இயேசுவின் குருத்துவம்
யூத சமயத்தில் குருத்துவம் மக்களிட மிருந்து அன்னியப்பட்ட காலத்தில் இயேசு தன்னுடைய பணியைத் துவங்குகிறார். வெறும் சடங்குகள், ஆலய நிர்வாகப் பணிகள் போன்றவற்றைச் செய்து கொண்டு, மக்களை வெறும் நுகர்வோர் என்ற நிலையில் மட்டுமே பார்த்தனர் யூத சமயக் குருக்கள். ஆன்மீக தேவைக்காக ஆலயம் நோக்கி வருகின்ற மக்களை வெறும் ஆடுமாடுகள் போல் நடத்தி, அவர்களின் ஆன்மீக உணர்வுகளைச் சுரண்டி, சம்பாதித்து வாழ்க்கை நடத்திய யூத சமய குருக்கள் இயேசுவுக்குக் கோபத்தை உண்டாக்குகின்றனர். ‘குரு’ என்பவர் மனிதர்களை இறைசக்தியோடு இணைக்கும் இனியவர். இந்தப் பண்பு சற்றும் இல்லாத ‘யூத குருத்துவத் தையும்’ யூத சமயத்தையும் இயேசு வெறுத்தார்.
அதே சமயம் அவர் மனம் பாலைவனத்தில் சுற்றித்திரியும் ஒரு பரதேசி யின் பின் சென்றது. இறைவனின் குரலாக அந்தத் திருமுழுக்கு யோவான் அவர் கண்ணில் தென்பட்டார். அவரிடம் சென்று அவருடையக் குருத்துவப் பணியாகிய ‘திருமுழுக்கில்’ கலந்து கொண்டு அவர் பாணியில் தன்னுடைய வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளத் துடித்தார் இயேசு. திருமுழுக்கு யோவானை இறைவாக்கினராக மட்டுமல்ல தன்னுடைய குருவாகவும் ஏற்றுக் கொண்டார் இயேசு. ஆனால், திருமுழுக்கு யோவான் இயேசுவை அவ்வாறு பார்க்கவில்லை. தன்னைவிட மேலானவராக தன்னிகரில்லாக் குருவாகவே அவரைப் பார்த்தார். இறைவனையும் மனிதனையும் இணைக்கும் பாலம்தான் குருத்துவத்தின் இலக்கணம். இந்தப் பணியை இயேசுதான் முழுமையாகச் செய்யவல்லவர் என்பதை இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வு காட்டுகிறது. வானம் திறக்கிறது. இறையாவி இயேசுவின் மீது புறா வடிவில் இறங்கி வருகிறார். ‘இவரே என் அன்பார்ந்த மகன். இவருக்குச் செவி சாயுங்கள்’ என்ற குரலொலி கேட்கிறது. இந்த நிகழ்வு இறைவனையும் மனிதர்களையும் இணைக்கும் நிகழ்வு. இது இயேசுவுக்கு ஏற்பட்ட தனி அனுபவம் அல்ல; இயேசு வுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பொது அனுபவம். மனிதர்கள் அனைவரையும் இறைவனோடு இணைக்கப் புறப்படும் இயேசுவின் குருத்துவத் திருப்பொழிவு அனுபவம். இயேசுவின் குருத்துவம் என்றால் என்ன? என்பதை இலக்கியமாக வடித்துத்தந்த இனிய அனுபவம்.
இந்த அனுபவத்தைப் பெற்ற இயேசு உடனடியாக மக்களிடம் செல்ல தன்னைத் தயாரித்துக் கொள்கிறார். நாற்பது நாட்கள் அவர் பாலைவனத்திற்குச் சென்றது மக்கள் பணிக்கான தெளிவு பெறத்தான். மக்கள் பணியில் ஏற்படும் குழப்பங்களே சாத்தானின் உருவில் வந்து சவால் விடுகின்றன.
