சாத்தானை மிதிப்போம்


கடவுளைப் போல் ‘நான்’
அகம்பாவம் கொண்டவன்
தான் இழந்த சொர்க்கம்
தனக்குக் கீழ் மனிதன்
அடைய ஒவ்வானோ?
துன்மார்க்கன் முதல் பெண் ஏவாளை
வஞ்சித்து தீமையை இரத்தத்தில்
கலந்தான்
அன்று முதல் பொறாமை
கொலை கீழ்ப்படியாமை
இன்னபிற அரங்கேறின
மனித வரலாற்றில்
உலகம் சாத்தானின் பிடியில்
முழுவதும் உள்ளது
மானுடர் மீது கொண்ட
தணியா தாகத்தால் தம்
ஒரே பேறான அன்பு மகனைப்
பரிகாரப் பலியாக்கினார்
அன்பு தந்தை
ஒவ்வோர் ஆன்மாவும் மீட்கப்படுவது
இறைச்சித்தம்.
‘நிலையற்ற அற்ப இன்பத்தைத் தேடி
ஆன்மாவை இழப்பது பெரும்பாவம்’
ஜெப ஆவியை எழுப்பிக்
கதறி மன்றாடும்போது
கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்
மனிதன் மனிதனுக்கு எதிரியல்ல
மனிதர் அனைவர்க்கும்
பொது எதிரி அலகையே!
‘நம் அழிவு’ அவன் உயிரில்
கலந்ததாலேயே!
‘அவனை’ மிதிப்போம் முறியடிப்போம்
ஒன்றுசேர்வோம் போராடுவோம்
சாத்தானை வெல்ல ஆவியின்
வரம் வேண்டி நாளும் வேண்டுவோம்
ஆயிரம் கால இறையாட்சியைச்
சொந்தமாக்குவோம்
இறுதி நாளில் அக்கினித் தீர்ப்பினின்று
தப்புவோம்
புதிய வானம் புதிய பூமி
காண்போம்
புனிதராய் மூவொரு கடவுளை
தினம் துதிப்போம்
நித்திய பேரின்பம் சுவைப்போம்
முகம் முகமாய் இறைவனைக்
காணும் பேறு பெறுவோம்!

ச. செல்வராஜ், 
விழுப்புரம்

இன்று பீடச்சிறுவர்! நாளை?


இன்று பீடச் சிறுவர் - நாளை
திருப்பலி செலுத்தும் குருக்கள்
நன்கு செயல்(ப) டுத்தின் - பல
நன்மை வந்து விளையுமே
இளைஞர் இயல்பு ஊக்கம் - நன்கு
திறம்படச் செய்தால் பின்பு
விளைவு நம்மால் காண - முடியும்
சிந்தனை செய்யின் வெற்றி!
ஆர்வம் உள்ள இளைஞர் - கண்டால்
ஆக்கம் ஊக்கம் கொடுத்து
நேர்மை வழியில் வளர்த்தால் - பல
நேர்த்தி யான குருக்கள்
தீர்க்க மாக வருவர் - உண்மைத்
திறமை நன்கு வெளிப்படும்
பார்த்து மகிழ்வு கொள்வோம் - நல்ல
பலனை அறுவடை செய்வோம்
பீடச் சிறுவர் உள்ளத்திலே - நல்ல
வீரியம் பிறக்கும் சிந்திப்பீர்
மாட லாக நாமிருந்தால் - தானே
மனத்தில் நன்கு பதியும்
நாளைய உலகம் இளைஞர் - கையில்
நன்றாய்ப் பேணி ஊக்குவோம்
காளைகள் போல வளர்த்து - அவரின்
கவினை மலரச் செய்வோம்.

(கவிஞர் பெஸ்கிதாசன்)

குப்பை கொட்ட வந்த கோமகன்




இந்தப் பகிர்வு அரசாங்கத்தின் குப்பை மேலாண்மைக் கோட்பாட்டில் (அறிவிப்பில்) வரும் மக்கும் குப்பை, மக்கா குப்பையை எங்கு, எப்படி கொட்டுவது என்பது பற்றியது அல்ல.

ஓர் அனுபவமுள்ள இறைப்பணியாளரிடம் ஒரு குறிப்பிட்ட ஊரைப் பற்றிப் பேசும்போது அவர், “நானும் அங்கே ஐந்து ஆண்டுகள் குப்பை கொட்டியிருக்கிறேன்; அந்த ஊரைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும்” என்கிறார்.

