நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்” (யோவான் 15:16) என்பது இறை அழைப்புத்தான்.

இறை அழைப்பைப் பெற்றுள்ளவர்களின் வாழ்க்கை (மாற் 3:13, 14) யேசு தம்மோடு இருக்கவும், நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும், பேய்களை ஓட்டவும் அதிகாரம் கொண்டிருக்கவும்  நியமித்தார்.
இறை அழைத்தல் பெற்றவர்களின் வாழ்க்கை முதலாவதாக, இறைவனோடு இருந்தாக வேண்டும் என்பது இறைவன் விருப்பம் . நானே திராட்சைச் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும், நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்” (யோவா 15:5) என்கிறார் இயேசு.

இரண்டாவது, இறை அன்பிலும் பிறர் அன்பிலும் இறை அழைத்தல் பெற்றவர்கள் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்துகொள்வர்” (யோவா 13:35) என்றார். “‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல, நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (யோவா 13:34, 35).

மூன்றாவதாக, இறை அழைத்தலைப் பெற்றவர்களிடம் இருக்க வேண்டிய பண்பு இறை வேண்டலும் நோன்பும். இதைத் தான் இயேசு மத் 17:21-இல் குறிப்பிடுகிறார். இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது.

இறை அழைத்தல் பெற்றவர்களின் வாழ்க்கையில் இறைவனும் இணைந்து இருக்கிறார். இதனால் இவர்கள் வாழ்க்கையில் இறைப்பணியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் தன்னலம் இருக்கக்கூடாது என்பதை இயேசு தன் வாழ்வில் வெளிப்படுத்துகிறார். நான் தந்தையின் விருப்பத்தையே நிறைவேற்ற வந்தேன்என்று குறிப்பிடுகிறார்.

இறை அழைத்தலைப் பெற்றவர்களின் வாழ்வில் முதல் குறிக்கோளாக இருப்பது நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்பது உலகெங்கும் போய் என் நற்செய்தியை அறிவியுங்கள்என்று இயேசு தன் திருத்தூதர்களிடம் கூறினார். புனித பவுல் அடிகளாரும் இதைத்தான் தன் வாழ்வில் நற்செய்தி அறிவிப்பதே எனது பணிஎன்று வாழ்ந்தார்.

இறை அழைத்தல் வாழ்வில் போதிக்கும் பணியும், அதே நேரத்தில் இறைவாக்கு உரைக்கும் பணியும் இருக்கின்றன. பழைய ஏற்பாட்டில் இறைவன், இறைவாக்கினர் வாயிலாக பேசியுள்ளார் என்று பார்க்கின்றோம். அவர்கள் இறைவனிடம் பெற்ற வார்த்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.

இறை அழைத்தல் பெற்றவர்கள் வாழ்வில் இந்த இரண்டு பணிகள்தானா? என்றால் இல்லை. மூன்றாவது பணியாக ஒன்று இருக்கின்றது. அதுதான் குணமளிக்கும் பணி. இதுவும் இறை அழைத்தலில் சிறப்புப் பணியாகும்.
இறை அழைத்தல் பெறறவர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கு நல்ல ஆயனாக இருக்க வேண்டும். ஆடுகளை வழிநடத்துதல் மட்டுமல்ல, அந்த ஆடுகள் வழிதவறும்போது, தேடுகிற ஆயனாகவும்,அதே நேரத்தில் துன்பப்படும்போது குணமளிக்கும் ஆயனாகவும் இருக்க வேண்டும். இதைத்தான் இயேசு தன் வாழ்வில் நல்ல சமாரியர்என்னும் உவமையால் குறிப்பிடுகிறார். அடிபட்ட மனிதனுக்கு உதவும்போது நல்ல மனிதனாக, நல்ல ஆயனாக இருக்கிறாய் என்று குறிப்பிட்ட இயேசு, “நீரும் போய் அவ்வாறே செய்யும்என்று சொல்லும்போது, இறை அழைத்தல் பெற்றவர்கள் குண மளிக்கும் அழைப்பைப் பெற்று இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

குணமளிக்கும் பணி : இயேசு தம் சீடர்களை அனுப்பும்போது, அவர் சொன்ன வார்த்தைகள் (மாற் 16:17, 18) : “அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளைப் பேசுவர், பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர், கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர் மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்.