பணிவாழ்வின் பயணங்கள்
இதுதான் குருத்துவப் பணியயன்று இலக்கணம் அமைத்துக்கொண்டு இயேசு மக்களிடம் செல்லவில்லை. இப்படித்தான் என் வாழ்க்கை முறை அமையும் என்ற தீர்மானத்தோடு இயேசுவின் பணி நடைபெறவில்லை. மக்களின் உள்ளார்ந்த தேவைகளில் தான் தனது பணி மேடையை அவர் அமைத்துக் கொள்கிறார். அவரின் கைகளால் குருடர் பார்வை பெற்றனர். அது துவக்கமே! முடிவல்ல; அவரது சொல் திறத்தால் முடவர்கள் எழுந்து நடந்தனர். அது ஆரம்பமே! முடிவல்ல! இறையாட்சி என்ற வல்லமைமிக்க இறைக்கரத்தில் மனிதர்களை ஒப்படைப்பதே அவரது பணியின் கருவாக அமைந்தது. அவர் தன்னைக் குரு என்று சொல்லவில்லை. காரணம் அந்தச் சொல்லாடல் அன்று அர்த்தமற்றதாய் உலவிக் கொண்டிருந்தது. திருமுழுக்கு யோவானின் பாணியில் தன்னை இறைவாக்கினர் என்றே அவர் அறிமுகப்படுத்தினார். ஆனால், அவரது வாழ்க்கை முறை அவரை உண்மையான குருவாக இனம் காட்டியது. வாழ்க்கையில் நலிந்த மக்களை நாடிச் சென்று அவர்களோடு வாழ்க்கையைக் கொண்டாடினார். அவர் களுக்கு இறைவனின் அருகாமையை உணரச் செய்தார். எளிய மனத்தோரைக் கண்டு அவர்கள் வாழ்வில் இறைவன் ஆற்றும் அரும்பெரும் செயல்களை உணர வைத்தார். எங்கோ இறைவன் இருக்கின்றார் என்றுஎண்ணிக் கொண்டிருந்தவர்களிடம் சென்று ‘இதோ இறை வல்லமை’ என்று தொடர்புபடுத்தியது அவரது பணிவாழ்வு. யாரையோ எதிர்பார்த்து, ஏமாந்து, கனவுலகில் வாழ்ந்தவர்களிடம் சென்று ‘இறையாட்சி உங்கள் நடுவில்தான் இருக்கிறது’ என்று ஆணித்தரமாக எண்பித்தது இயேசுவின் குருத்துவப்பணி.
மரணம் - உயிர்ப்பு - குருத்துவச்செயல்
இறையாட்சியான வல்லமையை எண்பிக்க அவர் செய்த செயல்களுக் கெல்லாம் சிகரமாக அமைந்தது அவரின் மரணம். இறைவல்லமைக்கு முன்பு மனிதர்களின் அத்தனை வல்லமைகளும் ஒன்றுமில்லாதவை என்பதை எண்பித்தது அவரது மரணம். இறை வல்லமையோடு மனிதர்களை இணைக்க அவர் தேர்ந்தெடுத்த குருத்துவச்செயல் அவரது மரணம் தன்னைச் சாவிலிருந்து இறைவன் எழுப்ப வல்லவர் என்பதை எண்பிக்க மட்டுமல்ல; இந்த மனித சமுதாயத்தையே மரண பயத்திலிருந்து எழுப்ப வல்லவர் இறைவன் என்பதை எண்பிக்கவே இயேசு சாகத் துணிகிறார். முடிவில்லா வாழ்வுக்கு அத்தனை பேரும் தகுதியுடையவர்கள் என்பதைக் காட்டவே இந்தப் பலியை முன்னெடுக்கிறார். இயேசு, பாவமும், சாவும் இறைவுறவின் முன் ஒன்றுமில்லாதவை என்பதையே அவரின் மரணமும் உயிர்ப்பும் எடுத்துக் காட்டுகின்றன.
1 comments:
Really very important views about priesthood.
Post a Comment