குப்பை கொட்ட வந்த கோமகன்
அப்படியயன்றால், “ஆண்டவரின் ஆவி என் மேல் உளது; ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்...” என்ற எசாயாவின் இறைவாக்கைத் தன் விருதுவாக்காய் முழங்கி, முப்பத்து மூன்று ஆண்டுகள், அதில் மூன்று ஆண்டுகள் சுற்றும் சூரியனாய், வற்றாத நதியாய், பார்த்தோர் மீது பரிவு கொண்டு பணியாற்றினாரே, அவரென்ன குப்பை கொட்ட வந்த கோமகனா?

அழைக்கப் பெற்றோர் குப்பை கொட்ட வந்த குப்பைத் தொட்டிகளும் அல்ல; குப்பை எண்ணங்களை உள்வாங்கி துர்நாற்றம் வீசும் குப்பைத் தொட்டிகளும் அல்லர். (“தூயதோர் உள்ளத்தை இறைவா என்னகத்தே உருவாக்கும்”) பல்வகை குப்பைகளை அகற்றி, பரிசுத்தமாக்க வந்த குப்பைப் பொறுக்கிகள். 
கேட்ட கதை

குட்டித் தீவு ஒன்றில் பெரியவர் ஒருவர் தனியாளாய் நீண்ட நாட்களாக வாழ்ந்து வருகிறார். கடல்சார் விபத்துகள், ஆபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. மனித நேயத்தோடு மக்களைக் காப்பாற்றி கரைசேர்த்து வருகிறார். காலம் கடக்கிறது. அவரும் காலமாகிப் போகிறார். கப்பல் ஒன்று விபத்தில் சிக்குகிறது. ஆனால் காப்பாற்ற யாரும் வரவில்லை. தப்பிப் பிழைத்தோரில் சிலர் கரை சேர்ந்தனர். அம்மனிதரை நினைத்து அவர் பெயரால் தாங்களே அவர் பணியை ஆர்வத்தோடு தொடர்ந்தனர். இஃது ஓர் உயிர் காக்கும் பணியாக, பிணி போக்கும் பணியாக இருந்ததால் பலரும் சேர்ந்துகொள்கின்றனர். காலப்போக்கில் பணிச்சுமை இல்லாததால், பொழுதுபோக்கு அம்சங்களையும், வருவாய் வழிமுறைகளையும் தேடிக்கொள்கின்றனர். அதிக ஆட்களையும் அமர்த்திக்கொள்கிறார்கள். பிற்காலத்தில் பல குழுக்களாக இணைந்தும் பிரிந்தும் செயல்பட்டுத் தங்கள் சுயநல நோக்கத்தை நிறைவேற்ற ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கவும், தொல்லை கொடுக்கவும் தொடங்குகிறார்கள். ஆக மொத்தம் வந்த வேலையை விட்டு சொந்த வேலையைப் பார்க்கத் தொடங்குகிறார்கள்.

இந்தக் கதையின் நாயகன் ஒரு வயதான பெரியவர். இறையாட்சிப் பணியில் ஈடுபட அழைக்கப்பெற்றோர் என்று சொல்லிக்கொண்டு, கடவுள் பெயரால் காலத்தைக் கடத்தும் என் போன்றோரின் வாழ்க்கைக் கதையின் நாயகன், இயேசு என்னும் அந்த எரியும் நெருப்புப் பந்தம், தீமையயனும் குப்பைகளைப் பொசுக்கி, பாவ இருள் சூழ்ந்தோர் மனத்தில் ஒளிக்கீற்றாய் உதித்த உயிரோட்டமுள்ள இளைஞன்.

இந்தக் கதை யாருக்குப் புரிகிறதோ இல்லையோ, இறையழைத்தல் பெற்ற எல்லோருக்கும் புரியும் என நம்புகிறேன்.

அன்றும் இன்றும்
நான் பத்து ஆண்டுகளுக்கு முன் சொல்வேன், “உயிரைக் கொடுத்த என் இறைவனுக்கு என் உயிரைக் கொடுத்து ஊழியம் செய்வேன்” என்று. இன்று அந்தத் தாகமும் வேகமும் என்னிடம் இருப்பதாகத் தெரியவில்லை.அன்று கடவுளே கதி என்று ஆழ்ந்த ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும், அதற்காக ஒறுத்தலும் தியாகமும் செய்ய வேண்டும் என்று எப்போதும் எண்ணியதுண்டு. இப்போது எப்போதாவது இவ்வெண்ணம் வந்துபோகிறது. ஒறுத்தல் முயற்சியும், உயிரோட்டமுள்ள விசுவாசமும் என் வாழ்வில் உணவு போல் இல்லாமல், ஊறுகாய் போல் உள்ளன.

