Back to School

கத்திரி வெயில் காலம் முடிவுற்றாலும் வெயிலின் அகோரமும் வெப்பத்தின் கொடூரமும் இன்னம் குறைவின்றி நீண்டு கொண்டே செல்கிறது.  கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட சூழலில் கொளுத்தும் வெயிலில் மீண்டும் பள்ளிகள் நோக்கிப் பயணம் செல்வது பிள்ளைகள் மட்டுமல்ல;  பெற்றோர்களும் தான்.  தம் சின்னஞ் சிறுசுகள் (புத்தக) சுமை தூக்கிச் செல்வதைப் பொறுக்காத பெற்றோர், தாமே அவைகளைச் சுமந்துகொண்டு பள்ளிவாயிலில் சுமைகளை மாற்றிக் கொடுத்துவிட்டு, “டாட்டா” காட்டித் திரும்பும் காட்சிகள் மீண்டும் இப்புதிய கல்வி யாண்டில்.
“மீண்டும் பள்ளி” (back to school) என்பது நிச்சயமாக பழைய கனவுகளைச் சுமந்து செல்கிற ஒன்றாக இருக்க முடியாது.  வகுப்பு மாறி உயர்ந்து செல்கின்ற பிள்ளைகள், இப்புதிய கல்வியாண்டில் தம் செயல்பாடு மற்றும் உயர்வு பற்றிப் புதிய கனவுகளைச் சுமந்து செல்கிறார்களோ இல்லையோ அவர்களின் பெற்றோர்கள் நிச்சயமாக புதிய கனவு காண்பர்.  அதிலும் குறிப்பாக, தொடக்க நிலையிலிருந்து உயர்நிலைக்கும், ஒன்பதிலிருந்து பத்தாம் வகுப்பிற்கும், +1லிருந்து +2க்கும் சென்றுள்ள பிள்ளைகளைப் பற்றிய கவலை இப்போதே பெற்றோரைப் பற்றிக் கொள்ளும்.  அவர்கள் தம் பிள்ளைகளைப் பற்றிய கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகிறோம்.  
அனைவரும் கல்வி பெற்றிட வேண்டும் என்ற ஆசையும் திட்டமும் நம் நாட்டில் புதிதல்ல.  கல்வியில் உயர்ந்தால் மக்களின் வாழ்க்கை நிலையும் உயரும் என்பதெல்லாம் தலைமுறைதோறும் பகிரப்படுகிற சிந்தனையே.  நம் தமிழகத்தில், ஒருவேளை இச்சிந்தனை செயல்வடிவ மாகியுள்ளது என்கிறது ஒரு புள்ளிவிவர  கணக்கு 6 முதல்14 வயது வரை உள்ள குழந்தைகளில் 99 சதவிகிதம் குழந்தைகள் பள்ளிகளில் உள்ளனர்.  அதேபோல 11 முதல் 14 வயது வரை உள்ள பெண் குழந்தைகளில் 97 சதவிகிதம் பேர் பள்ளிக்குச் செல்கின்றனர் (பு. தலைமுறை). எண்ணிக்கையில் பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ள தமிழகம், கல்வித் தரத்தில் வெற்றி காணவில்லை என்பதும் உண்மையே.  தமிழகத்தில் 5ஆம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளில் கிட்டத்தட்ட 65 சதவிகிதக் குழந்தைகளால் எளிய 2ஆம் வகுப்புக் கதைகளைக்கூட வாசிக்க முடியவில்லை.  அதே வகுப்பு படிக்கும் 45 சதவிகிதக் குழந்தைகளால் கழித்தல் கணக்குகளைக்கூட செய்ய முடிய வில்லை (பு. தலைமுறை). இது பொதுவான கருத்துருவம்.
