உலகமே தன் காலடியில் என்பது போல, எல்லோரும் தனக்குக் கீழ் என்பது போல, கணினியில் மேதையான தன்னிடம் எவருமே நெருங்க முடியாது என்பது போல வாழ்ந்தாள் சுபா. அவள் தட்டிய தட்டுக்கு எல்லாக் கணினிகளும் அடங்கி நடந்தன. அவள் கைப்பட்ட எல்லா நிகழ்வு களும் அவளுக்கு வெற்றியாய் மாறின. பணமும் பகட்டும் அவளைத் தேடி வந்து, அவள் நடவடிக்கையை மிகைப் படுத்தின. அவளுடைய இயல்பை மாற்ற எவராலும் முடியவில்லை. கடவுள் என்பது கூட அவளுக்குக் கட்டுப்படும் கணினி போல ஆயிற்று.
புகழின் உச்சியிருந்தாள் சுபமங்களா. அரசின் பாராட்டுகளும் பரிசுகளும் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்துது வந்து குவிந்த வாழ்த்துகளும் பரிசுகளும் வாய்ப்புகளும் அவளை மேலும் மேலும் கர்வமடைய வைத்தன. அன்றும் அப்படித்தான். வெளிநாட்டிலிருந்து அவளுக்கு ஒரு வாய்ப்பு வந்திருந்தது. வீட்டிற்குத் திரும்பியவள், தன் அறைக்குள் சென்று அமர்ந்து அந்த வேலை வாய்ப்பைப் பற்றிய எல்லா விபரங்களையும் தேடித் தேடிச் சேகரித்தாள். ஒவ்வொன்றையும் தன்னுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த வாய்ப்பை மட்டும் தான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், உலகின் சிறந்த பெண்ணாக விளங்கும் வாய்ப்புக் கிடைக்கும் எனப் பூரித்துப் போனாள். வெகுநேரம் கணினி முன்பு அமர்ந்து விட்டதன் பலனாக கண்களும் மனமும், கணினியை இயக்கிய கரங்களும் ஓய்ந்துவிட கொஞ்சம் மாற்றம் தேவைப் பட்டது சுபமங்களாவுக்கு. வேறு திசை நோக்கிக் கணினியை இயக்கினாள். தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய பகுதி அது.
கணினியைத் தட்டி ஒவ்வொரு படமாகப் பார்த்து வந்தவளை, அசர வைத்தது புன்னகை தழுவிய, சுருக்கம் விழுந்த ஒரு பெண்ணின் ஒளிமுகம். ‘Peace to the World’ என்னும் வசனங்களுடன் அன்னை தெரசாவைப் பற்றிய பகுதி அது. மனதிற்குக் கொஞ்சம் லேசாக இருப்பதைப் போல உணர்ந்தவள், மெல்ல அவர்களின் வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.
சின்ன வயதிலேயே கடவுள் மேல் கொண்ட பக்தி, பெற்றோர் மேல் கொண்ட மதிப்பு, சேவை செய்யும் மனப்பான்மை, போர்க்களத்தில் இந்திய வீரர்கள் படும் துன்பம் கண்டு அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்கிற மனக்கிளர்ச்சி, அதற்கான முயற்சிகள், போராட்டங்கள், விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக இந்தியாவுக்குப் பயணப்படுதல், ஆசிரியராகப் பணி துவக்கம், கல்கத்தா தெருக்களில் வலம் வந்தது, உயிரோடு இருக்கும் மனிதர்களை எலிகளும் புழுக்களும் திண்ணும் கொடூரம், சாலையோரங்களிலும் சாக்கடைகளிலும் கவனிப்பார் இல்லாமல் மனிதர்கள்.
மனம் நொந்த அன்னை தெரசா தன் பணியைத் தொடங்க நடத்திய போராட்டங்கள், மோத்திஜில் என்னும் சேரிப்பகுதியைத் தேர்ந்தெடுத்தது, ஒரு துப்புரவுத் தொழிலாளியாக நீல கரைபோட்ட வெள்ளைச் சேலை உடுத்தி வெளியேறியது, சேவை மனப்பான்மை மிக்கவர்களைச் சேர்த்து, ‘நிர்மல் இருதயம்’ என்னும் அமைப்பை உருவாக்கியது, இறந்து கொண்டிருப்பவர்களை இன்முகத்துடன் உணவிட்டு, மருந்திட்டு, புண்களைத் தானே கழுவி சுத்தம் செய்தது, மருத்துவர்களைக் கொண்டு வைத்தியம் செய்தது, சாகும் வேளையில் நமக்கும் சகமனிதன் உண்டு என்கிற மனநிறைவுடன் அவர்களை நிம்மதிப்படுத்துவது, இது எப்படி சாத்தியம் என வினவுகையில் சேவை செய்யப்படும் ஒவ்வொருவரிலும் இறை இயேசுவைக் காண்பதாகக் கூறியது, எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் மனித சமுதாயத்திற்கு அவசியம் எது என்கிற கேள்விக்கு “ஜெபிக்கும் உதடுகளைவிட உதவும் கரங்களே” எனப் பதிலளித்தது.
ஏதோ பாதிப்புடன் கண்ணீருடனும் வெளிறிய முகத்துடனும் வெளிவந்தவள், பெற்றோரைத் தேடிச்சென்று வீழ்ந்து வணங்கினாள். இறை இயேசு முன் மண்டியிட்டுக் கர்வமெல்லாம் கரையுமட்டும் கண்ணீர் சிந்தினாள். மரியாள் முன் சுபமங்களமாய்த் தன்னை அர்ப்பணித்தாள். ஒரு குரல் அவள் இதயத்திலிருந்து அவளை இறைவன் சேவைக்கு அழைத்ததை உணர்ந்தாள். தன் பெண்மை, மென்மை, தாய்மை உயிர் பெற்றதை உணர்ந்தாள். தான் படைக்கப்பட்டது ஆண்டவன் சேவை செய்ய என உணர்ந்தவள், எளிய உடைக்கும், மென்நடைக்கும், சேவை புரியும் கரங்களுக்கும் தயாரானாள். அழைத்தது யாரோ நீதானா தேவா எனத் தன்னையே ஆண்டவனிடம் அர்ப்பணித்தாள் சுபா என்கிற சுபமங்களா.
சாந்தி ராபர்ட்ஸ், உதகை
0 comments:
Post a Comment