அருட்பணிக்காக அயல்நாட்டில் படிக்கச் சென்ற ஒருவர், ஒரே ஆண்டில் நம் தாய்நாட்டில் வந்து படிக்கத் தொடங்கினார். பல காரணங்களில் ஒரு காரணம்: ஒட்டுத் துணிகூட இல்லாமல் வறுமையே உருவாக தொங்குகிறவரைப் பின்பற்ற செய்யப்படும் பகட்டு ஆர்ப்பாட்டங்கள் தன் அழைத்தல் வாழ்வுக்குப் பொருந்தாத அருவருப்பான காரியமாகக் கருதியதுதான்.

எளிமையும் இறையாட்சிப் பணியும் பிரிக்க முடியாக் கலவை என்பதை அறிந்து மட்டும் வைத்திருக்கிறேன் அழுத்தமாக பின்பற்றாமல்.

இறைவன் பெயரால் அழைக்கப்பட்டோர் அனைவருக்கும் மணியடித்தால் சாப்பாடு..., அவர்களில் யாரும் வயிறு வாடி செத்ததாக சரித்திரம் இல்லை என்பது நம்மைப் பற்றி அடிக்கடி பேசப்படுகிற ஒன்று. இருப்பினும் கூலிக்கு மாரடிப்போர் கூட்டம் போல்தான் ஊக்கமில்லாமல் உள்ளது என் பணி சில சமயங்களில்.

பயிற்சிக் காலம் முடிந்துவிட்டால் பணி நிறை வந்துவிட்டது போல் ஒரு மெதப்பு.   அழைக்கப்பெற்றோருக்கு இறுதி வரை பயிற்சிதான், வளர்ச்சி தான். என் பேராசிரியர் சொல்வார் : “We are called to live with unfulfilled desires” - நாம் நிறைவேறாத ஆசைகளோடு வாழ்வதற்காக அழைக்கப்பெற்றிருக்கிறோம்.

நமது தலைவர் இயேசு சொல்வது போல்,  “உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராக / உங்கள் விண்ணகத் தந்தை தூயவராக இருப்பதைப் போல நீங்களும் நிறைவுள்ளவர்களாக, தூயவராக இருங்கள்.” அப்படியானால் நாம் முழுமையான நிறைவை நோக்கி, தூய்மையை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருக்கிறோம்.

இந்தப் பயிற்சியிலே, பயணத்திலே நாம் காட்டும் ஈடுபாடு பலரை இறைவன்பால் ஈர்க்கக்கூடியதாக அமைந்து, இறைவனைத் தேடும் நெஞ்சங்கள் அதிகரிக்கட்டும். 

நம் தலைவரைப் பின்பற்றிய பல புனிதர்களும், அழைத்தல் வாழ்வை முழுமையாய் வாழும் நல்மனிதர்களின் வாழ்வும் நம் வாழ்வுக்குத் துணை நிற்கட்டும்! இறைவன் அவர் பாதையில் நம்மை வழிநடத்தட்டும். அழைத்தல் வாழ்வை ஆரோக்கியமாக வாழ வாழ்த்தி இறைவனை வேண்டி முடிக்காமல் முடிக்கிறேன் எனது பகிர்வை.

இறையாட்சிப் பணியில்,
பணியாள் மைக்கேல் 
முதியனூர், ஈரோடு

தேவ அழைத்தல்-குருக்கள் / துறவிகளின் பங்கு



(கடந்த 27.11.2010 அன்று நடைபெற்ற மாநில தேவ அழைத்தல் பணிக் குழுவின் பொதுக்குழுக் கூட்டத்தில் அழைத்தல் பெருகிட குருக்கள் / துறவிகளின் பங்கு குறித்து பகிர்ந்து கொண்ட ஒரு குடும்பத் தலைவரின் கருத்து - தொடர்ச்சி).

1. முன்மாதிரி முகங்கள்
பெற்றோர்களாகிய எங்களால் ஒரு நல்ல பெற்றோராக இருக்க மட்டுமே மாதிரி காட்ட முடியும், எங்கள் குழந்தைகள் நல்ல குருவாகவோ துறவியாகவோ மாறிட வேண்டுமாயின் அவர்களுக்குச் சரியான முன்மாதிரிகளைக் காட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் குருக்கள், துறவிகளாகிய உங்களிடமே இருக்கிறது.  அது அதிகரிக்கப்பட வேண்டும்.  Our children don’t need priests and professors but they need only Pastors.  They don’t need administrators, managers, superiors etc. but they need only religious and humanists. இன்றைய இளைஞர்களின் இத்தகைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் சூழல்கள் அதிகமாகும் போது தேவ அழைத்தலும் பெருகும்.  இத்தகைய சூழல்கள் குறைய குறைய தேவ அழைத்தலும் குறைகிறது அல்லது தேய்கிறது.