நமது கத்தோலிக்கப் பள்ளிகள் ‘மதிப்பெண்’ தரத்தையும் தாண்டி மனித வாழ்வின் கோட்பாடுகளை, மனிதநேய மதிப்பீடுகளை உள்ளடக்கிய உயர் கல்வியைத் தர வேண்டும் என்றே விரும்புகிறோம்.  கடந்த கல்வியாண்டில் (2009 ‡ 2010) பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் எத்தனையோ நமது பள்ளிகள் 100 விழுக்காடு வெற்றி கண்டன.  வாழ்த்துகிறோம்.  இருப்பினும் மாநில அளவிலான முதல் இடங்களில் நம் பள்ளிகளின் பெயர்கள் அதிகம் காணப் படவில்லையே என்ற ஏமாற்றமும் பலரிடம் மிஞ்சியுள்ளது.
தற்போதைய சமூகப் பின்னணியில் மதிப்பெண் சார்ந்த உயர்வு ஒருபுறம் கட்டாய தேவையாயுள்ளது என்றாலும், வாழ்வு சார்ந்த (life-oriented), மனித மதிப்பீடுகள் சார்ந்த (human values), ஒழுக்கவியல் சார்ந்த (morality) கல்விச் சிந்தனைகள் தரப்படுதல் மிகமிக தேவையாகிறது.  மறைக்கல்வி, நன்னெறிக் கல்வி, மாணாக்கர் இயக்கங்கள் என்றெல்லாம் நமது தனிப்பட்ட (morality)  செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறும் போது அவற்றின் மூலம் தரப்படுகிற சமூக, சமய, கலாச்சார, பண்பாடு, மதிப்பீகள் உயர்ந்தே இருக்க வேண்டும்.  இந்த முழுமனித உயர்வுநிலைக் கல்வி தருகிற அனைத்துப் பள்ளிகளும் முழு வெற்றி பெறுகின்றன என்பது மிகையல்ல.  அதற்காக தன்னலம் பாராது உழைத்து சாட்சிய (witness) வாழ்வு வாழ்கின்ற அனைவரையும் மனதார பாராட்டு கின்றோம்.  ஆனால் இன்றைய மாணாக்கரின் வாழ்வுச் சூழலைக் காணுகின்றபோது இந்தக் கல்விப் பணியின் தன்மைகள் இன்னும் வீரியமாக்கப்பட வேண்டும் என்பது உறுதியாகிறது.  இப்புதிய கல்வியாண்டில் முழுமனித உருவாக்கத்திற்கான செயல்பாடுகள் நமது பள்ளிகளில் அதிகமாக்கப்பட திட்டமிடுவோம்.  பல்வேறு இயக்கங்களின் செயல்பாடு களுக்கும் முக்கியத்துவம் தர திட்ட மிடுவோம்.  ஒருவேளை நாம் சொல்லலாம்;  ‘இந்த extra செயல்பாடுகள், இயக்கங்கள் அதிகமான நேரத்தைத் தின்றுவிடுகின்றன.  10, +2 வகுப்புகளுக்கெல்லாம் பாடம் நடத்துவது கடினமாக உள்ளதே’.  இம்மதிப்பீட்டு வாழ்வுக்கல்வி என்பது 10,12ஆம் வகுப்புகளுக்கு என்று மட்டுமல்ல சிறுவயது முதல் தரப்படவேண்டியவை இக்கல்விமுறைகள்.  கலாச்சார, மதிப்பீட்டுக் கல்வி கற்றுக் தருவதற்கு வயது வரம்பு இல்லை.  அனைவருக்கும் சிறுவயது முதலே முழுமனித வயர்ச்சிக்கான கல்வியைத் தர, நேரம் ஒதுக்கி வைப்போம்.  அப்போது மதிப்பெண் சார்ந்த கல்வியை விட, மனித வாழ்வு உயர்வைச் சார்ந்த தரமான கல்வியும் நம் மூலமாக தரப்படும்.  இதுவே நமது முழு வெற்றி.  இப்புதிய கல்வியாண்டின் செயல்பாடுகள் வெற்றி யடைய வாழ்த்துகிறேன்.
சே. சகாய ஜாண்

0 comments:

Post a Comment