இவ்விதழ் உங்கள் கையில் கிடைக்குமுன் அகில உலக பெண்கள் தினம் (மார்ச் 8) நிறைவுற்றிருக்கும். ஆயினும் பெண்கள் தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி. ஆண் பாதி பெண் பாதி என்று படைக்கப்பட்ட இவ்வுலகில், அடிமைப்பட்ட நிலையிலிருந்த ஒரு பாதி மீண்டும் உரிமையும் உயர்வும், வாழ்வும் வலிமையும் பெற்றிட வாழ்த்துகிறோம். யார் அவர்களை வாழ விடாமல் தடுப்பது? ஆணா? பெண்ணா? சமூகக் கோட்பாடுகளா? பழக்க வழக்கங்களா? இது பற்றிப் பல ஆய்வுகள், சிந்தனைப் பகிர்வுகள் இருப்பினும், “அவர்களின் ஈடுபாடும் சமநிலையில் இருந்தால்தான் குடும்பமும், சமூகமும் வளரும்” என்கிற சிந்தனை மட்டும் இன்று மேலோங்கி இருப்பது போற்றுதற் குரியதே.
ஆணுக்குப் பெண்ணை துணையாகப் படைத்தார் என்கிற மதங்கள்கூட பெண்ணின் மகிமையைப் போற்ற மறந்து விட்ட நிலையில், இன்று அவர்களும் படைத்தவரின் உரு கொண்டு உரிமையில் வாழ வழி வகுக்கிறது என்பது முன்னேற்றமே. இதில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது விருப்பம்.
ஆண், பெண் துறவிகள் என இருபாலருக்கும் உள்ள பணி முறைகளில் ஒருவரையயாருவர் உற்சாகப்படுத்துவது விரும்பத்தக்கது. பெண்களின் முன்னேற்றம், வாழ்வு இழந்தோருக்கு புது வாழ்வு தருவது என்கிற நோக்குடன் பல பெண் துறவற சபைகள் தோற்றுவிக்கப்பட்டன என்பது வரலாறு. இச்செயல்பாடுகள் இன்றும் வலுப்பெற வேண்டிய காலக் கட்டத்திற்குள் இருக்கிறோம். பெண்மையின் புனிதத்தை விகாரப்படுத்துகிற சமூகச் சூழ்நிலைகள், திறமைகள் இருந்தும் அதனை வளர்க்க வழி தெரியாத பிள்ளைகள், பெண்ணே, பெண்ணை எதிராழியாய் பார்க்கும் குடும்பச் சூழல்கள் என்று பல விவகாரங்களை இனம் கண்டு அவர்களுக்காய் உழைக்கும் பெருமனம் இன்று தேவைப் படுகிறது. எல்லோருமே இவர் களுக்காக உழைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பினும் பெண்கள்தான் இப்பெண்களின் தேவைகளை முன்னெடுக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.
இந்த வாய்ப்பைச் செயல் வடிவமாக்க வெறும் வார்த்தைகள் அல்ல; முழு ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு, எடுத்துக்காட்டான செயல்பாடு தேவைப்படுகிறது. இணைந்து உழைக்கும் நபர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், இன்று துறவறம் சந்திக்கும் சவால்களில் ஒன்று ஆள் பற்றாக் குறை. அதிலும் இன்று பெண் துறவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை அல்லது குறைந்து வருகிறது. மேலை நாடுகளில் இந்தக் கூற்று 100%. உண்மையாயினும் நமது நாட்டிலும் இந்த நிலையை இப்போது சந்திக்கிறோம். ஏன் துறவியாக இருந்துதான் இம் முன்னேற்றக் காரியத்தைச் செய்ய வேண்டுமா? என்ற அடிப்படைக் கேள்வி பிள்ளைகளின் மனதில் பதிந்து விடுகிற ஒன்று.
துறவு வாழ்வின் தனித்துவத்தைக் காட்ட மறந்து விட்டோமா? அல்லது மேன்மையான செயல் பாடுகளுக்கான ஈடுபாட்டைப் பிறர் காணவில்லையா?
நமக்குள் உள்ள தனித்துவமும். பணியின் மேன்மையும், வாழ்வினால் வருகிற எடுத்துக் காட்டும் இல்லாதவரை நம்மோடு இணைந்து செயல்படும் நபர்களை ஈர்ப்பது கடினமான ஒன்று. மகளிர் தினம் கொண்டாடு கிறோம் என்பது மட்டும் மகிழ்ச்சி யல்ல. நல்ல மகளிரை இனம் கண்டு இணைந்து செயலாற்ற வாழ்வில் அழைக்கிறோம் என்பதுமே சிறப்பாகும். பெண்மையின் மேன்மை போற்ற ஒன்றுகூடுவோம்.
குறிப்பு :
நமது பணிக்குழுவின் செயல் பாடுகளைப் பகிர்ந்து கொள்வதற்காக நாம் ஏற்படுத்தியுள்ள இணைய தளத்தை பயன்படுத்திக் கொள்வோம். எல்லோரும்
பகிர்ந்து கொள்ள வேண்டிய நிகழ்வுகளை எமக்கு எழுதுங்கள்.
பணி. செ. சகாய ஜான்