2. நல்லவைகளை பதிவு செய்க
பொதுவாகவே தீயவை வேக மாகவும் நல்லவை மிக மெதுவாகவும் நகரும் என்பது நாமறிந்ததே.  அதிலும் இந்த தகவல் தொழில் நுட்பக் காலத்தில் இது அதிகமாகவே உள்ளது.  அதனால் தான் நமது குருக்களும் துறவிகளும் ஆங்காங்கே செய்திடும் எவ்வளவோ நல்ல பல செயல்கள் வெளியே தெரியாமல் ஆங்காங்கே நடக்கும் போன்ற சில செயல்பாடுகள் (திருச்சி நிகழ்வு)  ஊடகங்களால் பரபரப்பாக்கப் பட்டு மக்களின் மனங்களை உலுக்கிப் போடுகின்றன.  இதற்குக் காரணம் என்ன வென்றால் ஆங்காங்கே நம் குருக்கள், துறவிகள் சபை அளவில், தனி நபர் அளவில் புரிந்திடும் நல்ல பல பணிகள் பதிவு செய்யப்படாமல் இருப்பதே.

உதாரணமாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வத்தலக் குண்டுப் பகுதியில் வருடந்தோறும் ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி கல்வி தந்து வாழ்வளித்து வரும் தெலசால் சபை சகோதரர் ஜேம்ஸ் கிம்ஸ்டன் (86) அவர்களின் பணியை நம்மில் பலரே அறியாத போது மற்றவர்கள், குறிப்பாக நமது அடுத்த தலைமுறையினர் எப்படி அறிய முடியும்?

எனவே இவைபோன்ற அரும் பணிகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை அப்படியே பதிவு செய்து நம் குழந்தைகளும் அறியும் வண்ணம் எடுத்துச் செல்லப்பட முயற்சிகள் வேண்டும்.  அதற்கு நமது தமிழக கலைத் தொடர்பு பணிக் குழுவும் தேவ அழைத்தல் பணிக்குழுவும் இணைந்து முன்முயற்சிகளைத் தொடங்கிடலாம்.  இதனால் இன்றைய குழந்தைகள் உந்தப்பட்டு தாமும் அவ்வித பணிகளில் ஈடுபட ஆர்வமாய் முன்வர வாய்ப்புண்டு.

3. வீடு சந்திப்பு
எத்தகைய நிறுவனங்களில் எவ்வித உயர் பதவியில் இருக்கும் குருக்களும் துறவிகளும் தம் அழைப்பை அர்த்தப்படுத்தும் வகையில் அவர்தம் நிலையிலிருந்து இறங்கி, நிறுவன வேலையிலிருந்து விலகி வாரந்தோறும் ஒரு நாள் மக்களின் இல்லங்களைச் சந்தித்து நற்செய்தியை அறிவித்து அம்மக்களின் உள்ளங்களில் குடியிருக்க முயன்றிட வேண்டும்.  இத்தகைய வீடு சந்திப்பு நிகழ்வுகள், உரையாடல்கள் மூலம் அதிகமான குழந்தைகள் ஆர்வமாய் இறைப்பணி ஆற்றிட முன்வரச் செய்திடலாம்.  இப்பணி தேவ அழைத்தல் ஊக்குநர் போன்ற ஏதோ ஒரு சில நபர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பது போல் அல்லாமல் ஒவ்வொரு குருவும் துறவியும் இதுவே தமது உண்மையான, உருப்படியான பணி என்பதை உணர்ந்து தாகத்தோடு ஈடுபட்டால் தேவ அழைத்தலைத் தேடிப் போகவேண்டிய தேவையில்லை.  மாறாக அது தானாக தழைத்து, தரமானதாக வளர்ந்து இப்படி செயல்படும் சபைகளை நோக்கி நேர்த்தியாய் வந்து சேரும்.  

4. தல குழு வாழ்வு
எந்தவொரு குரு/துறவற இல்லமும் மக்களை விட்டு விலகி தனித்து இருக்க அனுமதிக்கக் கூடாது.  மாறாக ஒரு பங்கில் / ஊரில் இருக்கும் குரு/துறவற இல்லமானது அங்கிருக்கும் பாமர மக்களுக்கானது என்கிற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அதன் நிர்வாக மற்றும் செயல்முறைகளில் மாற்றம் கொணர வேண்டும்.

