டியர் குட்டீஸ்
காலம், நேரம் என்று நமக்குச் சொல்லிச் சொல்லி வெறுப்பு ஏற்பட்டிருக்கும்.  ஆனால், அது நாம் பெற்றிராது பெற்றிருக்கும் வரம்.  இந்தக் கால நேரத்தைப் பணம், பொருள் கொடுத்து வாங்க முடியாது.  சேமிக்கவோ, அடக்கிவைக்கவோ முடியாது.  இந்தக் காலத்தையும் நேரத்தையும்  உணர்ந்து அதனைக் கணக்கிட்டு புத்திசாலித்தனத்துடன் நாம் வாழ்ந்தால் கிடைப்பது வெற்றிதான்.  தோல்விக்கே வாய்ப்பில்லை.  இந்த அருமை நேரத்தை வீணடிப்பது, சரியாகப் பயன்படுத்தாமல் சோம்பித் திரிவது, நேரத்தைப் புறக்கணிப்பது இவையயல்லாம் நாம் இன்று இவ்வுலகில் பார்க்கின்றோம்.
நம்மைக் கடந்து போன நேரம் காலம் மீண்டும் திரும்புவது கிடையாது.  ஏனெனில் காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருப்ப தில்லை.  ஆனால் நாம் வீண் சண்டை, உதவாத விவாதம், வெட்டிப்பேச்சு, கேலி கிண்டல், உபயோகமில்லாத வெட்டி விளையாட்டுக்கள், போலிப்பொழுது போக்குகள், தொலைக்காட்சி, சினிமா என மாயையில் சிக்கி நேரத்தை மணிக்கணக்கில் விரயம் செய்திருப்பது நமக்கு நாம் ஏற்படுத்திக்கொள்ளும் அழிவு.  பொதுவாக மனிதன் தன் வாழ்வை ஆராய்ந்து பார்க்கும் போது அறிஞர்கள் இப்படி சொல்கிறார்கள்.  70 ஆண்டுகள் சராசரியாக வாழும் மனிதன்
1. தூக்கம் - 28 வருடங்கள்
2. பொழுதுபோக்கு, விளையாட்டு : விடுமுறைகள் - 10 வருடங்கள்
3. ஓய்வு, சுகமின்மை - 6 வருடங்கள்
4. படிப்பு - 10 வருடங்கள்
5. பயணம் - 5 வருடங்கள்
6. உண்ணும் நேரம் -4 வருடங்கள்
7. தன்னைத் தயார் செய்ய எடுக்கும்
   நேரம் - 3 வருடங்கள்
8. மனிதனுக்குள் மீதி நேரம் - 6 வருடங்கள் செலவழிக்கிறான்
வெறும் 6 ஆண்டுகள்தான் வாழ்கிறானாம்.  இதையாவது சிறப்புச் செய்ய வேண்டாமா?  நமக்குக் கிடைத்திருக்கும் வாழ்வு குறுகியது, புனிதமானது, அரி தானது, அருமையானது அதன் அருமையை உணருவோமா?
இவர்களைக் கேட்டுப்பாருங்களேன்
1. ஒரு வருடத்தின் அருமையை உணர பள்ளி இறுதித் தேர்வில் தோல்வியுற்ற மாணவரிடம் . . .
2. ஒரு மாதத்தின் அருமையை உணர குழந்தையைப் பெற்ற தாயிடம் . . .
3. ஒரு வாரத்தின் அருமையை உணர ஒரு வாரப் பத்திரிக்கையின் ஆசிரியரிடம் . . .
4. ஒரு நாளின் அருமையை உணர ஒரு தினக்கூலியிடம் . . .
5. ஒரு மணி நேரத்தின் அருமையை உணர காத்திருக்கும் காதலன்/காதலியிடம் . . .
6. ஒரு நிமிடத்தின் அருமையை உணர ரயில்/பேருந்தைத் தவற விட்ட பயணியிடம் . . .
7. ஒரு நொடியின் அருமையை உணர விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய ஒருவரின் உயிரிடம் . . .
8. கால் நொடியின் அருமையை உணர ஓட்டப்பந்தயத்தில் தங்கக் கோப்பையைத் தவற விட்டு வெள்ளிக் கோப்பையைப் பெற்ற  வீரனிடம் . . .
“காலமும் நேரமும் உன்னுடையதே . . .
எதிர் கொள் . . . ஏற்றம் பெறு”
பணி. ராக்ஸி, K.G. கண்டிகை

0 comments:

Post a Comment