விசுவாச விதைகள்


பாவத்திற்கான காரணிகளாக உலகம், பசாசு, சரீரம் என்று நம் அடிப்படை மறைக்கல்வி போதிக்கிறது. இவை மூன்றில் ஏற்படும் பாவங்கள் நம்மை இறைவனிடமிருந்து பிரிக்கின்றன;  பல சமயங்களில் முற்றிலுமாகப் பிரிக்கின்றன. உலகத்தின் மாயக் கவர்ச்சி பலரின் பாவ எண்ணங்களுக்கு வித்திடுகிறது. உள்ளிருந்தே கொல்லும் வியாதி போல் பசாசு நம்மை ஆண்டவரிடம் அண்டவிடாமல் தொடர் தாக்குதலை நடத்துகிறது. உடல் இச்சை நமது ஜென்ம பாவத்தின் தொடர்ச்சியாக நாளும் இம்சிப்பதை உணரலாம். இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர் புடையவையாதலால், கடைசி வரை பலரால் தம் தவறைத் திருத்திக் கொள்ள முடிவதில்லை. மீள மீளப் பாவச் சேற்றில் வீழ்ந்து ‘இதுதான் வாழ்க்கை’ என்றாக்கிக்கொள்கிறோம். தன்னை வென்றவனே உலகை வெல்கிறான்.

இன்று உலகம் பரந்து விரிந்து காணக்கிடக்கிறது; ஒரு கிராமமாய்ச் சுருங்கிவிட்டது. சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் அன்றாட வாழ்க்கையின் தேவையாகிவிட்டன. இந்த உலகம் பசாசின் கையில் உள்ளதால் அழிந்து போகும் மாயக் கவர்ச்சிகள் சரீரத்திற்கு விருந்தாக வைக்கப்படுகின்றன. உலகை நேசிப்பவன் உலகைச் சார்ந்தவன். கடவுளை நேசிப்பவன் கடவுளைச் சார்ந்தவன். இரண்டுக்கும் ஒருவர் ஊழியம் செய்வது சமரசத்தில் சன்மார்க்கம் தேடுவது ஆகும். மனசாட்சியற்ற மகிழ்ச்சி மருந்துக்கும் உதவாது. பசாசு ஒளியின் தூதனாய் நடிப்பது போல் நாமும் இருந்தால் ‘மீட்பு’ எட்டாக்கனியாகி விடும்.

உலகம், பசாசு, சரீரம் இவற்றால் உலகில் பரவி வரும் நோய்கள் எண்ணிலடங்கா. போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பாலியல் கலவையில் தன்னை இழத்தல், குறுகிய சார்பு எண்ணங்களால் அழுத்தம் பெற்று வெறுப்பு கசப்போடு பிறர் அன்புக்கு எதிராய் வாழ்தல் மன நிறைவான வாழ்வுக்கு வழியாகுமா? பொறாமை மிகக் கொண்டு அடுத்தவரை அழித்து வாழ நினைக்கிறோம். குடும்பத்தில் சமாதானம் இல்லை. குடும்பங்களுக்குள் ஒற்றுமை இல்லை. சுயநலம் பலரையும் ஆட்டிப் படைக்கிறது. அவரவர் தம் பலத்தை, சாதுர்யத்தை, சமத்தை வெளிக்காட்ட முனைகிறார்கள். இதனால் மனித உறவுகள் கொச்சைப்படுத்தப் படுகின்றன. உறவுகளின் விரிசலினால் மனிதநேயம் சிதைக்கப்படுகிறது. கடவுள் மறைந்து உலகம் முன்வைக்கப் படுகிறது.

உடல் சார்ந்த நோய்களைத் தவிர்த்து பல்வேறு சமூக நோய்களான பொறாமை, வெறுப்பு, கசப்பு, பகை, விரக்தி, ஏமாற்றம், போட்டி, கட்சி மனப்பான்மை போன்றவை மனிதனைக் கடவுளுக்கு எதிராகச் செயல்படவைக்கின்றன. உலகுக்கும் கடவுளுக்கும் ஊழியம் செய்வதாகச் சொல்லிக் குழப்பத்தில் இன்றைய மனிதன் வாழ்கிறான். இதன் விளைவாய் உண்மையான இறைப்பற்றுதல் இல்லை, ஜெபம் இல்லை, தபம் இல்லை. பணம் இருந்தால் போதும் எதையும் சாதிக்கலாம் என்ற மிதப்பில் வாழ்கிறான். கூடி ஜெபிக்கும் குடும்பம் கோடி நன்மை பெறும் என்ற காலமெல்லாம் மலையேறி, அவசர கதியில் அல்லோலப்படுகின்றன குடும்பங்கள்.

பல மனிதரில் உலகை வெல்லும் வெறி இருக்கிறதே ஒழிய கடவுளைத் தேடும் ஆர்வம் இல்லை. பெற்றவர்களும் மற்றவர்களும் ‘ரோல் மாடல்களாக’ இல்லாததால் ஒரு வறட்சி, ஒரு தேக்கம் சமூகத்தில் காணப்படுகிறது. இதனால் தேவ அழைத்தல் குடும்பங்களில் ஊக்குவிக்கப்படுவதில்லை. அப்படி ஒரு எண்ணம் எழுந்தால், ‘அழைப்பு பிழைப்பிற்கே’ என்ற நிலைதான் உள்ளது. இல்லறம் நல்லறமாக, ஒவ்வொரு குடும்பமும் குட்டித் திருச்சபையாக எழும்பி, ‘விசுவாச விதைகளை’ வேரூன்றச் செய்து களை விதைப்பவனை அப்புறப்படுத்த ஜெபத்தை ஆயுதமாக எடுத்தால், ‘விசுவாசம்’ தழைக்கும்; குடும்பங்களில் தேவ அழைத்தலுக்கான வாய்ப்புப் பெருகும். எச்சூழலிலும் இறை இயேசுவைப் பற்றி அன்னையின் துணையோடு வாழ முயற்சிப்போம். உண்மையான அறுவடை காண்போம். ‘இறைவார்த்தையை’ வெளிச்சமாகக்கொள்வோம். தேவ நற்கருணையில் ஆண்டவரைக் காண்போம்.

0 comments:

Post a Comment