ஒரு துறவற / குருத்துவ சபையின் உறுப்பினர்கள் மூன்று அல்லது நான்கு பேர் ஒரு ஊரில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, இல்லம் அமைத்து தங்கி அந்நிறுவனத்தை நடத்துவது என்பது குழு வாழ்வாக (Community Life) இருக்க முடியாது. மாறாக அந்த ஊரில் / தலத்தில் இருக்கும் அந்தத் தல மக்களின் பங்களிப்போடு அத்தல மக்களுக்கான பணிகளை அடையாளம் கண்டு 3 அல்லது 5 ஆண்டு திட்டம் வகுத்து தல மக்களோடு இணைந்த திட்டம், செயல்பாடு மற்றும் திறனாய்வு என ஒவ்வொரு கட்டத்திலும் அம்மக்களை ஈடுபடுத்தி ஒளிவு மறைவற்ற  திறந்த மனதோடு செயல்படுத்துவதே அப்பகுதி மக்களுக்கான “கம்யூனிட்டி லைஃப்” என்கிற பதத்திற்கு உண்மை யான அர்த்தமாய் அமைந்திட முடியும்.

இப்படி செய்திடும்போது நம்மோடு கூட இருந்து நம் அசைவுகள் ஒவ்வொன்றையும் உள்வாங்கும் அத்தல மக்களில் எத்தனையோ பேர் நம்மைப் போல தேவ அழைத்தல் வாழ்வை முதன்மையாக்கி மூர்ச்சையாகும் அளவிற்கு உழைக்க முன்வருவர். எனவே இதனைச் சபைகளும் அதன் தலைவர்களும் கவனத்தில் கொண்டு செயல்பட்டு தேவ அழைத்தல் பெருக வழி செய்யலாம்.   

5. எளிமை, ஏழ்மை
தங்களின் சொல், செயல், சிந்தனை என எந்தச் சூழ்நிலையிலும் எளிமையை, ஏழ்மையை எல்லா மட்டத்திலும் (Top to Bottom) குரு / துறவிகள் அதிகரிக்க வேண்டும்.  படாடோபம் துறந்து பகட்டு மறையும் போது அதுவே பாமரர்களும் பரமனும் எளிதாக வந்து போகும் இடமாக மாறும்.

6. தரம் தேவை
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு எண்ணிக்கையை (Quantity) பெருக்குவதில் கவனம் செலுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி விட்டு ஏற்கனவே துறவற / குருத்துவ சபைகளில் மற்றும் இல்லங்களில் உள்ளவர்களின் தரத்தை (Quality) பெருக்குவதில் கவனம் செலுத்தி மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்திட வேண்டும்.  இது இன்றைய காலத்தின் கட்டாயம்.  இதன் மூலம்தான் மக்கள் மத்தியில் உள்ள தவறான எண்ணங்கள் உடைபட்டு தேவ அழைத்தல் மேல் ஒரு புதிய நம்பிக்கை ஏற்படுத்தமுடியும்.  இது எண்ணிக்கை பெருக்கம் என்பது உறுப்பினர்களைப் பெருக்குவதில் மட்டும் அல்ல நிறுவனங்களை / இல்லங்களைப் பெருக்குவது போன்ற எல்லா மட்டத்திலும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

7. முகாம்கள் 
ஒவ்வொரு சபையும் தனித்தனியே செலவு செய்து நடத்தும் தேவ அழைத்தல் முகாம்களுக்குப் பதிலாக கத்தோலிக்க மாணவர்கள் அனைவரும் பங்கு பெறும் வகையில் அவர்களின் வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிய வைக்கும் முகாமாக பெயர் மாற்றத்துடன் நடத்தப்பட வேண்டும்.  இது ஒரு பங்கில் உள்ள அனைத்து இளைஞர்களும் பங்கு பெறும் வகையில் சபைகளால் திட்டமிட்டுத் தெரிவு செய்யப் பட்டு எல்லா இடங்களிலும் நடத்தப்பட வேண்டும்.  இதன் மூலம் கத்தோலிக்க இளைஞர்களாக வாழும் அழைப்பைப் பெற அனைவரும் தூண்டப்படுவர்.  அவர்களில் சிலர் முழு நேர அழைப்பு வாழ்வையும் ஏற்க வாய்ப்புப் பெறுவர்.  

8. கள அனுபவம்
குருக்கள் மற்றும் துறவிகள் வாழ்க்கை முறையை அவர் தம் இல்லங்களில் ஒரு குறிப்பிட்ட கால அளவிறகுத் தங்கி இளைஞர்கள் அனுபவித்து பார்த்து (Exposure) முடிவு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும்.  

எஸ். எரோணிமுஸ்,  
“ஊற்றுக்கண்” ஆசிரியர், திருச்சி