முதிர் வயதில் அவரின் உடலில் பலவித நோய்கள் வந்தன. மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர் “வயிற்றின் உட்பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; ஆனால் சிகிச்சையின் வலியை இவரால் தாங்க முடியாது” என்றார். ஏனெனில் அப்போது மயக்க மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை.
ஜோசப் துறவி குறிப்பிட்டார், “நான் படுத்திருக்கும் படுக்கைக்குமுன் சுவரில் ஒரு பாடுபட்ட சுரூபத்தை மாட்டி வையுங்கள். நான் அதை தியானிக்க ஆரம்பித்து விடுவேன். நீங்கள் என் உடலில் எவ்வித அறுவை சிகிச்சையும் செய்யலாம்” என்றார்.
அப்படியே நடந்தது. அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அவரின் உடலில் எவ்வித வலியின் அசைவோ, வாயிலிருந்து வேதனையின் சப்தமோ எதுவும் வெளிப்பட்டதில்லை. உடல் வேதனையை அனுபவித்தாலும் உள்ளம் மட்டும் இயேசுவின் மகிழ்வால் நிரம்பி இருந்தது.
புனித பவுல் இவ்வாறு எழுதுகிறார், “எல்லா வகையிலும் வேதனையுறுகிறோம். ஆனால் ஒடுங்கிப் போவதில்லை. மனக்கலக்கம் அடைகிறோம். ஆனால் மனம் உடைவ தில்லை. துன்புறுத்தப்படுகிறோம். ஆயினும் இறைவனால் கைவிடப்படுவதில்லை” என எழுதுகிறார் (2 கொரி 4:2).
மாற்கு 9:2-8 வரை வாசிக்கும் பொழுது இயேசு தபோர் மலைக்கு தன் பிரிய மூன்று அப்போஸ்தலர்களுடன் ஜெபிக்கச் செல்கிறார். ஜெபித்துக் கொண்டிருக்கும் பொழுது மோட்சத்தின் மகிமை அவர்கள்மேல் இறங்குகிறது. தேவ மகிமை அவர்கள் மேல் பிரகாசிக்கிறது. மோட்சத்தின் பரவசம் அவர்களின் உள்ளங்களை ஊடுருவிச் செல்கிறது. ஓர் புதிய அனுபவத்தை அப்போஸ்தலர்கள் உணருகிறார்கள்.
மோட்சத்தின் மகிமையில் அவர்கள் பரவசமடைந்திருக்கும் பொழுது மோட்சவாசிகள் மோயீசனும், எலியாவும் இயேசுவோடு பேசுகிறார்கள். வானத்திலிருந்து பரம தந்தை பேசும் ஒலியை அவர்கள் கேட்கிறார்கள். “இவரே என் அன்பார்ந்த மகன் . இவருக்குச் செவிசாயுங்கள்” என்ற வார்த்தையை அவர்கள் கேட்டு பரவசமடைகிறார்கள். இயேசு தபோர் மலையை விட்டு இறங்கும் பொழுது அவர் படப்போகும் சிலுவையின் பாடுகளைப் பற்றியும், அவற்றின் வேதனைகளைக் குறித்தும் பேசுகிறார். அவருடைய கொடிய சிலுவை மரணம் மூன்றுநாள் அடக்கம் பற்றியும் உயிர்ப்பு பற்றியும் பேசுகிறார் (மாற்கு 9:30-32).
எனவே இயேசுவின் வாழ்வு சிலுவைப்பாடுகளின் வேதனையை நினைத்து கலங்கினால் மோட்சத்தின் மகிமை அவரின் உள்ளத்தில் அளவிட முடியா மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இம்மகிழ்ச்சிதான் உடலில் அனுபவிக்கும் துன்பங்களைத் தாங்கவும், பொறுமையில் இருக்கவும், மகிழ்வுடன் இறைவனில் வாழவும் செய்கிறது.
புனித குழந்தை தெரசாளின் வாழ்வு துறவு மடத்தில் பத்து ஆண்டுகள்தான். இந்தப் பத்து ஆண்டுகளும் அவர்கள் அனுபவித்த உடல் நோயின் கொடுமை கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளுக்கு ஒத்ததாகவே இருந்தது. ஆனால் உடலின் இக்கொடிய வேதனையை அவர்கள் உள்ளத்தில் கொண்டிருந்த இறைமகிழ்வு மறக்கச் செய்தது. எனவே உள்ளத்தில் எப்பொழுதும் மோட்சத்தின் பரவசமும், இறைமகிழ்வும் துன்பத்தின் மத்தியில் நிறைந்து காணப்பட்டது. “ஓர் ஆன்மாவின் வரலாறு” என்ற அவர்களின் ஆன்மீக சுயசரிதை எடுத்துக்காட்டுகிறது.
ஓர் இறைப்பணியாளரின் வாழ்வு எப்பொழுதும் ரோஜாவைப் போல் இருந்துவிடுவதில்லை. மாறாக முட்களும் மலரும் நிறைந்த வாழ்வாகத்தான் இருக்கிறது. ஒரு குருவானவரின் வாழ்வு வெளிப்படையான இறைப் பணியால் பல வேதனைகளைச் சந்தித்தாலும் ஜெபத்தில், தியானத்தில் இறை மகிழ்வைக் காணவில்லை எனில் அது உண்மைப் பொருளை இழந்து விடுகிறது.
என்னைக் குருமடத்திற்கு அனுப்பி, விடுமுறை நாட்களில் முன் மாதிரிகையான தந்தையாய் இருந்து அன்பில் என்னை உருவாக்கியவர் எங்களின் பங்குத் தந்தையாய் இருந்த அருட்தந்தை V. மிக்கேல் அவர்கள். அவரின் முதுமையின் நாட்கள் மிக மிக வேதனையில் கடந்து சென்றது. சர்க்கரை நோயின் தாக்கம் அவரை அதிகமாய் சிலுவைப் பாடுகளை அனுபவிக்க வைத்தது. சர்க்கரை நோயின் கொடுமை அவரின் கால்களைத் தாக்கியது. இரண்டு கால்களிலும் புண் வந்து கடைசியில் இரண்டு கால்களையும் வெட்டும்படியான வேதனை நேர்ந்தது.
இரண்டு கால்களையும் இழந்து படுக்கையில் இருந்த நேரத்தில் கண்கள் கலங்கிய நிலையில் நான் அருகில் நின்றுகொண்டிருந்தேன். மனம் கலங்கிய நிலையில் இவ்வாறு வேதனையோடு கூறினார், “என் கால்களால் ஓடிச் சென்று இந்நாள் வரை இறைவனுக்கு உத்தமமாய் மகிழ்வாய் ஊழியம் செய்தேன். இனிமேல் என் வேதனைச் சிலுவைப் பாடுகளுடன இணைத்து ஆத்துமப் பணியை மகிழ்வுடன் செய்யப் போகிறேன்” என்றார்.
ஒரு குருவின் வாழ்வும் சிலுவைப் பாடுகள் நிறைந்ததுதான்; ஆனால் ஜெபத்தில் இறைமகிழ்வைக் காணும் இதயமே இந்த வேதனையிலும் மோட்சத்தின் மகிழ்வை அனுபவிக்கச் செய்கிறது. ஆழ்ந்த ஜெபமே இந்த இறைமகிழ்வைத் தரும். சிந்திப்போமா?
Fr. ச. ஜெகநாதன்,
அருப்புக்கோட்டை
0 comments:
Post a Comment