று அனுபவிக்கும் உணர்வுப் பூர்வமான ஊனங்கள் ஆயிரமாயிரம்.  இந்த ஊனங்களிலிருந்து மக்களை விடுவிக்க முழுத் திருச்சபையையும் ஒன்றித்துச் செயல்பட அழைப்பது குருக்களின் கடமை.  அதில் பல சமயங்களில் தோல்வியையே தழுவுகின்றனர் குருக்கள்,  சொந்த குடும்பங்களைச் சார்ந்தவர்களே அவர்களுக்கு எதிரிகளாக மாறும் நிலையும் ஏற்படுகிறது.  எனினும் சாதியத்தால் காயப்பட்ட மக்களுக்கு புரிந்து கொள்ளும் நபர்களாக, தோழமையின் துணையாளர்களாக மாறி வரும் குருக்களைப் பார்த்து உண்மையில் கைகூப்பி நிற்கிறோம்.


பொருளாதாரப் புதைமணல்


இன்று குருத்துவ வாழ்க்கையை நன்கு புரிந்து கொண்ட இறைமக்கள் குருக்களுக்குப் பல்வேறு பொருளாதார உதவிகள் செய்து அவர்களின் அருள் வாழ்வு மங்கிவிடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.  குருக்களின் ஆடம்பர வாழ்வுக்கு எந்தவொரு கிறிஸ்தவரும் உடன்போக மாட்டார் என்பது நடை முறையில் காணும் உண்மை.  அதே சமயத்தில், குருக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னரே இறைமக்கள் தங்களது தேவைகளை நிறைவுசெய்து கொள்கிறார்கள் என்பது வரலாறு தரும் பாடம்.  ஒரு சிறு ரொட்டித் துண்டு மட்டுமே கையில் இருக்கும் ஒரு பஞ்ச சூழலில்கூட, பாதித்துண்டைக் குருக்களுக்குத் தந்துவிட்டு மீதியைச் சாப்பிடுவதுதான் கத்தோலிக்க கிறிஸ்த வர்களின் இயல்பு.
பொருளாதாரப் புதைமணலில் சிக்கிக் கொள்ளாமல் குருக்களைக் காக்க வேண்டிய பொறுப்பைத் திருச்சபை மிக நன்கு உணர்ந்து செயல்படுவதற்கு இந்தக் குருக்கள் ஆண்டு திட்டமிடும் என்பது எனது நம்பிக்கை.


அரிய வாழ்வு


குருத்துவம் என்பது அரிய வாழ்வு.  உலகில் மிகச் சிலருக்கே ஆண்டவன் தருகின்ற மகத்துவமிக்க கொடை.  இந்த அரிய வாழ்வின் அத்தனை நிமிடங்களும் ஆண்டவன் அருள்தரும் நேரங்கள்.  ஒவ்வொரு நிமிடமும் பணி வாழ்வின் நேரமே!
மிகப் பெரிய முத்தைக் கண்டு கொண்டவன் தனக்குள்ளதெல்லாம் விற்று அந்த முத்தைத் தன்னகப்படுத்திக் கொள்வது போன்று குருத்துவத்தைப் பெற்றவர்கள் அதனை அருள் வாழ்வின் ஊற்றாக, அணையாத விளக்காக, அருட் செல்வமாகக் காப்பாற்றி வளர்க்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இதைக் காப்பாற்ற இறைமகன் இயேசு தந்த மிகப் பெரிய உத்தி ‘தன்னையே வெறுமையாக்குதல்’ ஒன்றே.  எந்தவொரு சூழலிலும் குரு தன்னையே வெறுமையாக்கி இறையருள் தன்னில் தங்க இடமளிக்கின்றார்.  தான் மறைந்து தன்னை ஆட்கொண்ட இறைவனின் ஒளி தன்னில் பிரகாசிக்கச் செய்கின்றார்.
அத்தகைய அருள்நிலையில் அவர் அடையும் ஆனந்தம் அலாதியானது, அதிசயமானது.  விண்ணரசின் வெளிச்சங்களை இந்த பூமியில் கண்டு மகிழும் அதிசய வாழ்வு குருத்துவம்.  மண்ணகத்தை விண்ணகத்தோடு இணைக்கும் மாட்சிமையின் வாழ்வு குருத்துவம்.  என்றும் இந்த உலகத்தின் உண்மையான தேவைகளை எடுத்துச் சொல்லி, வழிகளை வாழ்ந்துகாட்டி, வண்ணமயமான வாழ்வுக்கு இந்த பிரபஞ்சத்தை அழைத்துச் செல்லும் விண்மீன் குருத்துவம்.
    (தொடரும்)    - அருள்பணி. க. வலன்டின் ஜோசப்

0 comments:

Post a Comment