நீ மாறினால்...

நண்பர் ஒருவர் தான் வாங்கி யிருந்த புதிய காரினை அடுத்த நாள் எடுக்க வீட்டிலிருந்து வெளியே வந்தார். அப்போது அவரது ஆறு வயது மகன் கம்பியை வைத்து காரினைக் கீறிக் கொண்டிருந்தான். இதைக் கண்டவுடன் அதிர்ச்சியுற்ற தந்தை எதுவும் யோசிக்காமல் அவனைக் கீழே தள்ளி அந்தக் கம்பியினைக் கொண்டு கை வீங்கும் அளவிற்கு அடித்து விட்டார். பின்னர், அமைதி யடைந்து அவனை மருத்துவ மனையில் அனுமதித்தார். மருத்துவர்கள் அவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததைக் கண்டனர். உடைந்த எலும்பு களுக்கு அறுவை சிகிச்சை செய்து வீடு திரும்பினான் அவன்.
அந்தச் சிறுவன் வீட்டிற்கு வந்தவுடன் அவன் தந்தையை நோக்கி தான் செய்த தவறினை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டபின் “அப்பா, எப்போது என்னுடைய கை சரியாகி விரல்கள் சக நிலைக்கு வரும்?” என்று கேட்டான். இதைக் கேட்ட தந்தை மனம் நொந்து வீட்டிற்குள் சென்று தன் தவறுக்காக அழுது கொண்டிருந்தார்.
எனது குட்டீஸுக்கும், அவர் களுடைய பெற்றோருக்கும் இந்நிகழ்ச்சியிலிருந்து ஓர் அறிவுரை.
இப்படி தீர யோசிக்காமல், மூர்க்கத்தனமாய் நடந்து கொண்ட அந்தத் தந்தையின் அனுபவம் இருக்கிறதா? சிறிய செயல்களுக் கெல்லாம் கோபப்படுவது, சண்டைபோடுவது, என்ன செய்கின்றோம், அதனால் வரவிருக்கின்ற விளைவு என்ன என்று யோசிப்பது இல்லையே. நம்முடைய சொல்லோ, செயலோ எதைச் செய்தாலும் நிதானம் தேவை. ஓரளவிற்கு விளைவுகளை யோசிக்கின்ற நிலை ஏற்பட வேண்டும். நமது அவசரத்தினால் நமது வீட்டில், நமது நிர்வாகத்தில், அலுவலகத்தில் இவ்வாறு நடந்து கொள்வதில், பிறருக்கு எவ்வாறு மன உளைச்சல் பாதிப்பு விளைவித்திருப்போம்? நடந்தது நமக்குத் தெரிகிறது. போட்ட பந்து திரும்பி வருவது போல் உடனுக்குடன் பதில் நிலை தெரிவிக்காமல் சிந்தித்துச் செயல்படுகின்ற செயல் வீரர்களாக வாழ முற்படுவோம்.
டியர் குட்டீஸ்
இச்சிறுவனைப் போல நாமும் பல நேரங்களில் பொருட்களின், செயல்களின், நிகழ்வுகளின் மதிப்பு தெரியாமல் அவற்றிற்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறோம். சற்றும் யோசிக்காமல் நாம் நமது விருப்பபடி செய்யும் போது இப்படி அடுத்தவர் கோபத்திற்கு ஆளாகிறோம். கேட்டால், சும்மா விளையாட்டுக்குச் செய்தேன், தெரியாமல் செய்தேன் . . . அவசரப்பட்டு விட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. இப்படி சொல்வதால் பாதிக்கப்பட்டவர் நிலை மாறிவிடுமா? இதனால் பலருக்கு நம்மால் சங்கடம் தானே. இளம் வயதிலேயே நாம் அடங்காப் பிள்ளைகள், அடங்காத ராட்சசன்கள், தவறான பிள்ளைகள், மோசமானவர்கள் என்று அவப் பெயர் பெற்று வாழும் நிலை ஏற்படும். செய்வதைச் சிந்தித்து, வேண்டாததை ஒதுக்கி வாழ முற்படுவோம். நன்று மீண்டும் சந்திப்போம்.

விவிலியப்பகுதி :
நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல ஆகாவிட்டால் விண்ணரசில் புக மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.  - மத்தேயு 18:3
பணி. ராக்ஸி, K.G. கண்டிகை

0 comments:

Post a Comment