இறை அழைப்பில் குணமளிக்கும் அழைப்பும் உள்ளது. இயேசுவின் வாழ்வில் பார்க்கிறோம். ஓய்வு நாளில் ஜெபக்கூடத்தில் போதிக்கிறார். அங்கிருந்த சூம்பிய கையனைக் குணப்படுத்துகிறார். அதேபோல், ஓய்வு நாளில் ஜெபக்கூடத்தில் போதித்தார். 18 ஆண்டுகளாய் சாத்தானால் கட்டப்பட்ட கூனி என்ற பெண்ணைக் குணப்படுத்துகிறார்.

இவ்வாறு இயேசு போதனையோடு சாதனையாக குணப்படுத்தும் பணியைச் செய்வதைப் பார்க்கிறோம். காரணம், குணப்படுத்தும் பணியை இறை அழைத்தல் பெற்றவர்களும் செய்ய வேண்டும் என்பதுதான்.
குணப்படுத்தலில் பலவகை இருப்பதைப் பார்க்கிறோம்.
  1. தொட்டுக் குணப்படுத்தினார்:  அவரிடம் அநேக நோயாளிகள் வந்தார்கள்; குணமாக்கினார் (மத் 4:23; 9:35). தொழுநோயாளியைத் தொட்டார், அவரும் குணமானார் (மத் 8:3). இரத்தப்போக்கு நோய் உடைய பெண் ஆண்டவரின் ஆடையைத் தொட்டார், குணம் பெற்றார் (மத் 9:21, 22). சிறுமியைத் தொட்டு உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திருஎன்றார், எழுந்தார் (மாற் 6:41).
  2.  வார்த்தையால் குணப்படுத்தினார்:  நூற்றுவர் தலைவரை நோக்கி நீர் போகலாம், நீர் நம்பிய வண்ணமே நிகழும்என்றும் (மத் 8:13), “லாசரே, வெளியே வாஎன்றும் (யோவா 11:43) வார்த்தையால் குணமாக்கினார்.
  3. போதனையால் குணப்படுத்தினார்: சமாரியப் பெண் தன் தவறான பாதையிலிருந்து திருந்தி சாட்சி ஆகிறார்.

  
நிக்கொதேமு  இயேசுவைச் சந்தித்ததால் மீண்டும் பிறக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு புதிய வாழ்வை மேற்கொள்கிறார் நிக்கொதேமு (யோவா 3:4-8)

இயேசு குணமளிக்கும் ஆண்டவர் (விப 15:26). குணமளிக்கும் பணியை இறை அழைத்தல் பெற்றவர்களும் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

திருத்தூதர் பணியில் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலர் பேதுரு பேசுகின்றபொழுது அநேகர் இறைவனிடம் வந்தார்கள் என்று பார்க்கிறோம். அதே பேதுரு சப்பாணி மனிதனுக்குக் குணம் கொடுக்க அவரும் எழுந்து நடந்து வருவதைப் பார்க்கிறோம். அதே பேதுரு இறந்து போன சிறுமியை உயிர் பெற்று எழச்செய்வதைப் பார்க்கிறோம்.

இறை அழைத்தல் பெற்றவர்களைத் தூய ஆவியார் விசுவாசமூட்டும் வார்த்தையால் நிரப்புகிறார். அது குணப் படுத்தும் ஆற்றலைக் கொடுக்கிறது.  அவருடைய வார்த்தையில் அதிகாரம் வெளிப்படுகிறது. குணப்படுத்தும் பணியைச் செய்கின்ற ஊழியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
  1. அவர்கள் கிறிஸ்துவின் தூதர்கள் (2 கொரி 5:20); பெரிய காரியங்களைச் செய்ய தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் (மாற் 16:18).
  2. அவர்கள் ஆண்டவருடைய ஆவியின் அபிஷேகத்தால் நிறைந்தவர்கள் (2 கொரி 3:17, 18).
  3. இறை ஆற்றல் தம்மிடம் உண்டு என விசுவசிப்பவர்கள் எனக்கு வலுவூட்டு கிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு  (பிலி 4:13).

இவ்வாறு இறை அழைத்தல் பெற்றவர்கள் குணமளிக்கும் அழைப்பையும் பெற்று இருக்கிறோம் என்பதை உணர்ந்து இறைவனோடு பணியாற்றுவோம்.

Fr. தனிஸ்லாஸ் சந்திரன்,
இயக்குநர், அருங்கொடை இல்லம்,
திருச்சி

0 comments:

Post a Comment