குருக்கள் ஆண்டாகிய இந்த ஆண்டில் மதுரை உயர் மறைமாவட்ட குருவனவர்கள் அனைவரும் 31.01.2010 முதல் 06.02.2010 வரை கோவா திருப் பயணம் சென்று புனித சவேரியாரின் திருவுடல் வைக்கப்பட்டிருக்கும் புனித இடத்தில் திருப்பலி நிறைவேற்றி ஜெபித்தோம்.
என் இதயத்தில் எத்துனை சிந்தனைகள் புனிதரின் திருவுடல் இடத்தில் திருப்பலி நிறைவேற்றியபோது எழுந்தன. புனித சவேரியார் (1506 ‡ 1552) இவ்வுலகில் 46 ஆண்டுகள்தான் வாழ்ந்திருக்கிறார். 1537ல் குருப்பட்டம் பெற்று 1542 முதல் இந்தியாவிலிருந்து தன் தீவிர இறைப் பணியைத் தொடங்கி இருக்கிறார்.
சரியாக 10 ஆண்டுகளே இயேசுவின் மறைப்பணியைச் செய்திருக்கிறார். இக்குறுகிய ஆண்டுகளுக்குள் இந்தியா, மலாக்கா, அம்பாய்னாத்தீவு, டொனேத், மோரே தீவுகளிலும், இலங்கையிலும், ஜப்பானின் தென் பகுதியிலும் இறைத் தூதுப்பணி செய்தார். 1552ல் சீன நாட்டிற்கு இறைப்பணி செய்ய திட்டமிட்டபொழுதுதான் மிகுந்த நோய்வாய்ப்பட்டு கான்சியன் தீவில் மரணமடைந்தார். ஏறக்குறைய 50 நாடுகளில் அவர் திருப்பணி செய்திருப்ப தாகக் கருதப்படுகிறது.
“உலகின் எந்த மூலையிலெல்லாம் இயேசு கிறிஸ்து அறிவிக்கப் படவில்லையோ அங்கெல்லாம் நான் செல்வதற்குத் தயாராய் இருக்கிறேன்” எனக் கூறி தீவிர மறைப்பணி செய்தார். 1552 டிசம்பர் 2 வெள்ளிக்கிழமை மரித்தார். சீன முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார். மூன்று மாதங்களுக்குப்பின் அவரின் எலும்புகளையாவது எடுத்து கோவா விற்குக் கொண்டு செல்ல கல்லறையைத் தோண்டியபோது அவரின் சரீரம் அழியாமல் இருப்பது கண்டு வியப்படைந்தனர். 450 ஆண்டுகளாய் அச்சரீரம் இன்றும் மக்களின் வணக்கத்திற்கு வைக்கப் பட்டிருக்கிறது எத்துணை அதிசயம்!
தன் வாழ்வில் உத்தமமாய் பணி செய்த இறை ஊழியருக்கு ஆண்டவர் இயேசு கொடுக்கும் மிகப் பெரிய பரிசு அவர்களின் உடல் அழியாமல் காப்பதே.
நான்கு நற்செய்தியாளர்கள் மத்தேயு, மாற்கு, லூக்காஸ், யோவான் ஆகியவர் களில் புனித யோவானுக்குத்தான் “கழுகு” ஓர் அடையாளச் சின்னமாய் தரப் பட்டிருக்கிறது.
கழுகைப்போல் அவரின் இறையியல் உயர்ந்து காணப்படுகிறது. அன்பின் வெளிப்பாடுகளும், உயரிய இறை அறிவுச் சிந்தனையும் நம்மை வியக்க வைக்கின்றன. இதற்குக் காரணமே புனித யோவான் இறுதி இராவுணவின் போது மட்டும் இயேசுவின் நெஞ்சில் சாய்ந்திருக்க வில்லை. மாறாக வாழ்வு முழுவதிலுமே இயேசுவின் இதயத்துடன் தலைசாய்ந்து இருந்ததால் இதயத்தின் இரகசியங்கள் அவருக்கு மட்டும் அதிகமாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன.
தன் நற்செய்திப் பணியை நிறை வேற்றிய குறுகிய காலத்திலேயே பத்மோஸ் தீவுக்கு “தொமிசியன்” என்ற மன்னனால் நாடு கடத்தப்பட்டார். பத்மோஸ் தீவில் இறைபணியாற்ற மக்கள் இல்லையே என வருந்தியபோது ஆண்டவர் இயேசுவின் தரிசனம் அவருக்கு அதிகமாய்த் தோன்றி திடப்படுத்தியது.
(பரம தந்தை அவரை வெளிப்பாடு களால் நிரப்ப ஆரம்பித்தார். “இந்நாள்வரை உலகம் கண்டிராத காட்சிகளையும் மோட்சத்தின் மகிமைப் பிரகாசத்தையும் உனக்குக் காண்பிப்போம். நீ அவைகளை ஒன்றும் விடாமல் எழுதுவாய்.) அதற்காகவே பத்மோஸ் தீவிற்கு உன்னை அழைத்து வந்தோம்” என்றார்.
புனித யோவான் இயல்பிலேயே மிகவும் பரிசுத்தமானவர். இறை அன்பு நிறைந்தவர். தாழ்ச்சியான உள்ளம் நிறைந்தவர். இயேசுவின் சிலுவையடி யிலும் நின்று தம் இறையன்பை நிரூபித்தார். எனவேதான் நற்செய்தியாளர் நால்வரில் புனித யோவான் நற்செய்தியில் மட்டும் இறையியல் நிறைவாய்க் காணப்படுகிறது. அவரின் நற்செய்தி நம்மை விண்ணகத்திற்கு இட்டுச் செல்கிறது என்பது வெளிப்படை.
புனித சவேரியார் “புனிதமும் இறையன்பும் தீவிர வேட்கையும் உடைய இறைப்பணியாளர்கள் மட்டும் இருந்து விட்டால் உலகம் முழுவதிலுமே இயேசுவின் அன்பைக் கொண்டு செல்வது மிக எளிது” என்கிறார்.
இன்று இறைப்பணியாளர்களிடம் இவர்களின் அர்ப்பண உணர்வும், இறை மகிமை தாகமும், விண்ணக வாழ்வின் பேரின்ப உணர்வும் இருந்துவிட்டால் நம் இறைப்பணிக்கும் இறைவன் இயேசு அழியாத முத்திரையைப் பதிப்பார் என்பது உண்மை. சிந்திப்போமா! (மலரும்)
Fr. ச. ஜெகநாதன், அருப்புக்கோட்டை
0 comments:
Post a Comment